என்னை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தவர் பிரபஞ்சன்!

எழுத்தாளர் சோ. தர்மன்

1980-ம் வருடம் முதல் என்னுடைய சிறுகதைகள் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தன.

ஒரு தொகுப்பு கொண்டுவருகிற அளவுக்கு வெளியான கதைகள் இருந்தும் நான் என் செலவில் புத்தகம் போடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.

என் எழுத்தில் உயிர் இருந்தால் யாராவது புத்தகமாக கொண்டு வரட்டும் இல்லையென்றால் கிடக்கட்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

1994-ம் ஆண்டு ‘தினமணி’ நாளிதழில் ஒரு விளம்பரம் வந்தது. அதாவது “சிறுகதைகள் எழுதி பத்திரிகைகளில் பிரசுரமாகி புத்தகமாக வெளியிடப்படாத கதைகளை முற்றிலும் இலவசமாக முதல் புத்தகமாக நாங்கள் அச்சிட்டு புத்தகமாக்கி தருகிறோம்.

பிரசுரமான கதைகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும் ‘முகவரி. சிந்து பதிப்பக அறக்கட்டளை, ராயப்பேட்டை, சென்னை.’

உடனே பத்திரிகைகளில் வெளிவந்த என்னுடைய பனிரெண்டு சிறுகதைகளை நான் அந்த முகவரிக்கு அனுப்பி வைத்தேன். அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. உடனடியாக எனக்கு பதில் வந்தது.

“உங்கள் கதைகளை நாங்கள் புத்தகமாக்குவதற்காக தேர்வு செய்திருக்கிறோம். உடனே புறப்பட்டு சென்னை வாருங்கள்.

உங்களுடைய போக்குவரத்து மற்றும் உள்ள அனைத்து செலவுகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

உடனே புறப்பட்டு சென்னை சென்று முகவரியைக் கண்டு பிடித்து உள்ளே சென்றால் நான் பெரிதும் மதிக்கக் கூடிய எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்.

அப்போதுதான் அவரை முதன் முதலாக நேரில் சந்திக்கிறேன்.

“வாங்க தர்மன் வாங்க இப்பிடி உட்காருங்க, யார்னு தெரியல ரொம்ப பணம் வச்சிருப்பான் போல இருக்கு, ஏதோ அறிவிப்பு விட்டானாம் நிறைய கதைகள் வந்திருக்கு என்னைய கூப்பிட்டு கணிசமான ஒரு தொகை குடுத்து நீங்கதான் கதைகளை செலக்ட் செஞ்சு குடுக்கணும்ணு சொன்னான்.

நான்தான் உங்களோட கதைகளை செலக்ட் பண்ணி குடுத்தேன். நீங்க ஒன்னும் புது எழுத்தாளர் மாதிரி தெரியலையே, பக்குவப்பட்ட கை மாதிரியில்ல இருக்கு”

அப்படி வெளிவந்ததுதான் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஈரம்’. பிரபஞ்சன் முன்னுரை, மரியாதைக்குரிய டிராட்ஸ்கி மருது அவர்களின் அட்டைப் படம்.

ஏ.வி.எம். இராஜேஷ்வரி கல்யாண மகாலில் வைத்து பெரிய அளவில் வெளியீட்டு விழா. சென்னையின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இப்பிடித்தான் நான் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் புண்ணியத்தில் வெளியுலகுக்கு தெரிந்த எழுத்தாளரானேன்.

You might also like