கிரீன்லாந்தை ‘வாங்கத்’ துடிக்கும் அமெரிக்கா!

அதிர வைக்கும் பின்னணித் தகவல்கள்

இன்று உலகின் ஒட்டுமொத்த பார்வையும் கிரீன்லாந்து நாட்டின் மீது குவிந்திருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தில் வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள தீவு நாடு.

தீவு என்றால், உலகிலேயே பெரிய தீவு. 21,66,086 சதுர கிலோமீட்டர் பரப்பளவு.

எளிதில் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டைவிட (1,30,060 சதுர கிலோமீட்டர்) 16.5 மடங்கு பெரியது!

ஆனால், மொத்த மக்கள் தொகை சுமார் 56,700 மட்டுமே!

சுமார் 80% பரப்பு எப்போதும் தடிமனான பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். 88% பேர் பனி சற்று குறைந்த கடற்கரையோர நகரங்களிலேயே வாழ்கிறார்கள்.

இந்த நாட்டைத்தான் “விலைக்கு வாங்க” தீர்மானித்துவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

விக்ரமாதித்ய அமெரிக்கா!

இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியாத ஒரு விசயம்… பல ஆண்டுகளாகவே, கிரீன்லாந்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறது அமெரிக்கா!

1867ல், அமெரிக்காவின் 17-வது அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க விரும்பினார்.

“அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், மீன்பிடி உரிமைகளுக்காகவும் கிரீன்லாந்து வேண்டும்” என்றார்.

ஆனால், இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காததால் விட்டுவிட்டார்.

1910ல், அமெரிக்காவின் 27-வது அதிபராக இருந்த வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் காலத்திலும் ஒரு முயற்சி நடந்தது. இது ஒரு வித்தியாசமான பண்டமாற்று முறை.

அப்போது பிலிப்பைன்ஸ் நாடு அமெரிக்காவின் கையில் இருந்தது.

கிரீன்லாந்தை ஆண்ட டென்மார்க் நாட்டிடம், “எங்க கிட்ட இருக்கிற பிலிப்பைன்ஸை நீங்க வச்சுக்குங்க.. உங்ககிட்ட இருக்கிற கிரீன்லாந்தை கொடுங்க” என்றது அமெரிக்கா.

இந்த டீலும் சக்ஸஸ் ஆகவில்லை.

1946ல், அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன், “100 மில்லியன் டாலர் தருகிறோம். கிரீன்லாந்தை விட்டுக் கொடுங்க” என்று டென்மார்க்கிடம் கேட்டது. அந்த நாடு மறுத்துவிட்டது.

ஆனாலும் அப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளுக்கு சோவியத் யூனியன், பெரும் சவாலாக இருந்தது அல்லவா.

அதனால், கிரீன்லாந்தில் ஒரு ராணுவத் தளத்தை அமைத்துக்கொள்ள மட்டும் அமெரிக்காவுக்கு பச்சைக்கொடி காட்டியது டென்மார்க்.

பற்பல ஆண்டுகள் கழித்து…

இப்போதைய டிரம்ப், 2019ம் ஆண்டிலும் அமெரிக்க அதிபராக இருந்தார் அல்லவா.. அவர்தான் கிரீன்லாந்தை வாங்குவது என மீண்டும் ஆரம்பித்தார்.

இப்போது, மீண்டும் அதிபர் ஆனவுடன், மிகத் தீவிரமாக அந்த முயற்சியில் இறங்கிவிட்டார்.

கிரீன்லாந்தை இணைக்க டிரம்ப் துடிப்பது ஏன்?

1. ராணுவ முக்கியத்துவம்

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து ஒரு “இயற்கையான கோட்டை” போன்றது.

ரஷ்யா அல்லது வடகொரியா போன்ற நாடுகள் அமெரிக்கா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால், அவை வட துருவம் வழியாகவே வரும்.

