நூல் அறிமுகம் :
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி.
‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்.
மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள்.
தத்துவ விசாரம், சமூக விமர்சனம், வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும், பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று.
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது.
எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார்.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாக்க் கையாள்கிறது.
முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியைப் பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.
*********
நூல்: பசித்த மானிடம்
ஆசிரியர்: கரிச்சான் குஞ்சு
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 272
விலை: ரூ. 323/-