அரசு மருத்துவ மையங்களில் ஆயுர்வேத சேவைகள், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, காப்பீட்டு வசதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் என இந்தியாவின் ஆயுர்வேத முன்னேற்றங்கள் குறித்த ஓர் பார்வை.
ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி அன்று ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர்-23 என்பது சர்வதேச அளவில் Autumnal Equinox-ஐ குறிக்கும்.
இலையுதிர் காலச் சம இரவு நாள் என அழைக்கப்படும் இந்நாள், பகலும் இரவும் சமமான கால அளவைக் கொண்டிருப்பதான சம இரவு நிகழ்வுடன் (Equinox) ஒத்துப்போகிறது.
சமமான பகல் மற்றும் இரவு ஆகியவை இயற்கையில் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் குறிக்கும் வகையில் இந்த நாளை மத்திய அரசு ஆயுர்வேத தினமாக தேர்வு செய்து கொண்டாடி வருகிறது.
ஆயுர்வேத துறையில் இந்தியா கண்ட முன்னேற்றங்கள்
அந்தவகையில், 11-வது ஆயுர்வேத தினத்தையொட்டி (23.09.2026) நாட்டின் 5,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய மருத்துவ முறையை நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் பொது சுகாதாரக் கட்டமைப்பில் வெற்றிகரமாக இணைத்த சாதனையை இந்தியா கொண்டாடுகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருந்தகங்கள், மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுடன், ஆயுர்வேத சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இலவச இணையவழி மருத்துவ ஆலோசனை, காப்பீட்டுப் பாதுகாப்பு, சர்வதேசத் தரம் வாய்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் ஆகியவை, இந்தப் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளை மக்கள் எளிதில், பாதுகாப்பாக அணுக வழிவகுத்துள்ளன.
ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆயுர்வேதம் என்ற கருப்பொருளில் இத்தினம் நாடு தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆயுஷ் மருத்துவ அமைப்புகளை வழக்கமான மருத்துவக் கட்டமைப்போடு முழுமையாக இணைக்கும் நோக்கில், தேசிய ஆயுஷ் இயக்கம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2014-15 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் ஆயுஷ் மருத்துவ சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.6,406.99 கோடி நிதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 13,249 அரசு மருத்துவ மையங்களில் வழக்கமான சிகிச்சைகளுடன் ஆயுர்வேத சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் 6,302 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3,191 சமூக சுகாதார நிலையங்கள், 475 மாவட்ட மருத்துவமனைகள் அடங்கும்.
இதுவரை 12,260 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆயுர்வேதக் கல்வி, ஆராய்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 593 ஆயுர்வேதக் கல்லூரிகளும், இளநிலை ஆயுர்வேத மருத்துவப் படிப்புக்கு 45,245 இடங்களும், முதுநிலை ஆயுர்வேத மருத்துவப் படிப்புக்கு 5,673 இடங்களும் உள்ளன.
ஆயுர்கியான் திட்டத்தின் கீழ் ரூ.9.38 கோடி மதிப்பிலான 17 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நோய்கள் வகைப்பாடு 11-வது திருத்தத் தொகுப்பில் ஆயுர்வேதக் கலைச்சொற்கள் இணைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் இதற்குத் தனி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆயுர்வேத சிகிச்சைகளுக்கான பணமில்லா காப்பீட்டு வசதியை வழங்க அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் 32 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
2026-27 மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு ரூ.4,408 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்களை அமைத்தல், மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களை நவீனப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
சர்வதேச அளவில் 27 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 43 நாடுகளில் 46 தகவல் மையங்களும் அமைக்கப்பட்டு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் உலகளவில் சென்றடைந்துள்ளன.
ஆயுர்வேதத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி என்பது இந்தியாவின் நாகரிக அறிவு, சமகால சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் நல்வாழ்வுக்கான தேடல் ஆகியவற்றை இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.
– கண்ணன்
நன்றி: டைம்ஸ் நவ் இதழ்
