மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அருணாச்சலம் முருகானந்தம்!

சமூகத்தில் நிலவிய பல அவலங்களைப் பகுத்தறிவின் துணைகொண்டு எதிர்த்துப் போராடி, புரட்சிக்கு வித்திட்டவர்கள் பலரை வரலாறு கண்டிருக்கிறது.

முற்போக்கான சமுதாயத்திற்கு அடித்தளமிட்டதும் இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளினால் தான்.

இவர்களின் வரிசையில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரத்தில் சத்தமில்லாமல் ஒரு பெரும் புரட்சியை அரங்கேற்றியவர் தான் நம் தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்.

கிராமப்புறங்களில் ஏழை எளிய பெண்களின் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமை இவரையே சாரும்.

கோயம்புத்தூரை சேர்ந்த இவர், மலிவு விலை சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து அதனை உலக அளவில் கொண்டு சென்று புகழ்பெற்றவர்.

ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் பிறந்து வறுமையின் காரணமாக தனது பள்ளிப் படிப்பை இடை நிறுத்திவிட்டு மெக்கானிக் வேலைக்குச் சென்றார்.

திருமணம் முடித்த பின் தனது மனைவி மாதவிடாய் காலங்களில் சுகாதாரமற்ற கிழிந்த துணிகளைப் பயன்படுத்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கேள்வி எழுப்பியபோது நாப்கின்கள் விலை அதிகமாக உள்ளதாகவும் அந்த பணத்திற்கு வீட்டிற்கு பால் வாங்குவதே முக்கியம் என்றும் கூறினார்.

மனைவியின் பதில் முருகானந்தத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

ஏழைப் பெண்களும் மரியாதையுடன் பாதுகாப்பாக மாதவிடாயை எதிர்கொள்ள என்ன தீர்வு என்று தேடத் தொடங்கினார்.

இது பற்றி கிராமப்புற பெண்களிடம் பேச முயன்றார்.

ஆனால், யாரும் மாதவிடாய் குறித்து பேச முன் வரவில்லை.

இது ஒரு தனிப்பட்ட விஷயம் மட்டுமல்லாமல் சமூகத்தில் பேசக்கூடாத தலைப்பாகவும் இருந்தது.

அதனால் குறைந்த விலையில் நாப்கின்களை உருவாக்கும் பணியினை தொடங்கினார்.

முதலில் அவர் பருத்தியினைக் கொண்டு தயாரித்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் தயாரிப்பின் தரத்தை அறிய விலங்குகளின் ரத்தத்தை பயன்படுத்தினார்.

பின்பு பெண்கள் உபயோகப்படுத்திய நாப்கின்களை சேகரித்து மாதவிடாய் சூழலை ஒத்த பரிசோதனையை மேற்கொண்டார்.

இதனால் வீட்டில் இருக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. இதனை கண்ட கிராம மக்கள் அவரைப் பைத்தியம் என்று அழைத்தனர்.

நண்பர்கள் விலகினர். உறவினர்கள் கேலி செய்தனர். மனைவியும் பிரிந்து சென்றார். ஆனால் முருகானந்தம் தன் முயற்சியில் உறுதியாக நின்றார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வுக்கு பிறகு புகழ்பெற்ற நிறுவனங்கள் பருத்தியை அல்ல செல்லுலோஸ் நாரை பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிந்தார்.

இதனைக் கொண்டு குறைந்த விலை சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.

பெரிய நிறுவனமாக வளர்வதற்கு பதிலாக அவர் வேறுபட்ட பாதையை தேர்ந்தெடுத்தார்.

‘ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரம் உருவாக்கப்பட்டது.

இந்த இயந்திரங்கள் பெண்கள் சுய உதவி குழுக்கள், சிறிய தொழில் முனைவோர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.

இதன் மூலம் ஏராளமான கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததுடன் பெண்களின் ஆரோக்கியமும் மேம்பட்டது.

சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் இயந்திரங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நிறுவப்பட்டன.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கும் இந்த மாதிரி விரிவடைந்தது.

இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்த இயந்திரங்கள் மூலம் தொழில் முனைவோர்களாக உருவாகியுள்ளனர்.

முருகானந்தத்தின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இவரின் வாழ்க்கை வரலாறு பேட் மேன் (Pad man) என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றது.

மாதவிடாய் பற்றிய சமூகத் தடைகளை உடைத்தெறிந்து பெண்களின் தன்னம்பிக்கையையும் சமூக மரியாதையையும் மீட்டுத் தந்தது முருகானந்தத்தின் படைப்பு என்றால் அது மிகையில்லை.

S. வாணி

You might also like