அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது.
பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க நேர்ந்த போதெல்லாம் இவர் நிச்சயம் ஒரு பெரிய தலைவராக வரப்போகிறார் என்று நான் கருதுவேன்.
அண்ணாவின் அரசியல் எழுச்சியையும் கலையுலக எழுச்சியையும் தள்ளி நின்று ரசித்த பல்லாயிரக்கணக்கான பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அடுத்து ‘நல்லதம்பி’ படம் பார்த்தேன். தன் புதுமைக் கருத்துக்களால் சிரிப்போடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்த கலைவாணரும் அண்ணாவும் சேர்ந்து அளித்த அந்தப் படமும் சொல்லப்பட்ட கருத்தும் என்னை பிரமிக்க வைத்தது.
அதில் ஒரு காட்சி வருகிறது.
தாயையும், மகளையும் காண ஒருவர் அவர்களது குடிசைக்கு வருகிறார். ஆனாலும் இருவரையும் சேர்ந்தார்ப்போல் காண முடிவதில்லை அவரால்.
ஒருவர் வீட்டிற்குள் போனபின் தான் ஒருவர் வரமுடியுமென்ற நிலை. அதற்குக் காரணம் அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே சேலைதான் வீட்டிலிருந்தது.
அதை ஒருவர் கட்டிக்கொள்ள, மற்றவர் கட்டியிருக்கும் கந்தல் துணியுடன் வெளியில் வரமுடியாது.
இந்த அவலம் நிறைந்த காட்சியை இவ்விதம் படமெடுத்த டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சுவானாலும், இக்காட்சியை அமைத்த கலைவாணராக இருந்தாலும், வசனம் தீட்டிய அண்ணாவாக இருந்தாலும் பார்ப்பவர்களின் நெஞ்சில் பசுமரத்தாணி பதிந்ததுபோல் ‘நல்லதம்பி’ படத்தில் வந்த இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது.!
– இயக்குநர் கே.பாலசந்தர்
(கதை – வசனம் C.N.அண்ணாதுரை M.A., என்று டைட்டிலில் இடம்பெற்ற முதல் படம் ‘நல்லதம்பி’ – வெளிவந்த ஆண்டு : 1949)
