சொல் இழுக்குப் படுகிறவர்கள் யார்?

“யாகாவராயினும் நா காக்க” என்கிற குரலின் முதல் அடியை தற்போதைய அரசியல் சூழலில் பலரும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அப்படி நினைவூட்டுவது ஒருபுறம் நடந்தாலும் அந்தக் குரலின் அடுத்த வரியான  “சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு” என்கிற வரியை நிகழ்காலத்தின் தேவை கருதி நாம் வலியுறுத்த வேண்டி இருக்கிறது.

“ஆபாச நதியைப் பற்றியும் வன்ம நதியைப் பற்றியும் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் வெளிப்படையாகப் பேசிய பிறகு அவர் குறிப்பிட்ட ஆபாசமும் வன்மமும் முன்பிருந்ததை விட அதிகப்பட்டிருக்கிறது.

சட்டசபை நிகழ்வுகளை நேரலையாகப் பார்த்துக் கொண்டிருதவவ்ர்களே அதிர்ச்சி அடையும் வகையில் திமுகவினர் வரம்புக்கு மீறிய வார்த்தைகளை பயன்படுத்தியபோது சபாநாயகர் இருக்கையைச் சுற்றி முற்றுகையிடவும் செய்தார்கள். 

இந்த நிலையில் சட்டசபையில் முதல்வர் விஜய் சர்க்காரிய ஆணையம் குறித்தும் மிசா கால கட்டம் குறித்தும் அதையடுத்து கரூர் கேங்க் குறித்தும் ரத்தீஸ் குறித்தும் உரத்தக் குரலில் பேசியது பெரும்  விவாதப் பொருளானது.

முதல்வர் தனது பேச்சில் மிசாவைப் பற்றிக் குறிப்பிட்டபோது அவர் தாடையை பிடித்தபடி செய்த செய்கை பெரும் பேசுபொருளானது அதையடுத்து அவரே சமூகவலைதளத்தில் அப்படி செய்தது குறித்து வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

சட்டசபையில் முதல்வரின் பதிலுரைக்குப் பிறகும் திமுக தரப்பில் இரு முன்னாள் அமைச்சர்கள் பேச அனுமதிக்கப்பட்ட நிலையில், வெளிநடப்பு செய்த திமுகவினர் முதல்வரின் பேச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேதியும் குறித்தார்கள்.

அதன்படியே கடந்த  12-ம் தேதி தமிழகம் எங்கும் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சில தலைவர்கள் பேசிய பேச்சுக்கள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதிலும் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபு சென்னையில் பேசிய பேச்சில் ஓடுகாளி நாயே என்று உரத்துக் குரலில் கத்தும் அளவுக்குப் போனார்.

அதைப் போலவே கழகதுணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, சிலரின் பிறப்பு குறித்தே சந்தேகப்படுவதாக பேசியதெல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். 

இவர்களைப் போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெக தலைவர்களை மிக தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய திமுகவினர் எந்தவிதமான பேச்சைக் கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்பதையே மறந்துபோனார்கள்.

இவர்கள் திமுக தரப்பில் இந்தளவுக்கு ஆபாசமயமாய் ஆர்ப்பாட்டம் செய்ததெல்லாம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தவெக சார்ந்த பல ஜென்ஸீ கிட்ஸ்களை கொந்தளிக்க வைத்தது.

கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களில் தவெகவினரின் எதிர்வினைகளும் திமுக தலைவர்கள் 60-களில் துவங்கி தற்போதுவரை என்னென்ன ஆபாசமான வார்த்தைகளை எல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பதைத் தொகுத்து காட்சிபூர்வமாக வழங்கியது பெரும் வைரலாகியது.

முன்பெல்லாம் எங்கோ சிறு சந்தில் பேசுகிற மாதிரி பேசப்பட்டு வந்த ஆபாச பேச்சுக்கள் இப்போது பொது வெளியிலும் சமூகவலைதளங்களிலும் முதல்வரே குறிப்பிட்டபடி ஆபாச வன்ம நதியாக பெருக்கெடுத்து, நமது அரசியலை கொச்சைப்படுத்திக் கேவலப்படுத்துவதை நாமே வேடிக்கை பார்க்க வேண்டி இருக்கிறது.

இத்தகைய ஆபாசத்தின் ஊற்றுக் கண்களை அடைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பமாக இருந்தாலும் இதை தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்டி உட்பட அனைவரும் ஒத்துழைத்தால் தான் இம்மாதிரியான ஆபாசங்களை ஓரளவாவது தடுக்க முடியும்.

பரஸ்பரம் எந்தக் கட்சித் தாக்கினாலும் தரங்குறைந்து பேசினாலும் நாம் ஒட்டுமொத்த தமிழக அரசியலின் தரத்தையே குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் வேதனையான உண்மையாக இருக்கிறது.

– லியோ

#யாகாவராயினும்நாகாக்க #ஆபாசம் #வன்மம் #தமிழகம் #சட்டமன்றம் #முதல்வர் #விஜய் #திமுக #சபாநாயகர் #சர்க்காரியாஆணையம் #மிசா #சேகர்பாபு #ஆராசா #தவெக #தமிழ்நாடுஅரசியல் #அரசியல்செய்திகள் #சட்டமன்றசெய்திகள் #அரசியல்விமர்சனம் #தமிழ்நாடுசெய்திகள் #TVK #DMK #Vijay #TamilNaduPolitics #TamilNaduNews #PoliticalNews #speaker #assembly

 

You might also like