மடகாஸ்கரில் ஒரு மரத்தை ‘காட்டின் தாய்’ என்று அழைக்கிறார்கள்.
பார்ப்பதற்கு வானத்தை நோக்கி வேர் விட்டிருப்பது போலவும், மிகப்பெரிய தண்டு கொண்டதாகவும் இருக்கும் இந்த மரம், உண்மையில் அந்தத் தீவின் இயற்கை வரலாற்றில் முக்கியமான ஓர் உயிரினம்.
இதுதான் கிராண்டிடியரின் பாவோபாப் (grandidiers baobab). பாவோபாப் மரங்கள் பொதுவாக ‘தலைகீழ் மரங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
இதன் அறிவியல் பெயர் அடான்சோனியா கிராண்டிடியரி. மடகாஸ்கரில் மட்டும் காணப்படும் ஆறு பாவோபாப் இனங்களில் இதுவும் ஒன்று.
அங்கு இதை ரெனாலா அல்லது ரெனியாலா என்று அழைக்கிறார்கள். மலாகாசி மொழியில் இதற்கு ‘காட்டின் தாய்’ என்று பொருள்.
இந்த மரம் மடகாஸ்கரின் மேற்குப் பகுதியில் உள்ள வறண்ட காடுகளில், குறிப்பாக நீர்நிலைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வளர்கிறது.
இந்த மரத்தின் தண்டு தான் அதன் மிகப்பெரிய சிறப்பு. இது சுமார் 30 மீட்டர் உயரமும், 3 மீட்டர் வரை விட்டமும் அடையக்கூடும்.
அதன் மென்மையான சாம்பல் கலந்த சிவப்பு நிறப் பட்டையும், மேலே மட்டும் விரிந்து காணப்படும் கிளைகளும் சேர்ந்து, இதற்கு வேறு எந்த மரத்தையும் போல இல்லாத தோற்றத்தைத் தருகின்றன.
வறண்ட காலங்களைச் சமாளிப்பதற்காக அதன் தடிமனான தண்டில் தண்ணீரைச் சேமித்து வைக்கும் திறனும் இதற்கு இருக்கிறது.
ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் இதன் கிளைகளில் பெரிய வெள்ளை நிறப் பூக்கள் மலர்கின்றன.
பொதுவாக மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் தோன்றும் இந்தப் பூக்கள் அதிக நேரம் நீடிப்பதில்லை.
அவை அதிக அளவு பூந்தேனை உருவாக்குவதோடு, சற்று விரும்பத்தகாத வாசனையையும் வெளியிடுகின்றன.
இந்தப் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பழந்தின்னும் வவ்வால்களும், சில வகை லெமூர்களும் உதவுகின்றன.
பூக்கள் காய்ந்து முடிந்த பிறகு, பெரிய உருண்டை முதல் முட்டை வடிவிலான பழங்கள் உருவாகின்றன. அவற்றுக்குள் சிறுநீரக வடிவிலான விதைகள் இருக்கும்.
இந்தப் பழங்களை மடகாஸ்கரில் வாழும் மக்கள் உணவாகப் பயன்படுத்துகிறார்கள்.
விதைகளிலிருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதோடு, மரத்தின் பட்டை மற்றும் மரத்திலிருந்து கிடைக்கும் நார்களைக் கைவினைப் பொருட்கள் செய்வதற்கும், கூரைகள் வேய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த மரங்கள் வெறும் இயற்கை அழகு மட்டும் இல்லை. மடகாஸ்கரின் புகழ்பெற்ற பாவோபாப் மரங்களின் வழித்தடப் பகுதியில் காணப்படும் கிராண்டிடியரின் பாவோபாப்கள், ஒருகாலத்தில் அந்தப் பகுதியில் பரவியிருந்த வறண்ட காடுகளின் எஞ்சிய நினைவுச் சின்னங்களாகப் பார்க்கப்படுகின்றன.
சுற்றியிருந்த காடுகள் விவசாய நிலங்களாக மாறியபோது, இந்தப் பெரிய மரங்களில் பல அங்கே தொடர்ந்து நின்றன.
இந்த மரம் இன்று நமக்கு ஒரு வித்தியாசமான மரமாகத் தெரிந்தாலும்,
அதன் பின்னால் இருக்கும் பரிணாம வரலாறு அதைவிட ஆச்சரியமானது. 2024-ல் வெளியான ஒரு பெரிய மரபணுசார் ஆய்வில், உலகில் தற்போது வாழும் எட்டு பாவோபாப் இனங்களின் மரபணுக்களும் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், தற்போதைய பாவோபாப் இனங்களின் பரிணாம வரலாற்றைப் பார்க்கும்போது, மடகாஸ்கர் அவற்றின் தோற்றத்திற்கான மிகவும் சாத்தியமான மையமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முன்மொழிந்தனர்.
மேலும், பாவோபாப் மரங்களின் பரிணாமப் பாதையின் தொடக்ககாலப் பகுதி சுமார் 4 கோடியே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்றும் ஆய்வு மதிப்பிட்டது.
இவ்வளவு பிரம்மாண்டமாகவும் வலிமையாகவும் தோன்றும் இந்த மரத்துக்கும் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது.
கிராண்டிடியரின் பாவோபாப் தற்போது அழியும் அபாயத்தில் உள்ள இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வாழிட அழிவு, விவசாயத்திற்காக நிலம் மாற்றப்படுதல் உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் இதன் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழக்கூடியதாக அறியப்படும் இந்தப் பாவோபாப்களின் கதைகள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும், அவற்றின் எதிர்காலம் மனிதர்களின் செயல்களையும் சார்ந்திருக்கிறது.
இன்று மடகாஸ்கரின் வறண்ட நிலப்பரப்பில் தனியாக நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு கிராண்டிடியரின் பாவோபாபும், அங்கு ஒருகாலத்தில் இருந்த பரந்த காடுகளின் ஓர் உயிருள்ள நினைவுச்சின்னமாகத் திகழ்கிறது.
– சங்கீதா