பெண் என்ற சொல் சக்தி, ஆற்றல், அறிவு, அன்பு என பலவகை பொருள் பொதிந்த ஒரு கருவூலம். இது வெறும் உயிரியல் வேறுபாட்டை மட்டும் குறிக்காமல், ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக, குடும்பத்தின் ஆதாரமாக, தேசத்தின் ஆணி வேராக விளங்குபவரை குறிக்கிறது.
தலைமுறைகளை வளர்த்தெடுப்பவள் பெண். இத்தகைய பெண் குழந்தைகளின் வளர்ச்சி என்பது சமூகத்தின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. இந்தக் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதி அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இது பெண் குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யவும், சமூகத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, சமூகத்தில் அவர்களுக்கு சம வாய்ப்பை வழங்குவது, கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற அடிப்படைத் தேவைகளை வலியுறுத்துவது, பாலின சமத்துவமின்மையை நீக்குவது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்.
இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் 2008-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்து இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
குழந்தைப் பருவம், பூப்படைதல், பதின்ம வயது, திருமண காலம் போன்ற பல்வேறு கால நிலைகளில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை எடுத்துரைப்பது பெற்றோரின் கடமை.
பெண் குழந்தைகள் தான் நாளைய சமூகத்தை உருவாக்குபவர்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
வளர் இளம் பெண் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தேசிய தகவல் துறையின் ஒத்துழைப்புடன் ‘online portal’ ஒன்றை மத்திய அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது அவர்களின் உடல்நலம், கல்வி, தனித்திறமை போன்ற அனைத்து தகவல்களையும் முறைப்படி வழங்கும்.
“பெண் குழந்தைகளைக் காப்போம் – பெண் குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்போம்” என்ற திட்டத்தின் மூலம் அவர்களுக்கான அடிப்படை கல்வி உறுதி செய்யப்படுகிறது. மேலும், செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக எதிர்கால நலனுக்கான சேமிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் 50,000 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000 ரூபாயும் அரசே வங்கியில் வைப்பு நிதியில் வைக்க வழிவகை செய்கிறது.
அரசு திட்டங்கள் போட்டு காப்பதை விட, மக்களின் மனமாற்றம் தான் முழுமையான வெற்றியைத் தரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
பெண் குழந்தை என்பது பல பரிணாம வளர்ச்சியோடு நமது வாழ்க்கையை பரிபூரணமாக்குகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் விடியலைக் கொண்டு வந்து விண்மீனாய் ஜொலித்திடும் பெண் குழந்தைகளைப் போற்றி பாதுகாப்பது நமது கடமை.
– எஸ்.வாணி