விஜய்யுடன் கூட்டணி அமைக்கப் போவது யார்?

“எங்களுடன் கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்கின்ற முழக்கத்தை விக்கிரவாண்டியில் நடந்த தவெக கூட்டத்தில், அதன் தலைவரான விஜய் முன்வைத்தபோது, அந்த முழக்கம் பல்வேறு ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது.

ஆனால், அவருடைய அந்த முழக்கத்தை ஆதரிக்கிற விதத்தில், யாரும் அப்போது விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், தற்போதைய தேர்தல் முடிவு ஏற்படுத்தியிருக்கிற அதிரடி மாற்றத்தின் விளைவாக தவெக 108 தொகுதிகளை வென்றிருக்கிற நிலையில், அதிக தொகுதி எண்ணிக்கையைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக முன்னுக்கு வந்திருக்கிறது.

இதையடுத்து, திமுக 59 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இதற்கடுத்த நிலையில், அதிமுக முதலில் பல தொகுதிகளில் முன்னுக்கு வந்திருந்தாலும் இறுதிச்சுற்று நிலவரப்படி 47 தொகுதிகளை மட்டுமே பெற்று தொகுதி எண்ணிக்கையில் பின்தங்கியிருக்கிறது.

தற்போது விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கு அல்லது அவருடன் கூட்டணி அமைப்பதற்கு யார் உதவுவார்கள்?

தவெக ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 10 தொகுதிகள் தேவைப்படுகின்ற தற்போதைய சூழலில், யார் அந்த ஆதரவைத்தர முன்வருவார்கள்?

காங்கிரஸ் மற்றும் பாமக தரப்பிலிருந்தும் ஆதரவுக்கரம் நீளலாம் என்கின்ற பல்வேறு யூகங்கள் முன் வைக்கப்படுகின்றன.

அவ்வளவு ஏன்? திமுக கூட்டணியிலேயே அங்கம் வகிக்கிற சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, கூட்டணியில் அங்கம் வைத்து அமைச்சரவையில் உரிய இடமும் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றன.

இதையொட்டிய பல்வேறு விவாதங்கள் பல தொலைக்காட்சிகளில் நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால், துவக்கத்திலேயே தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக முயன்று அதற்கான பேச்சு வார்த்தை நடந்ததாகவும் பிறகு அந்தப் பேச்சு வார்த்தை அதிருப்தியுற்ற நிலையில் முடிந்ததாகவும் பல செய்திகள் அடிபட்டன.

அந்த சயமத்தில் ஓர் கூட்டத்தில், தவெக கொடி பறந்ததை பாசிடிவ்வாக எடுத்துக் கொண்டு ஏற்கனவே பேசியவர்தான் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி.

இப்போது, அதே தவெகவுக்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கு அதிமுக ஏன் ஈகோ பிரச்சனைகள் இல்லாமல் முயலக்கூடாது என்கின்ற கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

ஒருவிதத்தில், தவெகவை பலப்படுத்துவதற்கு மட்டுமல்ல, 3-வது நிலையில் இருக்கிற அதிமுகவையும் பலப்படுத்த இது உதவும்.

ஏற்கனவே, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை உதாரணம் காட்டிக் கொண்டாடிய தவெகவுடன் அதிமுக பாராபட்சம் காட்டாமல் உதவிக்கரம் நீட்டுவதால், அடுத்துவரும் 5 ஆண்டுகளில் ஆளுங்கட்சியின் ஓர் அங்கமாக அதிமுக திகழ எதார்த்தமான நடைமுறை வாய்ப்பிருக்கிறது.

இதன்மூலம் அதிமுக என்கின்ற இயக்கமும் பலப்படும், அந்த இயக்கத்திலிருந்து பல்வேறு நபர்கள் பிரிந்து வேறு இயக்கங்களுக்குச் செல்வதும் தடைப்படும்.

இதற்கெல்லாம் ஒரே வழி தவெக தலைவரான விஜய்யிடம் வார்த்தை பரிமாறி தன்னுடைய ஆதரவையும் வெளிப்படுத்த எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்க வேண்டும். 

அதற்காக பாஜக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், தேர்தல் காலத்திய கூட்டணியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தவெகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது அதிமுக என்கின்ற இயக்கத்தை உயிர்ப்போடு இயங்க வைக்கும்.

இல்லையென்றால், எடப்பாடி நிரப்பாமல் விட்டுவிட்ட இடைவெளியை மற்ற கட்சிகள் நிரப்பி, அவர்கள் தவெக கூட்டணியில் தங்களுக்குரிய பலத்தைப் பெற வாய்ப்பிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நலனுக்காக மட்டுமல்ல, தான் சார்ந்திருக்கிற அதிமுக என்கின்ற இயக்கத்திற்காகவும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமிது.

– லியோ

You might also like