இடைத்தேர்தல்: வாய்ப்புகள் யாருக்கு சாதகம்?

எதிர்பார்த்தபடியே முதற்கட்டமாக தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் திமுக கூட்டணி பலம் குறைந்த நிலையில் போட்டியிடுகிறது.

அதிமுக, பாஜக உடனான கூட்டணியுடன் போட்டியிடுகிறது.

தவெகவோ – புதிதாக இணைந்திருக்கிற காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ஐ.யூ.எம்.எல். போன்ற பல கட்சிகளுடன் போட்டியிடுகிறது.

சற்றென்று, போட்டியிடும் வேட்பாளரிடம் நிகழக்கூடிய மனமாற்றம், அவர்களை தேர்ந்தெடுக்கிற வாக்காளப் பெருமக்களிடம் அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடாது என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

இருந்தாலும் இந்தத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக இப்போதைக்கு ஏற்கனவே இருந்த பலத்தைக் கூட இழந்து பலவீனமான நிலையில் நிற்கிறது.

அதனுடன் இணைந்து போட்டியிடும் பாஜகவுக்கும் பெரிய அளவில் தற்போது அங்கீகாரம் பெற்ற நிலையே நிலவுகிறது.

திமுகவை பொறுத்தவரை அது தன்னுடன் ஏற்கனவே கடந்தத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்ட பல கூட்டணி கட்சிகளை இழந்த நிலையில் போட்டியிடுகிறது என்பது அதனுடைய ஒரு பலவீனத்தைதான் காட்டுகிறது.

அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் என்ற அறிவிப்பு உட்பட சில அறிவிப்புகள் தவெக ஆட்சியின் மீது நம்பகத் தன்மையை அதிகரிக்க வைத்திருக்கின்றன.

அதோடு பல இடங்களில் வெளிப்படையாக லஞ்சம் வாங்குவது தவறு என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது தவெக கட்சிக்கு கிடைத்திருக்கிற ஒரு கூடுதல் பலம்.

அதோடு மிகக்குறுகிய காலத்தில் தவெகவின் விசில் சின்னம் தமிழக வாக்காளர் பெருமக்களின் பெருவாரியான நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறது.

இந்த அடையாளத்துடன்தான் தற்போது தவெக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிற இரு வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

முன்பு இரட்டை இலையில் போட்டியிட்ட இவர்கள் தற்போது விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

தற்போது முன்னிலை பெறப்போவது இரட்டை இலையா? அல்லது விசில் சின்னமா? என்று பார்த்தால், விசில் சின்னம்தான் கூடுதல் மதிப்பை பெறக்கூடிய விதத்தில் இருக்கிறது என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.

அதே சமயத்தில் தாங்கள் ஏன் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்து தற்போது அணிமாறி போட்டியிடுகிறோம், தவெக அணியில் ஏன் போட்டியிடுகிறோம் என்பதைப் பற்றி இரு தொகுதி வாக்காளர்களிடம் தங்கள் நிலையை தவெக வேட்பாளர்கள் விளக்கியாக வேண்டும்.

அப்படிப்பட்ட விளக்கத்தை வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டால் தவெகவுக்கு தற்போது இருக்கிற பெருவாரியான பலத்துடன் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ப்படிப்பட்ட விளக்கத்தை தவெக சார்ந்து போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யத் தவறினால், அது அவர்களுடைய வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

ஆக, தவெக தரப்பில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் முதல்வரான விஜய் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எந்த அளவிற்கு பிரச்சாரம் பலத்தை கட்டமைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.

மின்வெட்டு, விலையேற்றம் போன்றவற்றில் தவெக அரசு சரிவர கவனம் செலுத்தவில்லை என்கின்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அத்தகைய குற்றச்சாட்டுகள் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இப்போதைக்கு பார்த்தால் களத்தில் வெளிப்படையாக தவெக முன்னணியில் இருப்பதை கட்சி பேதமின்றி பார்ப்பவர்கள் கண்கூடாக உணர முடியும்.

– லியோ

#மதுராந்தகம் #தாராபுரம் #இடைத்தேர்தல் #திமுக #அதிமுக #பாஜக #தவெக #Madurantakam #Dharapuram #ByElection #DMK #AIADMK #BJP #TVK

You might also like