மனதை உலுக்கும் பட்டாசு மரணங்கள்!

விழா தருணத்தின்போது தரையிலோ, வானத்திலோ வண்ணமயமாக வெடித்துச் சிதறுகிற பட்டாசைப் பார்த்து குதூகலப்படகுழந்தைகள் உட்பட எல்லோருமே தயாராக இருக்கிறோம்.

ஆனால், அதே பட்டாசை கடுமையாக நெடி ரசாயண நெடி அடிக்கும் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு, சுவாசித்துக் கொண்டு அதில் எப்போதாவது விபத்து ஏற்படும்போது,

அதே பட்டாசு வெடித்து உருக்குலைந்து உடல் சிதறி கருகிப்போகும் தொழிலாளர்களைப் பற்றி எப்போதாவது நாம் யோசித்திருக்கிறோமா?

பட்டாசு தயாரிப்பதற்காக, விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர், கோவில்பட்டி என்று பல பகுதிகளில், பெரிதும் சிறிதுமாக பல பட்டாசு ஆலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

இவற்றில், முறைப்படி அனுமதி பெற்று, இயங்கும் ஆலைகளும் இருக்கின்றன. அனுமதி பெறாமல் இயங்கும் ஆலைகளும் தொடர்ந்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

இந்த ஆலைகளுக்கு அனுமதிக் கொடுத்ததற்கும் இயங்கும் முறையை அடிக்கடி சோதிப்பதற்குமான அதிகாரிகள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். இவர்கள் கண்காணிப்பையும் மீறி இயங்கும் ஆலைகள் மிகக் குறைவு.

எப்படி காவல்நிலையத்திற்கு அருகிலேயே கள்ளச்சாராயத்தை விநியோகிக்க முடிகிறதோ, அதே மாதிரி தான் கண்காணிக்கிற அதிகாரிகள் அருகிலிருந்தும் அவர்களால் முறையாக கவனிக்கப்படாத ஆலைகளும் இங்கு இயங்குகின்றன. 

தற்போது விருதுநகர் மாவட்டத்திலுள்ள வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு இதுவரை கிடைத்த தகவலின்படி சுமார் 25 பேர் வரை உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுவது தற்செயலான நிகழ்வல்ல.

தற்போதும், முன்பு சொல்வது மாதிரியே பட்டாசு ஆலைக்காக பல விதிமுறைகளை மீறி இந்தப் பட்டாசு ஆலையும் இயங்கி வந்ததால், இப்படிப்பட்ட விபத்து நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கூடுதலான நெடி அடிக்கும் வெடி மருந்துகளை அந்தத் தொழிலாளர்கள் பயன்படுத்தியபோது, ஏற்பட்ட உராய்வினால், இந்த விபத்து நடந்திருப்பதாகவும் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், தற்போது அரசே சொல்கிறபடி பட்டாசு தயாரிப்பில் இத்தகைய விதிமீறல்களும், அத்துமீறல்களும் எப்படி நிகழ்ந்தன?

மிகச் சமீபத்தில் கூட சாத்தூருக்கு அருகில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.

சிவகாசியைச் சுற்றியுள்ள பல சிறு ஆலைகளில் குடிசைத் தொழிலைப் போல பட்டாசு தயாரிப்பது நடந்து கொண்டிருக்கிறது.

இதில், பெண்கள் பணிபுரிவதைப் போலவே துரதிர்ஷ்வசமாக சிறு குழந்தைகளும் பணியாற்ற அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் அவர்கள் ரசாயண நெடி அடிக்கும் வெடிமருந்தை கையாளர்பவர்களாக பணியமர்த்தப்பட்டிருப்பது அல்லது பணியமர்த்த கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய அத்துமீறல்.

தற்போதும் விதிமீறல்கள் நடந்ததாகச் சொல்லி அத்தகைய விதிமீறல்களை செய்த பட்டாசு ஆலையின் உரிமையாளர்கள் தேடி வருகிறது தமிழக காவல்துறை.

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் நடக்கிற இதுபோன்ற விபத்துக்களால், சில ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நாம் இழந்திருக்கிறோம்.

பட்டாசு வெடித்து எரிந்த நிலையில், கரிக்கட்டைகளைப் போல அந்தத் தொழிலாளர்களின் உடல்கள் கருகிக் கிடக்கும் கொடூரத்தை நேடியாகப் பார்த்தால் தான், அதனுடைய வீரியம் பார்க்கிற நமக்கு உரைக்கும்.

இம்மாதிரியான தொடர் நிகழ்வுகளுக்கு யாரை நாம் தண்டிப்பது?

பட்டாசு ஆலைக்கான விதிமீறல்களை மீறி இயக்கிய பட்டாசு ஆலை உரிமையாளர்களையா, அவர்களை சரி வர கண்காணிக்காத அதிகாரிகளையா?

அல்லது கிடைக்கிற சிறு சொர்ப்ப சம்பளத்திற்காக இத்தகைய ஆபத்துமிக்க தொழில் குழந்தைகளோடு, ஈடுபடுத்திக் கொண்ட பெண் தொழிலாளர்களையா?

யாரை நாம் குற்றம் கூறுவது?

இனி அமையப்போகிற அரசு தான் இதற்கான விளக்கத்தைத் தர வேண்டும்.

– அகில் அரவிந்தன்

You might also like