மாணவர்களின் போராட்டம் பலன் அளித்திருக்கிறதா?

பாஜக அரசு மத்தியில் அமைந்து இதுவரை விவசாயிகள் துவங்கி பல்வேறு தரப்பினர் போராடி இருக்கிறார்கள்.

ஆனால், எந்தப் போராட்டத்தின் விளைவாகவும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதவி விலகவில்லை. ஆனால், ‘கரப்பான் பூச்சி’கள் கடந்த கால வரலாற்றையே மாற்றி அமைத்துவிட்டன.

நீட் தேர்வு தொடர்பான கேள்வித் தாள்கள் கசிந்து ஏற்படுத்திய சிக்கலை முன்வைத்து துவங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்கின்ற பெயரில் மாணவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியபோது, துவக்கத்தில் அதன் வீரியத்தை மத்திய அரசு உணரவில்லை.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டம் துவங்கி 20 நாட்களைக் கடந்த பிறகு லடாக்கைச் சேர்ந்த கல்வியாளரான சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மாணவர்களின் போராட்டத்தில் இணைந்தபோது, போராட்டம் கூர்மை பெற்றது.

தேசிய அளவில் ஊடகங்கள் ஓரளவு கவனம் செலுத்தின. சமூக ஊடகங்கள் பலவிதமான கட்டுப்பாட்டுகளை மீறி அதை வெளிப்படுத்தி வந்தன.

இந்த நிலையில், டெல்லி மாணவர்கள் மீது ஜுலை 20-ம் தேதி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் மேலும் போராட்டத்தில் இணைய வைத்தது.

போராட்டம் மேலும் வலுப்பெற்று, போராட்டமும் கூர்மைபெற்று பேச்சுவார்த்தைகள் நடந்து அதன் விளைவாக மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் நீண்ட கடிதம் எழுதியபடி பதவி விலகியிருக்கிறார்.

“இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இளைய தலைமுறை கனவுகளின் நினைவாக்குவது நமது கடமை.

நமது இளைஞர்கள் தீய சுழலில் சிக்​கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தான் பதவி விலகியதாக ஒரு காரணத்தையும் சொல்லி இருக்கிறார். 

இதைத் தொடர்ந்து புதிய கல்வி அமைச்சராக பிரகாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை நியமித்ததால் மட்டுமே நீட் தேர்வில் இதுவரை நடந்துவந்த குளறுபடிகளும் முடிவுக்கு வந்துவிடுமா? அதை பாஜக அரசு உறுதிப்படுத்துமா?  இதற்கெல்லாம் சரியான விடை இப்போது தெரியவில்லை.

தர்மேந்திர பிரதான் என்கிற ஒற்றை மனிதரை பதவி நீக்கம் செய்வதால் மட்டுமே நீட் தேர்வு முறைகேடு சீரடைந்து புனிதம் பெற்றுவிடாது. அதன் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களும் வலுவிழந்து விடாது.

தமிழகத்திலுள்ள கட்சிகள் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் பல கட்சிகள் ஒன்றுகூடி பாராளுமன்றத்திலோ அல்லது தனியாக சிறப்புக் கூட்டம் நடத்தியோ நீட் தேர்வு முறை குறித்து தெளிவானதொரு  முடிவெடுக்க வேண்டிய நேரமிது.

முழுக்க நீட் தேர்வையே ரத்து செய்ய மத்திய அரசு முன்வருமா? அல்லது நீட் தேர்வில் சில சீர்திருத்தங்களைச் செய்ய மட்டுமே முன் வருமா?

கல்வியை பலரும் வலியுறுத்துகிற மாதிரி, மாநிலப் பட்டியலுக்கு மாற்றி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?

கல்வியில் ஏன் இந்த மேலாதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது?

தற்போதைய மாணவர்கள் அவர்கள் முன்வைத்த ஓரிரு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். 

அதேசமயம் இதற்கெல்லாம் மூல காரணமான மத்திய அரசிடம் புகுந்திருக்கும் அளப்பரிய அதிகாரத்தை விட்டுக் கொடுத்து மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தால் மட்டுமே நீட் தேர்வு முறைக்கே முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

அது நடக்காதவரை கல்வி தொடர்ந்து பெரு நிறுவனங்களின் தலையீட்டால் மாபெரும் வியாபாரப் பொருளாகவே இருந்து கொண்டிருக்கும்.

– யூகி

You might also like