பரந்தூர் ஏற்றமும்; பட்டினப்பாக்கம் சறுக்கலும்!

தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 4 மாதங்களுக்குள் பல முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பிட்ட சில பின்னடைவுகளும் நிகழ்ந்திருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்புதான் மிக நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு, அங்குள்ள மக்களால் தொடர் போராட்ட வடிவம் எடுத்த, பரந்தூர் விமான நிலையம் குறித்த ஒரு திட்டவட்டமான முடிவை தவெக அரசு அறிவித்தது.

அப்போது, அதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் மட்டுமல்ல, தமிழக அளவில் ஒரு பரந்துபட்ட ஆதரவு தவெக அரசுக்குக் கிடைத்தது.

இந்த நிலையில் ஒரு சறுக்கலைப் போல தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் உருவாவது குறித்த தமிழக அரசின் முடிவு.

இதுவரை புதிய தலைமைச் செயலகம் அமைவது குறித்த முடிவை இதுவரை தமிழக முதல்வராக இருந்த பல்வேறு தலைவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது தலைநகரத்தையே திருச்சிக்கு மாற்றுவது தொடர்பான ஆலோசனை நடந்து, அது நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் புதிய தலைமைச் செயலகம் பற்றி ஆலோசிக்கப்பட்டு, ராணி மேரி கல்லூரி உட்பட பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அதிலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

அடுத்து, திமுக ஆட்சியில் கலைஞர் தலைமையில் அமைந்தபோது, சென்னை அண்ணா சாலையை ஒட்டி புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டு, எல்லா வேலைகளும் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அந்தத் தலைமைச் செயலகக் கட்டிடம் புதிய மருத்துவமனையாக மாற்றப்பட்டதால், தலைமைச் செயலகம் குறித்து கலைஞர் முன்னெடுத்த கனவு திசை மாறியது.

இப்படி எல்லாம் தலைமைச் செயலகம் குறித்த வரலாற்றுப் பதிவுகள் இருக்கையில், ஆட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன நிலையில் தவெக அரசும் தலைமைச் செயலகம் குறித்த ஒரு நிலைப்பாட்டை அறிவித்து, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தேர்வு செய்ய போவதாக அறிவித்தது.

அந்த அறிவிப்பு வெளியான போதே பல்வேறு கட்சிகள் தரப்பிலிருந்து சில குரல்கள் ஆதரித்தும் எதிர்த்தும் எழுந்தன.

அந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைவது குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை விஜய் நடத்தி, அந்த ஆலோசனைக் கூட்டத்தின் வழியே பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தலைமைச் செயலகம் உருவாவது பற்றின முடிவை எடுத்திருந்தால், அந்த முடிவுக்குப் பரந்துபட்ட ஆதரவு கிடைத்திருக்கும்.

எதாவது, குறிப்பிட்ட பகுதி மக்கள் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆனால், தற்போது நடந்திருப்பதோ நேரெதிர். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட இருப்பதாக அரசு தரப்பிலேயே அறிவிக்கப்பட்டது.

அதற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இப்படிப்பட்ட செய்தி வெளியானதுமே, காங்கிரஸ் தவிர தவெகவின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள மீனவர்களும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்பின் வீச்சு அதிகப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது தவெக அரசு சற்றே தன்னுடைய நிலையிலிருந்து பின்வாங்கியதைப் போலப் பேச ஆரம்பித்திருக்கிறது.

பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுன், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவது குறித்த ஒரு இறுதியான முடிவை அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்றும், அது சம்பந்தமான ஆலோசனை மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

அவரின் கூற்றுப்படியே புதிய தலைமைச் செயலகம் அமைவது குறித்த ஆலோசனை மட்டுமே நடந்திருந்தால், அதற்கான அறிவிப்பு ஏன் வந்திருக்கிறது, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகச் செய்தி எப்படி வெளியானது?

பிறகு பரவலான எதிர்ப்பு வெளியான பிறகு, ஏன் தற்போது தவெக அரசு அதிலிருந்து பின்வாங்கிய நிலையில், ஆலோசித்து வருவதாகப் பேச ஆரம்பித்திருக்கிறது?

ஏற்கனவே பரந்தூர் விமான நிலையம் அமைவது குறித்த திட்டத்தில் அங்குள்ள மக்களுக்கு ஆதரவான ஒரு குரலை முன்னெடுத்து அவர்களின் குரலுக்கு மதிப்பளித்த தவெக அரசு, தற்போது புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைவது குறித்த பிரச்சினையிலும் அங்குள்ள மீனவ மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து வேறொரு இடத்தைத் தேர்வு செய்யுமா?

அப்படித் தேர்வு செய்யாத வரையில், தற்போது பட்டினப்பாக்கத்தில் கடற்கரை ஓரமாக தவெக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த நிலைப்பாட்டில் ஜோதிடர்களின் குறுக்கீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வதந்திகள்தான் பரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

பரந்தூரில் பொதுமக்கள் போராடியபோது அங்கு சென்று அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த விஜய், தற்போதாவது தன்னுடைய கணத்த மௌனத்தைக் கலைத்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவது குறித்த முடிவில் தன்னுடைய கருத்தைத் தடுமாற்றம் இல்லாமல் தெளிவாக அறிவிக்க வேண்டும்.

அப்படி அவர் பேசாத வரையில் இந்தப் பட்டினப்பாக்கம் விவகாரம் பேசுபொருளாக ஆகிக்கொண்டுதான் இருக்கும்.

– யூகி

vels
You might also like