மூடுபனி முற்றிலும் விலகாத முன்பனிக் காலைப் பொழுது, அறை வெப்பம் 13 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் இருந்தது.
மங்கலான சூரிய ஒளியே வெளியில் பரவியிருந்தது. ஜன்னல் திரை வழியே சூரிய ஒளி வீட்டிற்குள்ளும் நுழைந்திருந்தது.
சோபாவில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்த வேளையில் வாகன ஓசைகளையும் தாண்டி ஏதோ ஒரு குருவியின் கீச்சொலி காதில் விழுந்தது.
காபிக் கோப்பையை வைத்துவிட்டுக் கதவைத் திறந்து பால்கனிக்குச் சென்றேன். அறையைவிட அங்கு வெப்பம் இன்னும் குறைவாக இருந்ததால், சட்டென்று உடல் குளிர்ந்தது.
வீட்டருகே சுமார் 30 அடி உயரத்துக்கு வளர்ந்திருந்த ஏழிலைப்பாலை மரத்தை இரண்டாம் தளத்திலிருந்து கவனித்தேன்.

ஓரிலைக் காம்பில் ஏழு இலைகள் காணப்படுவதால் இது ஏழிலைப்பாலை (Alstonia scholaris) இது பசுமைமாறா மர வகை.
இதன் இயற்கை வாழிடம், மழைக்காடுகள், வெப்பமண்டலம், துணை வெப்பமண்டலப் பகுதிகள்.
உத்தராகண்ட் மாநிலத்தின் தெராய் நிலப்பரப்பு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இவை வளர்க்கப்பட்டுள்ளன.
அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டதை அதன் தனித்துவமான நறுமணம் கொண்ட வெள்ளை-மஞ்சள் நிறப் பூங்கொத்துகள் நினைவூட்டும், இரண்டு மாதம் பூத்த பூக்கள் தற்போதைய கடும் குளிரில் கருகி இருந்தன.
துருதுரு சிட்டுகள்
அந்த ஏழிலைப்பாலை மரக்கிளைகளில் பல சிட்டுகள் சுறுசுறுப்பாக நகர்வதைக் காணமுடிந்தது.
தேன்சிட்டின் அளவு இருக்கும் அந்தச் சிட்டு எழுப்பிய ‘ச்சு…ச்சுவி…ஒலி மிக அதிகமாக இருந்தது.
ஓரிரு நிமிடங்கள் இதே மரத்தில்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு ஓசை ஏதும் எழுப்பாமல் வீட்டிற்குள் நுழைந்தேன். கேமராவை எடுத்துக்கொண்டு மீண்டும் பால்கனியை வந்தடைந்தேன்.
சிட்டுகள் பெரும்பாலும் பூச்சிகளை உணவாகக் கொள்ளும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.
ஒரு சிட்டைக் குறி வைத்து ஒளிப்படம் எடுக்க முயன்றேன். ஓர் இடத்தில் நிற்காமல் துருதுருவென்று நகர்ந்து கொண்டிருக்கும் சிட்டுகளை ஒளிப்படம் எடுப்பது சிரமம் என்றே தோன்றியது.
அடர்த்தியான கிளைகளுக்கும் இலைகளுக்கும் இடையே பூச்சிகளைத் தேடிப் பிடித்துக்கொண்டிருந்தது.
ஓர் இடத்தில் ஓரிரு நொடிகள் மட்டுமே இருந்தது. அவை வேறொரு கிளைக்கும், வேறோர் இலையின் மீதும் தாவிக் கொண்டும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டும் பூச்சிகளைப் பிடித்து உண்டன.
சில நிமிடங்கள் கழிந்தன. கேமராவைச் சுமந்துகொண்டிருந்த கை வலித்தது.
மென்மையான குளிர்க் காற்று வீசியதால் ஸ்வெட்டர், தொப்பி அணிந்திருந்தும் குளிர் எடுத்தது.
பெரும்பாலும் அடர்த்தியான இலைகளுக்கு இடையே சிட்டுகள் இருந்தன. அதிசயமாக ஒரு சிட்டு மரத்தின் வெளிப்புறம் இருக்கும் இலை ஒன்றின் நுனிக்கு வந்தது.

அடுத்த நொடி பூங்கொத்திற்கு நகர்ந்தது.
பின்னர் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு ஏழிலைப்பாலைப் பூவில் பூச்சியை ஆராயத் தொடங்கியது.
இரண்டு நொடிகளுக்கு மேல் நகராமல் அதே இடத்தில் தனது வேலையைச் செய்து கொண்டிருந்த அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம்தான் இது.
இதன் பெயர் வெள்ளைக் கண்ணி (Zosterops palpebrosus). 10 செ.மீ. நீளம் இருக்கும்.
இதன் தனித்துவமான வெள்ளைக் கண் வளையமே வெள்ளைக் கண்ணி என்று இது பெயர் பெறக் காரணமானது.
தலை, தொண்டை, கழுத்து, உடல் மேற்புறம், வாலின் அடிப்பகுதி ஆகியவை மஞ்சள் நிறத்தில் இருந்தன. வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்தில் இருந்தது.
இதன் கருமையான அலகு சிறியதாகவும் கூர்மையாகவும் பூச்சிகளைப் பிடிக்க ஏதுவாகவும் இருந்தது.

பூச்சிகள், பூக்களில் உள்ள தேன் ஆகியவையே இதன் முதன்மை உணவு. இமயமலை அடிவாரத்தில் இது பரவலாகக் காணப்படும்.
தொடர்ந்து முயற்சி செய்தும், அது பூச்சி பிடிக்கும் வேகத்தைப் படம்பிடிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.
பூச்சிகளைப் பிடித்து உண்ட பின் அடுத்த சில நொடிகளில் தன் குழுவோடு எதிர் வீட்டிற்கு அருகே இருக்கும் மற்றோர் ஏழிலைப்பாலை மரத்திற்குப் பறந்து சென்றுவிட்டது நான் படமெடுத்த பறவை.
இருந்தாலும் முதல் வெள்ளைக்கண்ணியின் ஒளிப்படம் முறையாக கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டிற்குள் நுழைந்தேன்.
குடிக்காமல் டீப்பாயில் விட்டுச் சென்றிருந்த காபியோ மாயமாகி இருந்தது.
ரா.வாஞ்சிநாதன், இயற்கை ஆர்வலர் (rvanchi@gmail.com)
நன்றி: இந்து தமிழ் திசை