தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கப்போவது யார்?

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த வெவ்வேறு தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி, “108 தொகுதிகளை மட்டும் பெற்றிருக்கிற தவெகவுக்கு யார் கூடுதல் ஆதரவைத் தரப்போகிறார்கள்?” என்பது தான்.

தற்போது தவெக தலைவர் கோரிக்கை விடாத நிலையிலும், முன்கூட்டியே காங்கிரஸ் தலைமை தனது ஆதரவை வெவ்வேறு பேச்சுக்களின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறது.

அதன் அகில இந்தியத் தலைவர்கள் முக்கியமாக கே.சி.வேணுகோபால் போன்றவர்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து அதை அறிக்கையாகவும் வெளியிட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மாநிலத் தலைமை அதை முடிவு செய்யும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

இதற்கு முன்பு திமுக கூட்டணிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தியவரான மாணிக்கம் தாகூர், தற்போதும் மிகவும் வெளிப்படையாக தவெகவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை தொலைக்காட்சிகளுக்கு முன்பே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், காங்கிரசுக்குத் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 5 மட்டுமே. அதே நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களையும் ஒன்றிணைத்தால் நாம் மதச்சார்புள்ள சக்திகளை ஆதரவு கொடுக்கும்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது என்கின்ற ஒரு ஒற்றை முழக்கத்தை முன்வைத்து இந்த ஆதரவைத் தர முன் வந்திருக்கிறார்.

அதிலும் முக்கியமாக காங்கிரஸ் அதை வெளிப்படையாகவே முன்வைத்திருக்கிறது.

எந்த விதத்திலும் அதிமுகவோ, பாஜகவோ விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

இதற்கிடையில் அதிமுகவிற்குள்ளேயே லீமா ரோஸ் போன்ற சில எம்எல்ஏக்கள், தவெகவுக்கு ஆதரவளிக்கலாம் என்கின்ற கருத்தை வெளிப்படையாக முன்வைக்க, தற்போது அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் வெளிப்படையாகவும் தவெகவிற்கு ஆதரவளிக்கலாம் என்கின்ற தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிறார்.

அதே நிலையில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியன் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு வந்ததன் அடிப்படையில் தவெகவுக்க ஆதரவு தர வேண்டியதில்லை என்கிற கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.

அடுத்ததாக தற்போதைய நிலையில், அதிமுக இயக்கத்திற்குள்ளேயே அதிமுக ஏறத்தாழ 47 தொகுதிகளைப் பெற்றிருக்கிற நிலையில், அதற்குள்ளேயே விஜய் ஆதரவு நிலைப்பாடு காரணமாக பிளவு வந்துவிடுமோ என்கின்ற ஒரு வதந்தியும் ஊடகங்கள் தரப்பில் பரப்பப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பொறுப்பையும் வகிக்காத அதிமுக  எம்எல்ஏக்களுக்கு, தற்போது தவெக கூட்டணியில் அங்கம் வைத்தால் உடனடியாக பதவிக் கிடைக்கலாம் என்கின்ற எண்ணமே இத்தகைய கட்சித்தாவலுக்கு கூட  வழிவகுக்கலாம்.

தேர்தலுக்குப் பிறகு நிலவும் அசாதாரணமான ஒரு சூழ்நிலையை முன்வைத்து அதிமுக மட்டுமல்ல, திமுக கூட்டணியில் இருக்கிற இடதுசாரிய கட்சிகள் உட்பட பல்வேறு இயக்கங்கள் தங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி இருக்கின்றனர்.

இதில், தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளுக்கும் தவெக கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இதுவரை எதிர்தரப்பில் இருக்கிற அதிமுக கூட்டணியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறதே ஒழிய, நேரடியாக இந்த விதமான ஆதரவு கோரிக்கை கடிதம் தரப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.

அதேசமயம் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளை கைவசம் வைத்திருக்கிற பாமக தவெகவுக்கு ஆதரவு தருவதற்கு முன்வந்து, குறிப்பிட்ட அமைச்சர் இலாக்காக்களையும் கேட்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆக, நிறைவாக தவெகவுக்கு தேவைப்படுவது 10 தொகுதிகள் என்றாலும், இந்த தொகுதிகளுக்கு ஆதரவைக் கொடுத்து தங்களுக்கான வெவ்வேறு பொறுப்புகளைப் பெறுவதற்கான போட்டா போட்டி வெவ்வேறு கட்சிகளுக்கிடையே துவங்கியிருக்கிறது.

இன்னும் இரண்டு நாட்களில் எந்தெந்த கட்சிகள் வந்து சேரப் போகின்றன என்பது ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

You might also like