தனது நகைச்சுவைப் பேச்சால் பட்டிதொட்டி முதல் ஃபாரின் வரை ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி,
பட்டிமன்றம், பாட்டுமன்றம், அரசியல், பொதுக்கூட்டம் என எப்பொழுதும் தன்னை பொதுவெளியில் மிகுந்த ஈடுபாட்டுடன் வைத்திருப்பவர்.
ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் லியோனி மேடை, பேச்சாளர்கள், கூட்டம் இது மூன்றும் இல்லாமல் தன் ரசிகர்களை நேரடியாக சந்திக்க எண்ணி அதற்காக உருவாக்கியதுதான் ‘லியோனி டாக்கீஸ்’ என்ற யூ டியூப் சேனல்.
இந்த சேனல் மூலம் தன் ரசிகர்களை வசப்படுத்தி இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
இதனிடையே விகடன் இதழுக்கு திண்டுக்கல் ஐ. லியோனி முன்பு அளித்த பேட்டியிலிருந்து…
‘கங்கா கெளரி’ பட வாய்ப்பு எப்படி வந்தது? அந்தப் படத்துல நடிச்ச அனுபவம்?
“நெய்வேலியில ஒரு பட்டிமன்றத்துக்காகப் போயிருந்தேன். அப்போ, “சினிமா புரொடக்ஷன் மேனேஜர் ஒருத்தர் இயக்குநரோட உங்களைப் பார்க்க வந்திருக்கார்”னு சொன்னாங்க. அந்தப் பட்டிமன்றத்தை முடிச்சிட்டு அவங்களைச் சந்திச்சேன்.
அப்போ இயக்குநர் மாதேஸ்வரன், ‘கங்கா கெளரி’னு ஒரு படம். அதுல அருண் விஜய்க்கும் வடிவேலுவுக்கும் அப்பாவா நடிக்கணும்.
உங்க பட்டிமன்றங்கள் பார்த்திருக்கேன். நீங்கதான் இந்த கேரக்டருக்கு சரியா இருப்பீங்கன்னு தோணுச்சு. அதனால இந்த கேரக்டருக்கான வசனம் எல்லாமே நீங்க பேசுற ஸ்டைல்லதான் எழுதியிருக்கேன்’னு என்னைத் தேடி வந்து ரொம்ப ஆசைப்பட்டுக் கேட்டார்.
அப்படிதான் அந்தப் படத்துல நடிச்சேன். ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருந்தது.
அது ஃபிலிம் ரோல் சமயம். அதிக டேக் வாங்கினா, ’என்ன இப்படி ரீலை சாப்பிடுறாப்ள’னு சொல்லுவாங்கனு ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்மோர் வராம பார்த்து நடிச்சேன். அதுக்கு அருண் விஜய்யும், வடிவேலுவும் அவ்ளோ சப்போர்ட்டா இருந்தாங்க.”
‘கங்கா கெளரி’க்குப் பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?
‘கங்கா கெளரி’ படத்துக்குப் பிறகு, `காதலர் தினம்’ படத்துல இயக்குநர் கதிர் நடிக்கக் கூப்பிட்டார்னு அந்தப் படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல கல்லூரி காதல் சுகமா, சுமையாங்கிற தலைப்புல பட்டிமன்றம் நடக்கும்.
`சுகம்’னு குணால் பேசுவார்; `சுமை’னு சின்னி ஜெயந்த் பேசுவார். பெங்களூர்ல ஒன்பது நாள் ஷூட்டிங் நடந்தது.
இதுல குணால் பேசுறதைப் பார்த்து ஹீரோயின் சோனாலி பிந்த்ரேவுக்கு லவ் வர்ற மாதிரி சீன். அந்தப் பட்டிமன்றத்தோட நடுவரா நான்தான் நடிச்சிருந்தேன், டப்பிங்கும் பேசியிருந்தேன். படம் ரிலீஸானதுக்கு அப்புறம் பார்த்தா நான் நடிச்சது எதுவுமே இல்ல.
