சினிமா நடிகராக மட்டும் இருந்தபோது ‘ஆண்டுக்கு இரு படங்கள் – படத்துக்கு ரூ. 200 கோடி சம்பளம்’ என வாழ்க்கையை ஜாலியாக நகர்த்திக் கொண்டிருந்தார் ‘இளைய தளபதி’ விஜய்.
தவெக எனும் அரசியல் கட்சியை என்றைக்கு ஆரம்பித்தாரோ, அன்று முதல் நிம்மதியைத் தொலைத்து விட்டார்.
விஜயை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் இருந்த கட்சிகள், விக்கிரவாண்டி மாநாட்டில் இவருக்கு திரண்ட கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போயின.
விஜயை நோக்கி விமர்சனk கணைகளை வீசின. அவற்றையெல்லாம் அநாயாசமாக சமாளித்தவருக்கு அடுத்தடுத்து சோதனைகள்.
இப்போது அவர் நான்கு முனைத் தாக்குதலில் சிக்கி இருக்கிறார். கரூர் கூட்டம், இதற்கு பிள்ளையார் சுழி போட்டது.
3-ம் முறையாக சிபிஐ சம்மன்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர் நிகழ்வு தொடர்பாக தவெக தலைவர் விஜய், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே இரண்டு தடவை ஆஜரானார்.
அப்போது அவரை பல மணி நேரம் கேள்வி கணைகளால் சிபிஐ அதிகாரிகள் துளைத்து எடுத்தனர்.
இந்நிலையில், விஜய் மார்ச் 10-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
தேர்தல் வேலைகளில் இருப்பதால் நேரில் ஆஜாராக 15 நாட்கள் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால், சிபிஐ அவரது வேண்டுகோளை ஏற்கவில்லை. வரும் 15-ம் தேதி நேரில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது.
தேர்தலை எதிர்கொள்ள சரியான தோழமை இல்லாமை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு இரண்டு மாதங்கள் போராடியும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காதது, மனைவி சங்கீதாவின் விவாகரத்து நோட்டீஸ் என மேலும் 3 தாக்குதல்களை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
“விஜய்க்கு மூன்றாம் முறையாக சிபிஐ சம்மன் அனுப்பி இருப்பதும், மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தை சென்சார் போர்டு இன்னமும் பார்க்காமல் இழுத்தடிப்பதும் தவெகவை பாஜக கூட்டணிக்குள் இழுக்கும் தந்திரம்” என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.
“விஜய், பாஜக கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்து விட்டால், அவர் மீதான சி.பி.ஐ. விசாரணை கிடப்பில் போடப்படும் – ‘ஜனநாயகன்’ படத்துக்கு நாளையே தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும்” என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
“மாநில அரசையும், மத்திய அரசையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொண்டதால்தான் இவ்வளவு சிக்கல்கள் – இவற்றில் இருந்து விடுபட பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை” என விஜய்க்கு நெருக்கமானவர்கள், அவர் மனதைக் கரைத்து வருவதாக தகவல்.
‘கூட்டணி குறித்து இரண்டொரு நாட்களில் விஜய் முடிவெடுப்பார்’ என்கிறார்கள் தவெக வட்டாரத்தில்.
ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் குமைந்துள்ள விஜயை, நேற்று மேலும் ஒரு பேரிடி தாக்கியுள்ளது.
‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கி இருந்தது. படம் வெளியாவதற்கான அறிகுறியே தெரியாததால், அந்த உரிமத்தை அமேசான் ரத்து செய்து விட்டது.
இப்படிப்பட்ட நெருக்கடியில் என்ன முடிவு எடுக்கப்போகிறார் ‘ஜனநாயகன்’ என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– பாப்பாங்குளம் பாரதி