அதிகாரபூர்வமான முறையில் முதலாவது கூடைப் பந்தாட்டப் போட்டி மசாச்சூசெட் நகரில் நடைபெற்ற நாள் ஜனவரி 20. 1892-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த போட்டி நடைபெற்றது.
அந்த வகையில் பார்த்தால் இன்றைக்கு கூடைப்பந்து விளையாட்டின் பிறந்த நாள். இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர் கனடா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் நெய்ஸ்மித்.
கனடா நாட்டில் பிறந்து 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித்.
ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கல்லூரியில் பணியாற்றிய அவர், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் தினமும் விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
பனிக்காலங்களின்போது வெளியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானத்துக்கு வராமல் இருந்தனர்.

இப்படியே இருந்தால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்டார் நிஸ்மித்.
இந்நிலையில் மாணவர்கள் உள் அரங்கிலேயே ஆடும் வகையில் அவர் உருவாக்கிய விளையாட்டுதான் கூடைப்பந்து.
ஒரு கூடையை எடுத்து, அதன் அடிப்பாகத்தை வெட்டியவர், அதை கல்லூரி விடுதியின் பால்கனியில் மாட்டினார். அந்த கூடைக்குள் துல்லியமாக பந்தை நுழைக்கும் வீரர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்.
காலப்போக்கில் மாணவர்களுக்கு இதில் ஆர்வம் வர, அதை 2 அணிகள் ஆடும் ஆட்டமாக மாற்றியுள்ளார் நெய்ஸ்மித். இதற்காக செவ்வக வடிவில் ஒரு மைதானத்தை அமைத்து அதன் 2 புறங்களிலும் தலா ஒரு கூடையைத் தொங்கவிட்டார்.
மைதானத்தில் மோதும் 2 அணிகளும், எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக்குச் சென்று அங்குள்ள கூடைக்குள் பந்தை போடுவதை இலக்காகக் கொண்ட ஆட்டமாக கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கினார்.
இதன்படி 1891-ம் ஆண்டில் ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் முதல் முறையாக கூடைப்பந்து விளையாடப்பட்டது.
கல்லூரியின் விடுதியில் தொடங்கிய கூடைப்பந்து விளையாட்டு, அதன்பின்னர் உலகம் முழுவதும் வேகமாகபரவியது.
இதைத்தொடர்ந்து சர்வதேசக் கூடைப் பந்து கூட்டமைப்பான ஃபிபா (FIBA), 1932-ம் ஆண்டு ஜூன் 18-ம்தேதி தொடங்கப்பட்டது.
கூடைப்பந்து விளையாட்டுக்கான விதிகளை ஃபிபா அமைப்பு மேலும் செதுக்கியது.
28 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலம் கொண்டதாக கூடைப்பந்து மைதானங்கள் விளங்குகின்றன.

இதில் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியிலும் தலா 5 வீரர்கள் பங்கேற்பார்கள்.
இதைத்தவிர ஒவ்வொரு அணியும் மாற்று வீரர்களாக 7 பேரை மைதானத்துக்கு வெளியில் வைத்திருக்கலாம்.
போட்டியின்போது கூடைக்கு அருகில் சென்று அதற்குள் பந்தைச் செலுத்தினால் 2 புள்ளிகளும், அரை வட்டத்துக்கு வெளியில் இருந்து கூடைக்குள் பந்தைச் செலுத்தினால் 3 புள்ளிகளும், ஃப்ரீ த்ரோ மூலம் பந்தை கூடைக்குள் செலுத்தினால் 1 புள்ளியும் வழங்கப்படும்.
1936-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன. இதில் அமெரிக்க அணி அதிக முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
– பி.ம். சுதிர்