சக எழுத்தாளர்களை ஒருபோதும் குறை கூறாத மனிதர்!

பிரபஞ்சன் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி

​நானும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் ஒரு கோடை நாளில் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு உண்பதற்கு அமர்ந்திருந்தோம்.
 
அப்பொழுது மூன்று கன்னியாஸ்திரிகள் உள்ளே வந்து எங்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அதில் நடுவில் இருந்த கன்னியாஸ்திரி பேரழகாக இருந்தார்.
 
அவர் அனேகமாக பெங்களூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் அவர்கள் அந்த வெள்ளுடை அதை உறுதி செய்தது.
 
அப்பொழுது நான் அவரிடம் சொன்னேன், “இப்படி அழகான கன்னியாஸ்திரிகளைக் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஏற்கக் கூடாது முதலில்,” என்றேன்.
 
​”ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டார் பிரபஞ்சன்.
 
​”அது திருச்சபையின் கட்டுப்பாடுகளை உடைக்காதா?” என்றேன்.
 
​அதைக் கேட்டுவிட்டு வெகு நேரம் அவர் சிரித்துக் கொண்டே இருந்தார். தான் அணிந்திருந்த அந்தக்  கூலிங் கிளாஸையும் கழற்றி வைத்துவிட்டார்.
 
அப்படி அவர் சிரிக்கும்போது பேரழகாக இருக்கும். அது உள்ளூர எழும் ஒரு சிரிப்பு. ஒரு வகையான தெய்வீகச் சிரிப்பு அது. நான் அதனை மிகவும் ரசிப்பேன்.
 
தலை குனிந்து கொண்டு கொஞ்சம் குலுங்கி குலுங்கி சிரிப்பார். ​அவருக்கும் எனக்குமான முதல் சந்திப்பே ரொம்பவும் சுவாரசியமானது.
 
சத்யம் தியேட்டருக்குப் பக்கவாட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் அப்பொழுது அவர் இருந்தார்.
 
நான் அவரைப் பார்ப்பதற்கு முதல் முறையாகச் செல்கிறேன். அப்பொழுது நான் உதவி இயக்குநர். அவரைச் சந்தித்து, கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஒரு கதையைச் சொல்கிறேன். பொறுமையாக முழுவதும் கேட்டார்.
 
திரைக்கதை போல ஏற்ற இறக்கத்தோடு சொல்கிறேன். நானே எழுதியது போலச் சொல்கிறேன். இடையில் என் சொந்தக் கற்பனையில் சில சொற்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.
 
எப்படியாவது அவர் எழுதிய கதையை அவரிடமே சொல்லி, அவரைப் பாதிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பு என்னிடம் இருந்தது.
 
அவர் கதையில் நான் எந்தெந்த இடத்தை எல்லாம் ரசித்தேன் இருப்பதெல்லாம் போற போக்கு டச் பண்ணி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
 
அவரும் முழுமையாக, பொறுமையாகக் கேட்டார். இடையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொண்டார்; எனக்கும் தந்தார்.
 
​முழுதாகக் கேட்டுவிட்டு, ஒரு சிகரெட் பற்ற வைத்தார். ​பின் பொறுமையாகச் சொன்னார்.
 
“இந்தக் கதை நான் எழுதல…”
அந்த நிமிடம், இருவருக்குள்ளும் ஒரு மயான அமைதி நிலவியது. அவ்வளவு நேரம் ஓடிக் கொண்டிருந்த ஒரு கிரைண்டரை யாரோ ஆஃப் பண்ணியது போல ஒரு நிசப்தம் அது.
 
வெளியே காகங்கள் கரைகின்ற சத்தம் கேட்டது. தூரத்தில் எங்கோ அடிக்கிற ஹாரன் சத்தம் கூடத் தெளிவாகக் கேட்டது.
 
​அவர்தான் அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின்பு அவரே ஒரு கமா போட்டார்.
 
