மருத்துவப் படிப்பில் திட்டமிட்ட ஒரு ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்லப்பட்டுதான் நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீட்தேர்வு முறை அமலானபோதே, அதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருந்தது.
இதையும் மீறி தேசிய அளவில் தற்போது, நீட்தேர்வு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சமயங்களில் ஆள் மாறாட்டம் நடப்பதாகவும் கூட தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
அதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒன்று நடந்துள்ளது.
கடந்த மே 3-ம் தேதி அன்று நடந்த நீட்தேர்வை தேசிய அளவில் ஏறத்தாழ 23 லட்சம் மாணவர்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்கள்.
தற்போது வினாத்தாள் கசிவை அடுத்து, நடந்து முடிந்த நீட்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசின் அனுமதியோடு அறிவித்திருக்கிறது அந்தத் தேர்வு முகமை.
மருத்துவப்படிப்பில் ஒரு ஒழுங்கு வேண்டும் என்கின்ற நெறிமுறையை வலியுறுத்தி நடத்தப்படும் நீட்தேர்விலேயே இத்தகைய குளறுபடிகள் தொடர்ந்து நடக்கிறது என்றால், இந்த விதமான முறைகேடுகளுக்கு யார் பொறுப்பேற்பது?
இதை எழுதும் மாணவர்களின் தடுமாற்றத்திற்கும் பதற்றத்திற்கும் யார் பதில் சொல்வது?