தேர்தல் நேரத்தில் கட்சித் தாவல்கள், ஒரு சடங்காகவே தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த முறை ‘கூடு விட்டுக் கூடு பாயும்‘ வைபவம் கொஞ்சம் அதிகம்.
திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அந்தக் கட்சியை நோக்கிப் பிற கட்சியினர், கொத்துக் கொத்தாகப் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
அதிமுகவின் நான்கு அணிகளில் இருந்தும், முக்கிய நிர்வாகிகள் திமுகவில் கடந்த ஓராண்டாகவே இணைந்து கொண்டு இருக்கிறார்கள். பிள்ளையார் சுழி போட்டவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.
இதன் தொடர்ச்சியாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தனர். இதன் உச்சமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஐக்கியமாகியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதலமைச்சராக இருந்த ஒருவர் மாற்றுக்கட்சியில் இணைவது இதுவே முதல்முறை.
இதனால் தான் ஓபிஎஸ்.சுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளார்.
துரைமுருகன். கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கனிமொழி வரிசையில் ஓபிஎஸ்.சுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் உள்ள அதிமுகவினர் வாக்குகளைப் பெற்றுத்தர இவர் உதவுவார் என்பது ஸ்டாலின் எண்ணம்.
இதனால், கட்சியில் சேர்ந்த அவரை முதன்முறையாக பிரச்சாரத்துக்கு தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் முதலமைச்சர். தென்காசி மாவட்டத்தில், ஓபிஎஸ் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அவர், இரண்டு விஷயங்களை முன் வைத்துப் பிரச்சாரம் செய்கிறார். ஒன்று – முதல்வர் ஸ்டாலின் புகழ் பாடுவது. இரண்டு – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, திட்டித் தீர்ப்பது.
இலஞ்சியில் நடந்த கூட்டம் ஒரு எடுத்துக்காட்டு.
அதில் ஒபிஎஸ் பேசியது :
”முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காகப் பார்த்துப் பார்த்து நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்தத் திட்டங்களின் முழு பயன்களையும் மக்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்கிறார்.
முன்பு இருந்த அரசுகள் திட்டங்களை அறிவித்துவிடுவார்கள். ஆனால், அந்த திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்று ஆய்வு செய்வதில்லை. ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆட்சியின் பலன்கள் நேரடியாக மக்களுக்கு கிடைக்கச் செய்கிறார்.
எதிர்க்கட்சியில் இருப்பவர் தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறார். கத்திக் கத்தி பேசினால் மக்கள் கேட்பார்கள் என்று அவர் நினைக்கிறார். அவர் பெயரைச் சொல்லக்கூட நான் விரும்பவில்லை.
ஊர்ந்து போய் பதவியைப் பெற்று, பதவிக் கொடுத்தவருக்கே நன்றியில்லாமல் இருந்தவர் அவர்.
தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே, தன்னை மீண்டும் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தனது கைக்கூலிகளை வைத்து சொல்லச் சொன்னார். ஆனால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதா பெயர்தான் இருக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதைத் தூக்கிப் போட்டுவிட்டார். பொதுச் செயலாளராக தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்டார்.
ஆனால், என்ன ஆனது? இவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் வந்த 10 தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். மக்கள் அவரை நம்பவில்லை. இப்போது அவர் அறிவிக்கும் வாக்குறுதிகளையும் மக்கள் நம்பவில்லை” என்பது ஓபிஎஸ் பேசியதன் சுருக்கம்.
ஓபிஎஸ் பிரச்சாரம் பலன் அளிக்குமா?
ஒபிஎஸ் திமுகவில் சேர்ந்ததுமே அவர் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பல மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் சேர்ந்துவிட்டனர்.
அவர் அணியில் இருந்த ஓரிருவரும் ஓபிஎஸ்சின் இலஞ்சி பேச்சைக் கேட்டு அதிர்ந்துள்ளனர்.
ஏன்?
ஓபிஎஸ் அணி நிர்வாகி ஒருவர் கூறியது:
பதவி சுகத்துக்காக திமுக ஆட்சியை ஓபிஎஸ் புகழ்ந்து விட்டு போகட்டும். ஆனால், மூன்று முறை அவரை முதலமைச்சராக்கிய அதிமுக ஆட்சியை அவர் விமர்சித்துள்ளது, வேதனை அளிக்கிறது.
“முன்பு இருந்த அரசுகள் திட்டங்களை அறிவித்துவிடுவார்கள். ஆனால் அந்தத் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று ஆய்வு செய்வதில்லை” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
‘தர்மயுத்த நாயகன்’ வெறுமனே அரசு என சொல்லி இருந்தால் எடப்பாடியைச் சொல்லி இருப்பார் என சமாதானம் அடைந்திருப்போம்.
அரசுகள் என்று சொல்லி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியை மட்டுமின்றி, தனது ஆட்சியையே அவர் விமர்சித்துள்ளார்.
பேசாமல் ஓபிஎஸ் சென்னையிலோ, தேனியிலோ இருந்திருந்தால் அவரது ஆதரவாளர்கள் கொஞ்சம் பேராவது திமுகவுக்கு ஓட்டுப் போட யோசித்திருப்பார்கள். இலஞ்சி பேச்சின் மூலம் அதையும் கெடுத்து விட்டார்” என்கிறார்.
‘முதலமைச்சரை திருப்திபடுத்துவதாக நினைத்துக்கொண்டு ஓபிஎஸ் செய்யும் பிரச்சாரம் திமுகவுக்கு எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.