தேர்தல் வந்தாலே வாக்காளப் பெருமக்கள் என்னென்ன காட்சிகளையெல்லாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது?
போட்டியிடும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சர்க்கஸ் கூடாரத்தில் இருப்பதைப் போல அவ்வளவு வித்தைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பத்ததிலிருந்தே பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் எம்.ஜி.ஆரின் பாடலை சிரமத்துடன் பாடிக் காட்டுகிறார்.
நாம் தமிழர் சீமானோ தொண்டைக் கட்டிக்கொண்ட நிலையில், கரகரத்தக் குரலோடு மறைந்த கிராமியப் பாடகரான கே.ஏ.குணசேகரனின் ஜக்கம்மா பாடலை உச்சஸ்தாயியில் பாடிக் காட்டுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி ரஜினி காந்தின் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா என்கின்ற பாடல் வரியையும் பாட்ஷா படத்தில் இடம்பெறும் நான் ஒரு தடவை சொன்னா என்கின்ற பஞ்ச் டயலாக்கையும் அடிக்கடி பேசிக் காட்டுகிறார்.
வேட்பாளராக போட்டியிடுகிற பலரும் அப்போதுதான் புதிதாக டீ குடிப்பதைப் போல மக்களுடன் பெஞ்சில் உட்கார்ந்து பரவசத்துடன் டீ குடித்த கையோடு முன்னிருக்கிற கேமராக்களையும் பார்த்து சிரிக்கிறார்கள்.
சிலர் தெருவோர சிற்றுண்டிக் கடையில் உணவருந்தியபடி போஸ் கொடுக்கிறார்கள்.
மக்களுக்கு முன்னால், பொடி நடை நடந்து காட்டுகிறார்கள்.
சிலர் தெருவோர சிற்றுண்டிக் கடையில் புரோட்டா போடும் மாஸ்டர்களுக்கு ஹெல்பர்களைப் போல கரண்டியை வைத்து பதமாக புரோட்டாவைத் திருப்பிப் போடுகிறார்கள்.
கோவிலில் பிரச்சாரத்திற்கு இடையில் இருக்கும் எந்தக் கோவிலிலும் பணிவாகக் கும்பிட்டு நெற்றி நிறைய திருநீறுடன் பக்திப் பழமாக அருள்கூர்ந்து காட்சித் தருகிறார்கள்.
நல்ல வேளையாக யாருக்கும் அருள்வந்து சாமியாடுவதெல்லாம் வேட்பாளர்கள் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.
இப்படி மக்களையெல்லாம் கவர்கிற விநோதக் காட்சிகளெல்லாம் மக்களோடு மக்களாக நிற்பதெல்லாம் தேர்தல் பிரச்சார தேதி முடிவடைகிற வரைதான்.
அதற்குபிறகு ஒரு வேளை தேர்தலில் அவர்கள் ஜெயித்துவிட்டால், வாக்காளப் பெருமக்களுக்கு முன்னால், தோன்றுகிற காட்சிகளெல்லாம் மறைந்துபோகும் அல்லது அவர்களுக்கே மறந்துபோகும்.
வாழ்க தேர்தல் காலத்து ஜனநாயகம்!.
– யூகி