முன்னாள் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, மீண்டும் தனது எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார்.
மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கிய அவர், இந்த முறை உதய சூரியன் சின்னத்தில் நிற்கிறார்.
அவர்கள் தொகுதிகளின் கள நிலவரம் எப்படி? பார்க்கலாம்.
எடப்பாடி – அதிமுகவின் கோட்டை:
எடப்பாடி தொகுதியில் அதிமுக இதுவரை 7 முறை வாகை சூடியுள்ளது. அந்தத் தொகுதி அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. இபிஎஸ் 4 முறை அந்த தொகுதியில் வென்றுள்ளார். ஒரு தடவை தோற்றுப்போனார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார் இபிஎஸ்.
விவசாயம் மற்றும் விசைத்தறி தொழிலை அடிப்படையாகக் கொண்ட இந்த தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் கணிசமாக உள்ளனர்.
பாமக இந்த தொகுதியில் 3 முறை வென்றுள்ளது. ஒரு முறை தனித்தே போட்டியிட்டு பாமக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி இப்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
எடப்பாடி தொகுதியில் பழனிசாமிக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. எனவே, அவர் இந்த முறையும் எளிதாக வெல்வார் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஓபிஎஸ் போட்டியிடும் போடி:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் மீண்டும் நிற்கிறார். அவர் மொத்தம் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். 2011, 2016 மற்றும் 2021 ஆண்டு நடந்த தேர்தல்களில் போடியில் நின்று வாகை சூடினார்.
இந்தத் தொகுதியில் 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். கடந்த தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ் ஜெயித்தார்.
கடந்த தேர்தல்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஓபிஎஸ், இந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலில் அவரை எதிர்த்து திமுக சார்பில் நின்ற தங்க தமிழ்செல்வன், இந்த முறை ஒபிஎஸ்சுக்கு ஆதரவு திரட்டுவது சுவாரஸ்யமான முரண்.
இதனால் ஒபிஎஸ்சை அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
போடி தொகுதியில் பிரச்சாரம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதில் ஒரு பகுதி :
அரசியலில் உச்சப்பட்ச நிலையை அடைந்துவிட்டு இன்று, எம்ஜிஆர், ஜெயலலிதாவால் தீயசக்தி என்று கூறிய கட்சியில் போய் ஓபிஎஸ் சேர்ந்திருக்கிறார். உயிருடன் இருந்த எம்ஜிஆரை இறந்துவிட்டதாகக் கூறி பொய் பிரச்சாரம் செய்தவர் கருணாநிதி. அவரை எல்லாம் ஓபிஎஸ் மிஞ்சிவிட்டார்.
பெரியகுளம் நகரச் செயலாளராக இருந்த ஓபிஎஸ்ஸை நான் சொன்ன ஒரு காரணத்துக்காக மாவட்டச் செயலாளராக ஜெயலலிதா மாற்றினார்.
படிப்படியாக எம்எல்ஏ, அமைச்சர், எதிர்கட்சித் தலைவர், முதலமைச்சர் என்று ஓபிஎஸ் அரசியலில் உச்சம் தொட்டது அதிமுகவில் தான்.
கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பினால் தான் இந்த பதவிகள் எல்லாம் அவருக்குக் கிடைத்தது.
இதை எல்லாம் மறந்து எப்படி திமுகவில் இணைய முடிகிறது. எப்படி இவருக்கு தூக்கம் வருகிறது. மனச்சாட்சியே கிடையாதா? எப்படி வீட்டில் இவருக்கு சாப்பாடு போடுகிறார்கள் என்றே தெரியவில்லை” என்று தினகரன் சாடினார்.
இந்த முறை ஓபிஎஸ் கரை சேருவாரா? என்பது வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
– பாப்பாங்குளம் பாரதி.