உழைப்பால் தன்னை உருவாக்கிக் கொண்ட செழியன்!

சிறுகதை, திரைப்பட ஒளிப்பதிவு, இயக்கம், இசைத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு என்று பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான இரா.செழியன் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.

சிறுகதையைப் பொறுத்தவரை மிக நுட்பமான மொழியைக் கையாண்டிருக்கிற அவர் எழுதிய சிறுகதைகள் மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகி சில உயரிய மதிப்புகளையும் பெற்றிருக்கின்றன.

நான்-பிக்ஷன் என்கின்ற கட்டுரையாடலிலும் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்.

விகடனில் உலக சினிமாக்கள் குறித்து அவர் எழுதிய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திரைப்பட உலகிற்குள் நுழைய முற்படும் எந்த ஒரு இளைஞருக்கும் ஒரு செயல்முறை பாடத்திட்டத்தைப் போல அவருடைய நூல் அமைந்திருக்கும்.

இசை தொடர்பாகச் சில நுண்ணிய ரசனை மிகுந்த கட்டுரைகளை எழுதியதுடன், மேற்கத்திய இசை உள்ளிட்ட பல்வேறு இசை வடிவங்களை மாணவர்களுக்கு எளிய அளவில் கொண்டு செல்ல ஒரு இசைப் பள்ளியையும் நடத்தி, அதுகுறித்த நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவில் தனக்கென்று ஒரு தனித்துவமான பாணியைக் கையாண்ட அவர், இயல்பான ஒளி வெளிச்சத்தில், அதாவது அதிகபட்சமான புற வெளிச்சங்கள் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே எடுப்பதில் பாலு மகேந்திராவுக்கு அடுத்து ஒளிப்பதிவில் ஒரு கூர்மையான கவனத்தை வெளிப்படுத்தியவர்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ படத்தில் அவர் முழுக்க முழுக்க குறைந்த இயல்பான வெளிச்சத்தைப் பயன்படுத்தி எடுத்த விதம் பாராட்டிற்குரியதாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவின் பரதேசி, தாரை தப்பட்டை மற்றும் இயக்குநர் ராஜமுருகனின் ஜோக்கர் உள்ளிட்ட படங்களிலும் ஒளிப்பதிவாளராகச் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்.

பரதேசி படத்தில் வரும் நீண்ட நேரத் துவக்கக் காட்சி (ஒரே ஷாட்) பெரும் கவனிப்பைப் பெற்று பலத்தரப்பட்ட பாராட்டையும் பெற்றுத் தந்தது.

அதுபற்றி கேட்டபோது, அதை எப்படித் திட்டமிட்டு இயக்குநர் பாலாவுடன் சேர்ந்து வடிவமைத்தோம் என்பதை மிக இயல்பான ஒரு புன்னகையுடன் பகிர்ந்து கொண்டார் செழியன்.

ஒளிப்பதிவாளர் வின்சென்ட் போன்றவர்கள் கருப்பு வெள்ளை காலத்திலேயே எத்தகைய முயற்சிகளை எல்லாம் பண்ணியிருக்கிறார்கள் என்பதை சில காட்சிகளைக் குறிப்பிட்டு சிலாகித்தபடி சொன்னார்.

அப்படி திரைப்படத்தை மிகுந்த ரசனைக்குரிய ஒன்றாக பார்த்த செழியன் இயக்கித் தயாரித்த ‘டூலெட்’ படம் தேசிய  விருதையும், பல சர்வதேச விருதுகளையும் பெற்றுத் தந்தது.

பாலு மகேந்திராவின் ‘வீடு’ திரைப்படம் எப்படி அவருக்குப் பேர் வாங்கித் தந்ததோ, அதே மாதிரியே வாழ்விடம் சார்ந்த நெருக்கடியை மையமாகக் கொண்ட இத்திரைப்படமும் செழியனுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது.

ஆனால், அதன்மூலமாக கிடைத்த பல்வேறு விருதுகள் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாத மனோபாவத்துடன்தான் அவர் எப்போதும் இருந்தார்.

பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவரான செழியன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அன்னம் பதிப்பகத்தை நடத்தி வந்த எழுத்தாளர் மீரா மூலம் நவீன இலக்கிய உலகிற்குள் நுழைந்தவர்.

தனிப்பட்ட முறையில் நான் சம்பந்தப்பட்டிருக்கிற தீராநதி இதழில் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சினிமா மொழி பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. அப்படி ஒரு பிரத்தியேகமான மொழிநடை கொண்டவை.

சென்னை லயோலா கல்லூரியில் விஷ்காம் படித்த எனது மகன் அகிலனைத் திரைப்பட ஒளிப்பதிவுத் துறையில் சேர்க்க அவரிடம் கேட்டபோது,

“நாளைக்கே அவனைக் கூட்டிட்டு வந்து என்கிட்ட விட்டுருங்க, நான் பார்த்துக்கிறேன்” என்று அவருக்கே உரித்தான வட்டார மொழி நடையோடு சொன்னார்.

சொன்னபடியே, தாரை தப்பட்டை, ஜோக்கர் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற வைத்தார்.

எப்போதும் இயல்பான செயலூக்கத்துடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார்; சலிப்பின் குரல் அவரிடம் இருந்ததே இல்லை.

தன்னுடைய செயல்பாடுகளிலும் பேச்சுகளிலும் நம்பிக்கை மற்றும் நேர்த்தியைப் பரப்பிக் கொண்டிருந்த எளிய கலைஞரான செழியன் மறைந்தது அவரிடம் பழகியவர்களுக்குப் பெரும் துக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

– மணா

You might also like