கிரீன்லாந்து அமெரிக்காவின் வசம் இருந்தால், அங்கு அதிநவீன ரேடார்களையும், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளையும் (Golden Dome) நிறுவி, அமெரிக்க மண்ணைத் தொடும் முன்பே அவற்றை அழிக்க முடியும்.

தவிர, தற்போது ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா தனது ராணுவ நடமாட்டத்தை அதிகரித்து வருகிறது.

அதைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து ஒரு மிகச்சிறந்த ராணுவத் தளமாக (Base) அமையும்.

2. அபரிமிதமான கனிம வளங்கள்

எதிர்காலத் தொழில்நுட்ப உலகை ஆளப்போவது கனிம வளங்கள் தான். கிரீன்லாந்தின் பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ள வளங்கள் விலைமதிப்பற்றவை:

ஸ்மார்ட்போன்கள், விண்கலங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் பேட்டரி தயாரிக்கத் தேவையான கனிமங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.

தற்போது இந்த கனிம வளங்களில் சீனா உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. கிரீன்லாந்தை அடைவதன் மூலம் சீனா மீதான தனது சார்புநிலையை அமெரிக்காவால் குறைக்க முடியும்.

தவிர, இங்கு நிலக்கரி, இரும்பு, தங்கம் மற்றும் வைரம் தவிர, மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதும் அமெரிக்காவைக் கவர்ந்திழுக்கிறது.

3. புதிய கடல் வழிப் பாதைகள்

புவி வெப்பமடைதலால் கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இது ஒருபுறம் ஆபத்து என்றாலும், மறுபுறம் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குகிறது.

பனி உருகுவதால், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே புதிய கடல் வழிப் பாதைகள் உருவாகின்றன.

இந்த வழித்தடங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிரீன்லாந்தை வைத்திருப்பவர்களுக்கே கிடைக்கும்.

இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்கா மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த முடியும்.

கிரீன்லாந்து மீது கண் விழ, இதற்கு மேல் அமெரிக்கவுக்கு காரணங்கள் வேண்டுமா என்ன…?

@ என்னவிலை கிரீன்லாந்தே..?

கிரீன்லாந்துக்கு டிரம்ப், என்ன விலை நிர்ணயித்து இருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

விலையை தீர்மாணிக்க, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தலைமையில் பொருளாதார நிபுணர்கள் குழுவை அமைத்தார் டிரம்ப்.

அவர்கள் தீவிரமாக ஆராய்ந்து, “$700 பில்லியனில் ஆரம்பித்து $2.8 டிரில்லியன் முடிக்கலாம்” என்கிறார்கள். அதாவது ₹63 லட்சம் கோடி முதல் ₹250 லட்சம் கோடி வரை.

இந்த விலையானது கிரீன்லாந்து நாட்டில் உள்ள கனிம வளங்கள், நிலப்பரப்பு மற்றும் அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளது.

@ யாரிடம் பணம் கொடுக்க திட்டம்?

கிரீன்லாிந்து, டென்மார்க் நாட்டின் பாதுகாப்பில் இருக்கிறது. ஆனாலும் தன்னாட்சி பிரதேசம்.

ஆகவே, கிரீன்லாந்து மக்கள் 56,000 பேருக்கும் தனித்தனியாக $10,000 முதல் $100,000 வரை (இந்திய மதிப்பில் சுமார் ₹9 லட்சம் முதல் ₹90 லட்சம் வரை) பணம் கொடுத்து, அவர்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைக்கவும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

@ நோ சேல்!

ஆனால், “எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல” என்று கொடி பிடித்து போராடத் துவங்கி விட்டார்கள், கிரீன்லாந்து மக்கள்.

அவர்கள், “நாங்கள் பற்பல ஆண்டுகள் டென்மார்க் பிடியில் இருந்தோம்.

பிறகு டொமினியன் குடியரசு என்கிற அளவில் தன்னாட்சி பிரதேசம் ஆனோம். கடந்த 2019ல் தான் கூடுதல் அதிகாரம் கிடைத்தது.

