எழுத்து என்பது மௌனத்தின் எதிராக மேற்கொள்ளப்படும் கலகம். எழுத்தாக வாழ்கிறவன் காகிதத்தின் மீது எழுத்தை எழுதுவதில்லை. மாறாக ஆன்மாவின் குருதியைச் சிந்துகிறான்.
தன் கதாபாத்திரங்கள் கானும் கனவையே வாசகனும் காணச் செய்ய வேண்டுமானால் எழுத்தாளன் தன் நனவிலி மனதை விழிக்கச் செய்ய வேண்டும்.
தனது கண்ணீரை வாசகனோடு பகிர்ந்து கொள்ளும் சந்தோஷத்துக்காகத்தான் எழுத்தாளன் இரவும் பகலும் வாழ்கிறான்.
தனது நாவலில் பண்டிட் பியாரி லால் எனும் கதாபாத்திரம் ஒன்று தனது பழத்தோட்டத்தில் இறந்து போகிற காட்சியை எழுதுகிறபோது சல்மான் ருஷ்டியினால் அதைத் தாங்கவே முடியவில்லை.
மேஜையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார். அதேபோல கிராமம் ஒன்று அழிந்து போகும் சோகத்தை அவரால் எழுதவே முடியவில்லை.
நாற்காலியில் அமர்ந்தபடி அதற்கான வாக்கியங்களைத் தன்னால் உருவாக்கவே முடியாது என்று சோர்ந்து போய் விட்டார்.
எழுத்தாளனின் முன்னால் இருக்கிற மிகப்பெரிய சந்தோஷம் இதுதான்.
முடியாது என்கிற நிலையிலிருந்து மீண்டெழுந்து எழுத்தின் மூலமாகத் தன் கதாபாத்திரங்களின் சோகத்தை வாசகனோடு அவன் பகிர்ந்து கொள்ளும்போது வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றியாளனாக அவன் தன்னை உணர்கிறான்.
இந்த அற்ப சந்தோஷத்துக்காகத்தான் எழுத்தை சுவாசித்து வாழும் கலைஞன் உயிர் வாழ்கிறான்.
மொத்த வெளி உலகமும் அவனை ஒரு பைத்தியக்காரன் என்று கேலி செய்து சிரிப்பதைப் பற்றியோ,
உலகிலேயே மகாக் கலைஞன் என்று போற்றுவதையோ பற்றி சிறிதும் கவலைப் படாமல் தனது உள் உலகத்தை சக மனிதர்களிடம் தனது எழுத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதில் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொள்ளத் தயாராக இருப்பவனே எழுத்தாளன்.
எழுத்து என்னும் குதிரையின் மீது சவாரி செய்கையில் அந்த முரட்டு குதிரை எழுத்தாளனை அடிக்கடி கீழே தள்ளி விட்டு ஓடத்தான் செய்யும்.
ஒவ்வொரு முறை கீழே விழுகிறபோதும், ரத்தக் காயங்களோடு எழுந்து நின்று, மீண்டும் குதிரைச் சவாரி செய்பவனே எழுத்தாளன்.
– எழுத்தாளர் இந்திரன் முகநூல் பதிவு