கேள்வி : பேச்சு மொழியில் இருக்கும் ஒலிச்சிதைவை அப்படியே உரைநடையில் பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. பூர்ணமாக கையாள முடியவதில்லை. அப்படியே கையாள முடிந்தால் அப்படைப்பு ரசிக்கும் விதமாய் இருக்குமா?
எழுத்தாளர் அசோகமித்திரன் பதில் :
சிலபேரு மண்வாசனைக்காக பண்றோம்ன்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத் தன்மைக்கு அதிகமாகப் போய் புரியாம போயிடுறது.
கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும்.
மொழி பெயர்ப்பு எடுத்துக்கிட்டா அவனால எப்படி அந்தப் பேச்சு மொழிய, எப்படி மொழி பெயர்க்க முடியும்.
என்னதான் நாம பண்ணாலும் ஆங்கிலத்துல இருக்குற ஒரு ஸ்டேண்டர்டு இங்கிலீஷ்லதான் பண்ணமுடியும்.
முழுக்க முழுக்க பேச்சுலையே அந்த அனுபவத்த தர்றேன்னு வைச்சிகிட்டா கஷ்டம்.
ஆனா சில தகவல்கள் கொடுத்து புரிய வைக்கலாம். இதுக்கு உங்களுக்கு நீங்களேதான் ஒரு திட்டம் வகுத்துக்கணும். சிலபேர் நிறைய செய்யறாங்க.
பாமான்னு ஒரு ரைட்டருடைய கதையை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்காங்க.
அந்த மொழி பெயர்ப்புக்கு அவார்டெல்லாம் கிடைச்சது. ஆனா அந்த மொழிபெயர்ப்பு மேலயும் விமர்சனங்கள் வர்றது. நான் இரண்டையும் படிச்சேன்.
தமிழ்ல இதுவரைக்கும் அந்த Form வரல. வெளியில இருந்தும் நாமதான் மொழிபெயர்த்து படிக்கிறோம்.
அப்ப நம்மளோடத யாரு மொழிபெயர்க்குறாங்க? வெள்ளைக்காரன்தான் பண்ணணும். எந்த வெள்ளைக்காரன் வர்றான். நம்மளேதான் பண்ண வேண்டி இருக்கு.
ஆக, ஆங்கிலத்துல இருந்தும் நாமதான் பண்றோம். தமிழ்ல இருந்து ஆங்கிலத்துக்கும் நாமதான் பண்றோம். இது ஒரு விதத்துல சங்கடமானதுதான்.
- நன்றி: தீராநதி இதழ்