இப்போதுதான் தனிநாடு என்கிற அமைப்புக்கு சென்று கொண்டு இருக்கிறோம். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்க மாட்டோம்” என்கிறார்கள்.

அவர்களிடம், “அமெரிகாதான் இப்போது ஒன்னாம் நம்பர் மிரட்டல் நாடு.. பொருளாதாரத்திலும் கில்லாடி. அந்த நாடு உங்களை அடிமைப்படுத்தவில்லை. இணைத்து உங்களையும் அமெரிக்கர் ஆக்குகிறது. பிறகு ஏன் பிடிவாதம்” என்று கேட்டால் முறைக்கிறார்கள்.

“எங்களுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் தேவையில்லை. கிரீன்லாந்து என்கிற என்கிற தாய்வீடு, தாய் மொழியே தேவை” என்கிறார்கள்.

@ இன்னொரு வழி!

இவர்களது போராட்டத்தை அடுத்து, அமெரிக்கா இன்னொரு வழியையும் யோசித்து வருகிறது.

கிரீன்லாந்து தனது தன்னாட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம், ஆனால் அமெரிக்கா அங்கு தனது ராணுவத் தளங்களை அமைக்கவும், கனிம வளங்களை எடுக்கவும் அமெரிக்கா பிரத்யேக உரிமை பெறும்.

இதற்குப் பதிலாக அமெரிக்கா கிரீன்லாந்திற்கு ஆண்டுதோறும் ஒரு பெரும் தொகையை நிதியுதவியாக வழங்கும்.

“ஆகவே ஆகாது” என்று கொடியை இறக்காமல் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் கிரீன்லாந்து மக்கள்.

@ படைகள் குவிப்பு!

இந்த நிலையில்தான் இரு நாட்களுக்கு முன் டென்மார்க், பிரான் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் அதிரடியாக ஒரு செயலை புரிந்திருக்கின்றன.

ஆம்.. கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் தங்களது கூட்டு ராணுவப் பயிற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளன.

கிரீன்லாந்தின் பாதுகாப்புப் பொறுப்பு டென்மார்க்கிடம் இருப்பதால், அவர்கள் அங்குள்ள தங்களது ‘ஆர்க்டிக் கமாண்ட்’ (Arctic Command) பிரிவை வலுப்படுத்தியுள்ளனர்.

டென்மார்க்கிற்கு ஆதரவாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களது கண்காணிப்பு விமானங்கள் மற்றும் நவீன ரேடார்களைப் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளன.

ஆனால், அமெரிக்கா அசரவில்லை.

கிரீன்லாந்தில் அதற்கு ஒரு ராணுவளம் இருப்பதாக பார்த்தோம் அல்லவா.. அங்கே கூடுதல் வீரர்களை அனுப்பி உள்ளது.. அதோடு கூடுதல் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளையும் நிறுவி வருகிறது.

ராணுவ மோதல் வருமா? அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் (டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்றவை) பல ஆண்டுகளாக நேட்டோ என்ற ஒரே ராணுவக் கூட்டணியில் அங்கமாக உள்ளன.

தவிர இந்த நாடுகளுக்கு இடையில் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆகவே போர் என்பதை இந்த நாடுகள் கொஞ்சம் யோசிக்கத்தான்செய்யும்.

ஆனாலும் கிரின்லாந்தை தன்னுடன் இணைக்க அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

இன்னொரு அதிர்ச்சி தகவல்…!

தற்போது அமெரிக்காவில் ஐம்பது மாகாணங்கள் உள்ளன. ஆனால், சுதந்திரம் அடைந்த 1776ல் பதின்மூன்று மாகாணங்கள்தான் இருந்தன.

அப்படியானால் 37 மாகாணங்களை எப்படி அமெரிக்கா இணைத்தது… அது பெரும் அதிர்ச்சிகள் நிறைந்த வரலாறு.

அதை, பிறகு பார்ப்போம்…!

– பத்திரிகையாளர் டி.வி. சோமு

You might also like