ஊடகங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுகின்றனவா?

அண்மையில் காட்சி ஊடகம் சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள்.

திமுக கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளியேறியபோது அதன் தலைவரான காதர் மொய்தீனிடம் செய்தியாளர் ஒருவர் கொந்தளிக்க வைக்கும்படியான ஒரு கேள்வியைக் கேட்க உண்மையாகவே கொந்தளித்து விட்டார் காதர் மொய்தீன்.

“ஏன் இப்படி முட்டாள்தனமா கேட்குற”

அதே மாதிரி அண்மையில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோவிடம் திமுக கூட்டணியை விட்டு வெளிவந்தது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, கொந்தளிப்பின் உச்சிக்கே போய்விட்டார் வைகோ.

“யாருக்காக நீ இப்படி கேட்குற, நீ எந்த பத்திரிகை. மஞ்சள் பத்திரிகையா?” என்று உஷ்ணத்துடன் பேச, களேபரமாகி அந்தச் செய்தியாளரை அந்த அறையிலிருந்து வெளியேற்றினார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டிருப்பது இரண்டு நிகழ்வுகள் என்றாலும், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு மைக்குகளுக்கு முன்னால் வந்து நிற்கும் தலைவர்களை நோக்கி எக்குத்தப்பான முறையில், கேள்விகள் கேட்பது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஜனநாயக ரீதியில் எந்த ஒரு கேள்வியைக் கேட்கவும் எந்த ஒரு செய்தியாளருக்கும் உரிமை இருக்கிறது என்றாலும், அதை பொதுவெளியில் எப்படிப்பட்ட தொணியில் கேட்கிறோம் என்பது முக்கியமானது.

இப்படிக் கேள்வி கேட்கும் அதே செய்தியாளர்கள் தமிழகத்திலிருக்கிற முக்கியமான கட்சித் தலைவர்களிடம் இதே மாதிரி கேள்விகளைக் கேட்பார்களா? என்பது சந்தேகத்திற்கு உரிய ஒன்று.

இப்படிக் கேள்வி கேட்பவர்கள் தன்னிச்சையாக இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்களா? அல்லது அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கத் தூண்டப்பட்டு இப்படிப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றனவா? என்பதும் விவாதத்திற்குரியது.

இதேமாதிரி தேர்தல்களுக்குப் பின்பு தமிழகத்திலுள்ள பல்வேறு தொலைக்காட்சி விவாதங்கள் மிகவும் காரசாரமாகவும் இரைச்சலாகவும் கத்தலாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன.

எந்த ஒரு தொலைக்காட்சியைப் பார்த்தாலும், மாலை நேரம் துவங்கி இரவு வரை நீடிக்கும் விவாத களத்தில் யாராவது ஒருவரோ அல்லது பலரோ கத்திக் கொண்டே இருக்கிறார்.

சில ஊடகங்களில் நிகழ்ச்சியை நடத்தும் நெறியாளர்களே உரத்தக் குரலில் கத்துகிறார்கள்.

சில குறிப்பிட்ட கட்சிகளுக்காகத்தான் அவர்கள் இம்மாதிரி கத்துகிறார்கள் என்பது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்தாலும்,

ஏன் இம்மாதிரி விவாத நிகழ்ச்சிகளில் சிலர் தொடர்ந்து பங்கேற்று விதவிதமாக கத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அப்படி கத்துவதின் உள்நோக்கம் தான் என்ன?

வட இந்தியாவில் உள்ள சில ஆங்கிலச் சேனல்களில் நடந்த சில விவாத நிகழ்வுகளிலும் இதைப் போன்றே விவாதங்கள் என்று துவங்கி அது பெரும் இரைச்சலாக மாறி பங்கேற்பவர்களையும் பிரசர் ஏற வைத்து, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கிறவர்களுக்கும் பிரசர் ஏற்றுகின்றன.

இதனால், அம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதையே பலர் தவிர்ப்பதும் நடந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி ரேட்டிங் குறைந்திருக்கிறது.

அதே மாதிரியான களேபரச் சூழல் தமிழக தொலைக்காட்சி விவாதங்களிலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறதா?

எந்த ஒரு விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறவர்கள் என்று சுமார் 50 பேர்களைச் சொல்ல முடியும்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட கட்சிக்காக மட்டுமே குரல் கொடுப்பவர்கள் அல்லது கத்துகிறவர்கள்.

இவர்களையும் மீறி உண்மையாகவே நடந்த சில நிகழ்வுகளைப் பற்றி ஆதாரங்களுடன் சொல்ல முற்படுகிறவர்களின் குரல்கள் மேலே சொன்னவர்களின் கத்தலுக்கு முன் பின்தங்கிப் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட படு இரைச்சலான, காது வலிக்கும்படியான கூச்சல்களை விவாதங்கள் என்கின்ற பொது அடையாளத்தின் கீழ் நடத்திக் கொண்டிருந்தால், எவ்வளவு பார்வையாளர்கள் தொடர்ந்து பொறுமையுடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஸ்பான்சர்கள் கிடைக்கலாம். அதிக வருவாயும் கிடைக்கலாம்.

ஆனால், பார்வையாளர்களை நம்பகத்தன்மையுடன் ஒரு விவாதத்திற்கு அடிப்படையான அறநெறியுடன் நடத்துவதற்கு சம்மந்தப்பட்ட தொலைக்காட்சிகள் முயலாமல் வெறும் கத்தலும் கூச்சலுமே தொடரும் என்றால்,

ஏற்கனவே தொலைக்காட்சி சீரியல்களைப் பார்த்து அலுத்துப்போன பார்வையாளர்கள், இவற்றையும் தொடர்ந்து பார்க்கத் தயாராக இருப்பார்களா? என்பதைப் பற்றியும் இந்த விவாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் யோசிக்க வேண்டும்.

–யூகி

You might also like