சீரிய எழுத்துக்கள் நம்மை செதுக்கியிருக்கின்றன!

உலக புத்தக தினம் ஏப்ரல் 23

மக்களின் அறிவுத்திறனை தூண்டும் விளக்காகத் திகழ்பவை புத்தகங்கள்.

சிறு வயது முதலே புத்தகங்களினூடே பயணிக்கின்ற மனிதன், முழுமையான ஆற்றல் பெற்றவனாகிறான்.

சமுதாயத்தை எதிர்கொள்ளும் வலிமையை, கல்வியின் மூலம் வழங்குகின்றன புத்தகங்கள்.

வாழ்க்கை நெடுகிலும் பின்பற்ற வேண்டிய அறத்தையும் நல்லொழுக்கத்தையும் போதிக்கின்றன. எத்தனை எழுத்தாளர்களின் சீரிய எழுத்துக்கள் நம்மை செதுக்கியிருக்கின்றன.

சுடர்மிகு அறிவால் மொழி, இலக்கியம், பெண் விடுதலை, நாட்டுப்பற்று என பன்முகங்களில் கவிதை இயற்றி, பாட புத்தகங்களின் வழியே இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார் பாரதியார்.

அரிச்சந்திரா நாடகம் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நேர்மை என்னும் வித்தை விதைத்தது என்ற விவரம் அவர் எழுதிய புத்தகத்தின் வழியே அறியப்பெற்றது.

கல்கியின் பொன்னியின் செல்வன் இன்றும் திரை வடிவம் பெற்று சரித்திர நாயகர்களின் பெருமை பேசுகிறது. வாழ்க்கையை வரலாறாக மாற்றிய சாதனையாளர்களின் அனுபவங்களை அறிவதற்கு உதவுபவையும் இவையே ஆகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி அன்று, உலக புத்தக மற்றும் பதிப்புரை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாள், வில்லியம் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நினைவு நாளாகவும், புத்தகங்களின் சக்தியை விளக்கும் திருவிழாவாகவும் கருதப்படுகிறது.

புத்தகங்கள் கலாச்சார மற்றும் அறிவார்ந்த மாற்றத்தை மட்டுமல்லாமல் தலைமுறைகளுக்கிடையே பாலமாகவும் செயல்படுகின்றன. யுனெஸ்கோ-வால் 1995-ம் ஆண்டு முதல் உலக புத்தக தினமாக இந்நாள் அறிவிக்கப்பட்டது.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும், புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும், எழுத்தாளர்களின் படைப்புகளை கௌரவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

புத்தகங்கள் வழிகாட்டியாக மட்டுமின்றி சிறந்த நண்பர்களாகவும் திகழ்கின்றன. இவை வாசிப்பவருக்கு புதிய உலகத்தை காட்டி, மன அழுத்தத்தை குறைத்து வாழ்வின் பல்வேறு கோணங்களை உணர்த்துகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது உலகெங்கிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் ஆகியவை புத்தகக் கண்காட்சிகள், போட்டிகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகிறது.

நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புத்தகங்களும் டிஜிட்டல் வடிவம் பெற்றுள்ளன. வாழ்வில் வண்ணங்களை சேர்க்க நல்ல எண்ணங்கள் அவசியமாகிறது. அவை செயல் வடிவம் பெற, சிறந்த புத்தகங்கள் நமக்கு துணை புரிகின்றன.

நேர்மறை சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும் தன்னம்பிக்கை துளிர்க்கவும் புத்தகங்கள் கை கொடுக்கின்றன. வாழ்வின் ஏற்றங்களையும் வளங்களையும் பெற, இப்புத்தக தினத்தில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்போம்.

S. வாணி

You might also like