​”சரி பரவாயில்லை. ஆனால், நீங்கள் சொன்ன கதை நல்லா இருந்துச்சு. அனேகமா எஸ்.ராமகிருஷ்ணன் கதையா இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார்.
இப்படி ஒரு ஜென்டில்மேன்… பிரபஞ்சன் அவர்கள் அப்படி ஒரு எழுத்தாளரை என் வாழ்நாளில் நான் சந்திக்கவே இல்லை.
 
மற்றவர்களோடு சில காலம்தான் பயணித்திருக்கிறேன், ஆனால், பிரபஞ்சன் அவர்கள் எதன் பொருட்டும், எவருக்காகவும், எங்கேயும் போய் நிற்காதவர்.
 
ஒரு சிறிய வீட்டில் இருந்தார். அது அனேகமாக கவர்மெண்ட் குவாட்டர்ஸ் மாதிரி இருந்தது.
 
​ஜிப்பா போட்டுக் கொண்டு வெளியே வருவார்.
 
“என்ன சார், ‘வசந்த மாளிகை’ சிவாஜி மாதிரி வந்துட்டீங்க” என்பேன்.
 
​”அப்படியா… போச்சுடா” என்று சிரிப்பார்.
அவர் ஒயின் அருந்தும் அழகைப் பார்த்து நான் ஒரு முறை அவரிடம் சொன்னேன்…
 
“சார், நீங்க மாநிறமா இருக்குற வெள்ளைக்காரர் சார்” என்றேன்.
 
​”ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்டார்.
 
​”எதையும் அளவா சாப்பிடுறீங்க சார்” என்றேன்.
 
அப்பொழுதும் அப்படியே சிரித்தார்.
 
​அப்பொழுது எனக்கு ஒரு தயாரிப்பாளர் வந்திருந்தார். அவர் தி.நகரில் எனக்கு அலுவலகம் போட்டுத் தந்திருந்தார்.
 
நான் ஒரு கார் அனுப்பி அவரைப் பிக்கப் பண்ணி என் அலுவலகத்துக்கு வரச் சொல்வேன்.
 
அவரோடு பேசிக் கொண்டிருப்பது படு சுவாரசியமாக இருக்கும். நிறைய தகவல்களைச் சொல்வார். எதற்கும் அவர் பதற்றப்பட்டு நான் பார்த்ததே இல்லை.
 
​”நல்ல மழை சார்… இல்ல..?” என்பார் மிக இயல்பாக.
 
​என்னை ‘சார்’ என்றுதான் அழைப்பார். “சார், நீங்க பேர் சொல்லியே கூப்பிடலாம் சார்” என்று நான் சொன்னேன்.
 
அதற்கு அவர், “பேரு, சாறு எல்லாமே ஒண்ணுதான் சார்” என்று சொன்னார்.
அவரைத் தேடி யாராவது வந்திருக்கும்போது நான் போனால், “ஒரு ஃபைவ் மினிட்ஸ்…” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்வார். ஐந்து, பத்து நிமிடத்திற்குள் அவர்களை அனுப்பிவிட்டுப் பிறகு ‘ஜம்’மென்று வெளியே வருவார்.
அவர் அணியும் கண்ணாடியை ‘ராஜபார்ட் ரங்கதுரை கூலிங் கிளாஸ்’ என்று சொல்வேன்.
 
“எனக்குச் சிவாஜியின் நடிப்பு மிகவும் பிடிக்கும்,” என்பார்.
 
​ஒரு நாள், ஒரு பொழுதுகூடத் தன் சமகால எழுத்தாளர்களைப் பற்றி ஒரு சிறு குறைகூட அவர் என்னிடம் சொன்னதே இல்லை.
அதுதான் பிரபஞ்சன். என்னோடு அப்படித்தான் அவர் கலந்திருக்கிறார்.
– இயக்குநர் சீனு ராமசாமி
You might also like