நீலகிரி மாவட்டத்தில் இருவேறு காட்டுப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களில் இரண்டு சிறுத்தைக் குட்டிகளும் ஒரு புலிக் குட்டியும் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.
பல்வேறு வகையான காட்டு விலங்குகள் அழிந்துவரும் நிலையில், காட்டுயிர்ப் பாதுகாப்பில் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இந்த இழப்புகள் உணர்த்துகின்றன.
அண்மையில், நீலகிரியின் தேவாலா பந்தலூர் சாலையைத் தாயுடன் கடக்க முயன்ற ஐந்து மாதங்களே ஆன இரண்டு சிறுத்தைக் குட்டிகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தன.
இதே மாவட்டத்தில், முதுமலை அருகே மசினகுடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மாயாறு அணைப் பகுதியில் புலிக்குட்டி ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
நாடு முழுவதுமே மனிதர் – காட்டுயிர் எதிகொள்ளல் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்து வருவதன் எதிரொலிதான் இதுபோன்ற உயிரிழப்புகள்.
‘காடுகளில் வசிக்கும் உயிரினங்கள் சந்திக்கும் மிக மோசமான பிரச்சினை மனிதர் காட்டுயிர் எதிர்கொள்ளல்’ என்கிறது உலக இயற்கை நிதியமும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டமும் இணைந்து வெளியிட்டிருக்கும் ஆய்வு.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மனிதர் – காட்டுயிர் எதிர்கொள்ளல் பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
சாலை, ரயில் பாதை, சுரங்கம், அணை போன்ற பல்வேறு மனித வளர்ச்சிப் பணிகளுக்காகக் காட்டுயிர்களின் வாழிடச் சிதைவு, காடழிப்பு, காட்டுப் பகுதிகளுக்குள் மக்களின் இடப்பெயர்வு உள்ளிட்ட பல காரணங்களால், காட்டுயிர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
அவற்றின் வழக்கமான வழித்தடங்கள் அழிக்கப்படுவதால் திசைமாறிக் காட்டுயிர்கள் ஊருக்குள் நுழைகின்றன; பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கின்றன, சில நேரம் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன.
வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் தவிர்க்க முடியாதவை.
ஆனால், மனிதர்களை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதும் மனிதர்களின் அலட்சியமும் விழிப்புணர்வின்மையும் பெரும்பாலான காட்டுயிர் இறப்புகளுக்குக் காரணங்களாக அமைகின்றன.
இந்தியாவில் 2009-2010, 2020-2021 ஆகிய ஆண்டுகளில் வனங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 186 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகக் காட்டுப் பகுதிகளில் புலி, சிறுத்தை, முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகள் சாலையைக் கடக்கும்போது உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

இவற்றைத் தடுக்கக் காட்டுப் பகுதிகளுக்குள் நுழையும்போது ரயில்களில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்வது, ரயிலின் வேகத்தைக் குறைப்பது,
சாலைகளில் காட்டுயிர் குறுக்கிடும் இடங்களில் வேகத்தடைகளை அதிக எண்ணிக்கையில் அமைப்பது, காட்டுயிர் நடமாட்டத்தைத் தொழில்நுட்ப உதவியோடு தொடர்ந்து கண்காணிப்பது போன்ற மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே உள்ளன.
அவை சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்வது அவசியம்.
காட்டுயிர்களின் வழித்தடங்கள் பாதிக்கப்படாத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
விபத்து, வேட்டையாடுதல் போன்றவற்றால் காட்டுயிர்கள் எதிர்பாராமல் இறப்பது காட்டின் உயிர்ப்பன்மைச் சமநிலையை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், காட்டுயிர்ப் பாதுகாப்பில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
காடுகளைச் சுற்றியுள்ள மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் காடுகளின் வழியாகப் பயணம் செய்வோருக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
காட்டு விலங்குகள் பூமியின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதற்கும் மனித குலத்தின் நீண்ட கால உயிர்வாழ்வுக்கும் அத்தியாவசியமானவை என்கிற உண்மையை யாரும் மறந்துவிடக் கூடாது!
– 20.05.2026 தேதியிட்ட இந்து தமிழ் திசை தலையங்கத்திலிருந்து…