இன்று நாம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்ட Wi-Fi, Bluetooth, GPS போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்த நடிகையும் கண்டுபிடிப்பாளருமான ஹெடி லாமார் (Hedy Lamarr) பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
உலகம் அவரை ஒரு ஹாலிவுட் நடிகையாகவே கொண்டாடியது. ஆனால், உலகையே மாற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம், அவர் உயிருடன் இருந்த காலத்தில் முழுமையாக கிடைக்கவில்லை.
ஹெடி லாமார், 1914-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ஆஸ்திரியாவின் வியன்னாவில், ஹெட்விக் ஈவா மரியா கீஸ்லர் (Hedwig Eva Maria Kiesler) என்ற பெயரில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறிந்து கொள்வதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவருடைய தந்தை பல்வேறு இயந்திரங்களின் செயல்பாட்டை விளக்கிக் கூறுவார்.
அந்த ஆர்வத்தால், ஐந்து வயதிலேயே தனது இசைப்பெட்டியை (Music Box) பிரித்து மீண்டும் பொருத்தி, அது எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றார்.
மறுபுறம், அவரது தாய் ஒரு இசைக்கலைஞர் என்பதால் சிறுவயதிலேயே இசை மற்றும் கலைகளிலும் ஆர்வம் வளர்ந்தது.
இளம் வயதிலேயே நடிப்பில் ஈடுபட்ட ஹெடி, 1933-ல் வெளியான Ecstasy திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார்.
அதே ஆண்டில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆயுதத் தொழிலதிபரான ஃபிரிட்ஸ் மாண்டல் (Fritz Mandl) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அந்த திருமண வாழ்க்கை அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. தனது மனைவி வெளியுலகத்துடன் அதிகம் பழகக் கூடாது என்று மாண்டல் கடுமையாக கட்டுப்படுத்தியதாக ஹெடி பின்னர் கூறியுள்ளார்.
மாண்டல் ஆயுத உற்பத்தித் துறையில் இருந்ததால், அவரது வீட்டில் ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் ஆயுத நிபுணர்கள் அடிக்கடி சந்தித்து போர் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிப்பார்கள்.
அந்த உரையாடல்களை ஹெடி அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது கிடைத்த அறிவும் அனுபவமும், பின்னர் அவர் உருவாக்கிய கண்டுபிடிப்புக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது.
1937-ல் அந்த கட்டுப்பாடான திருமண வாழ்க்கையிலிருந்து தப்பித்து லண்டன் சென்ற ஹெடி, அங்கிருந்து ஹாலிவுட்டிற்கு பயணம் செய்தார்.
அங்கு Metro-Goldwyn-Mayer (MGM) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து Algiers, Boom Town, Ziegfeld Girl, Samson and Delilah உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.
உலகம் அவரை “உலகின் மிக அழகான நடிகை” என்று பாராட்டினாலும், படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பதை பலர் அறிந்திருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், கடலுக்கடியில் இருந்து ஏவப்பட்டு எதிரி கப்பல்களைத் தாக்கும் ‘டார்பிடோ’ (Torpedo) என்ற கடல்சார் ஆயுதங்கள் ரேடியோ சிக்னல்களின் உதவியுடன் வழிநடத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து ஹெடி அறிந்திருந்தார்.
ஆனால், அந்த ரேடியோ சிக்னலை எதிரிகள் இடைமறித்தாலோ அல்லது ஜாம் செய்தாலோ, டார்பிடோ சரியான இலக்கை அடையாமல் வழி மாறிவிடும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
பின்னர், இசையமைப்பாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜார்ஜ் ஆன்தெய்ல் (George Antheil) என்பவருடன் இணைந்து ஒரு புதிய தகவல் தொடர்பு முறையை உருவாக்கினார்.
இதில், ரேடியோ சிக்னல் ஒரே அலைவரிசையில் செல்லாமல், கண நேரத்துக்கு ஒருமுறை வெவ்வேறு அலைவரிசைகளுக்கு மாறிக்கொண்டே இருக்கும்.
இதனால் சிக்னல் அடுத்து எந்த அலைவரிசைக்கு மாறும் என்பதை எதிரிகளால் கணிக்க முடியாது. அதன் காரணமாக சிக்னலை இடைமறிக்கவோ அல்லது ஜாம் செய்யவோ மிகவும் கடினமாகிவிடும்.
இந்தப் புரட்சிகரமான யோசனைக்காக 1942-ஆம் ஆண்டு “Secret Communication System” என்ற பெயரில் அமெரிக்க காப்புரிமை (U.S. Patent No. 2,292,387) வழங்கப்பட்டது.
இருப்பினும், அந்தக் காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்க கடற்படை உடனடியாக பயன்படுத்தவில்லை.
அப்போது தேவையான மின்னணுத் தொழில்நுட்ப வசதிகள் முழுமையாக வளர்ச்சி அடையாததால், இந்த யோசனையை நடைமுறையில் கொண்டு வர முடியவில்லை.
அதற்கு பதிலாக, தனது புகழைப் பயன்படுத்தி போர் நிதிக்காக (War Bonds) நிதி திரட்டுமாறு ஹெடியிடம் கூறப்பட்டது.
அவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான War Bonds விற்பனைக்கு உதவினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மின்னணுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தபோது, ஹெடி லாமார் உருவாக்கிய இந்த அடிப்படைக் கொள்கையின் முக்கியத்துவம் புரியத் தொடங்கியது.
பின்னர் பாதுகாப்பான ராணுவ தகவல் தொடர்பு அமைப்புகளில் இந்த யோசனை பயன்படுத்தப்பட்டது.
அதன் பிறகு அதே அடிப்படைக் கொள்கை மேலும் மேம்படுத்தப்பட்டு, இன்று நாம் பயன்படுத்தும் Wi-Fi, Bluetooth, GPS உள்ளிட்ட பல வயர்லெஸ் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
ஆனால், தனது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் ஹெடிக்கு உடனடியாக கிடைக்கவில்லை. பல தசாப்தங்கள் கழித்தே, 1997-ல் ஹெடி லாமாரும் ஜார்ஜ் ஆன்தெய்லும் இணைந்து Electronic Frontier Foundation Pioneer Award பெற்றனர்.
அதன்பிறகு 2000-ம் ஆண்டு ஜனவரி 19 அன்று ஹெடி லாமார் காலமானார். அவர் மறைந்த பிறகு, 2014-ல் National Inventors Hall of Fame-ல் இடம்பெற்று அவரது பங்களிப்பு அதிகாரப்பூர்வமாக கௌரவிக்கப்பட்டது.
ஒரு ஹாலிவுட் நடிகையாக உலகம் அவரை நினைவில் வைத்திருந்தாலும், இன்று தொழில்நுட்ப உலகம் அவரை தொலைநோக்குப் பார்வை கொண்ட கண்டுபிடிப்பாளராக நினைவுகூர்கிறது.
நாம் தினமும் பயன்படுத்தும் Wi-Fi, Bluetooth, GPS போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களின் பின்னணியில், ஹெடி லாமாரின் அந்த ஒரு புத்திசாலித்தனமான யோசனையும் அமைதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
– சங்கீதா