இளையராஜா யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை!

உடைத்துப் பேசிய நடிகர் ராஜ்கிரண்

கேள்வி : இளையராஜா – ராஜ்கிரண் கூட்டணி தமிழ் சினிமாவில் பிரமாதமான கூட்டணியாக அமைந்தது. இது எப்படி உருவானது?

ராஜ்கிரண் பதில் :

இளையராஜா அண்ணனைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. யாரிடமும் எந்த விதமான பாரபட்சமும் அவருக்குக் கிடையாது.

‘ராஜ்கிரணுக்கு நல்லா டியூன் போட்டுக் கொடுக்கணும், பாரதிராஜாக்கு நல்லா போடணும். வேறு யாருக்காவது நல்லா போடக் கூடாது’ அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது.

ஒரு காலகட்டங்களில் பத்திரிகைகளில் நீங்க சொன்ன விசயத்தையே எழுதினாங்க.

‘ராஜ்கிரணுக்கு மட்டும் பாட்டுக்கள் நல்லா அமைஞ்சிடுது. அவர் படத்துக்கு மட்டும் ஸ்பெசலாக இளையராஜா பண்ணுகிறார்’ என்று.

நானும் அதை ரொம்ப சந்தோசமாக எடுத்துக்கிட்டு, ராஜா அண்ணன் கிட்ட சொன்னா சந்தோசப்படுவார்ன்னு நினைத்து புத்தகத்தைக் கொண்டு போய் ராஜா அண்ணனிடம் காட்டினேன்.

டென்சன் ஆயிட்டார். “அப்ப உனக்கு மட்டும் நான் நல்லா பாட்டு போடுறேன்னா நான் தொழிலுக்கு துரோகம் செய்யறேன்னு சொல்றியா என்னை.

மத்தவங்களிடமும் காசு வாங்கித்தான் மியூசிக் போடுறேன். உனக்கு மட்டும் நல்லா போடுறேன் மற்றவங்களுக்கு போடலியா?” என்று ஆரம்பித்துவிட்டார்.

“எவனோ ஒரு பத்திரிகைகாரன் எழுதினான்னா நீ எப்படி யோசிக்காமல் போனாய்” என்று சொல்லிவிட்டு அதுக்குக் காரணம் சொன்னார்.

“நீ வந்து எங்கிட்ட பாடல்கள் வாங்குவதற்காக கதை சொல்லி காட்டுற, முதல் சீனிலிருந்து கடைசி சீன் வரைக்கும் விளக்கமாக சொல்றே. வசனம் உட்பட முழு கதையையும் என் நெஞ்சுல ஏத்திடுறே.

உன்ன மாதிரி நாலைந்து இயக்குநர்கள் தான் முழு கதையையும் என் நெஞ்சினில் பதிய வைக்கிறார்கள். இது எனக்குள் இன்ஸ்பிரேசனைத் தருகிறது.

மற்ற இயக்குநர்கள் எல்லாம் தூரத்துலேயே நிற்கிறார்கள். கிட்ட வரமாட்டேன் என்கிறார்கள்.

ஒரு லவ்சீன் ஒரு டூயட் வேணும் என்று கேட்கிறார்கள். இப்படி வாறவங்களெல்லாம் பெரும்பாலும் என்னிடம் வேலை வாங்குவதே இல்லை. இதுதான் காரணம்” என்று கூறினார்.

– நன்றி : கீற்று இதழ்

You might also like