இயக்குநர்கிட்ட கேட்டப்போ, `இல்ல சார். இந்தப் படத்துல கவுண்டமணி சார், மணிவண்ணன் சார், சின்னி ஜெயந்த்னு நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாங்க.
அதுல உங்களுடைய சீன் ரொம்ப ப்ரைம் சீனா இருந்துச்சு. `நாங்களே கம்மியான சீன்ல நடிச்சிருக்கோம். புதுசா வந்தவருக்கு இவ்ளோ பெரிய கேரக்டர்’னு அவங்க ஃபீல் பண்ணாங்க. அதனால அந்த சீனைத் தூக்கிட்டோம்’னு சொன்னார்.
என்னடா இவ்ளோ கஷ்டப்பட்டு பெங்களூர் கூட்டிட்டுப் போய் நம்மளை நடிக்கவெச்சு அதைப் படத்துல இருந்து தூக்கிட்டாங்களே… இனி சினிமா நமக்கு செட்டாகாதுனு அதுக்குப் பிறகு எந்தப் படத்துலேயும் நடிக்காம இருந்தேன்.
`சிவாஜி’ படத்துலகூட ஸ்ரேயா அப்பாவா நடிக்க 45 நாள் கூப்பிட்டாங்க. இதே மாதிரி ஆகிடுமோனு நான் போகலை. தவிர, அந்த நேரத்துல பட்டிமன்றங்கள்ல ரொம்ப பிஸியா இருந்தேன். அப்புறம்தான் பட்டிமன்றம் ராஜா நடிச்சிருப்பார்.
ஏவிஎம் தயாரிப்பு, ஷங்கர் சார் இயக்கம், ரஜினி சார்கூட நடிக்கிற வாய்ப்பு இதை எல்லாம் மிஸ் பண்ணிட்டேன். அதுல நடிச்சிருக்கலாமோனு இப்போ தோணுது.”
‘பன்னிக்குட்டி’ படத்துல நடிக்க என்ன காரணம்?
‘அனுசரண் இயக்கின `கிருமி’ங்கிற படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். படம் பார்த்துட்டு அவர்கிட்ட பேசியிருக்கேன். ஒருமுறை என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தவர், “சார் உங்களை வெச்சு ஒரு படம் எடுக்கணும்”னு சொன்னார்.
வேணாம்னு, நடந்த விஷயம் எல்லாம் சொன்னேன். `ஒரு கேரக்டர் இருக்கு. அதை நீங்க பண்ணாதான் சரியா இருக்கும்’னு சொல்லிட்டு படத்துக்குப் பெயர் `குட்டியானை’னு வெச்சிருக்கதா சொன்னார்.
ஆனா, அது `பன்னிக்குட்டி’யா மாறிடுச்சு. சினிமாவுல என்னய்யா பெயர் வைக்குறாங்கன்னு பட்டிமன்றத்துல கலாய்ச்சிருக்கேன். ஆனா, நான் நடிச்ச படத்துக்குப் பெயர் `பன்னிக்குட்டி’.
`எல்லாப் படப் பெயரையும் கலாய்ச்ச லியோனியின் அடுத்த படம் `பன்னிக்குட்டி’னு மீம்ஸ் போட்டு கலாய்ப்பாங்களே’னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.
`அப்படி நடந்தா நம்ம படத்துக்கு பப்ளிசிட்டிதானே சார்’னு சொன்னார். இதுல குறி சொல்ற ஜோசியக்காரரா நடிச்சிருக்கேன். அந்த கேரக்டரை அனுசரண் ரொம்ப அழகா நேர்த்தியா வடிவமைச்சிருந்தார்.
எல்லாப் பிரச்னைகளும் அதுக்கான தீர்வோடுதான் ஆரம்பிக்கும். ஆனா, அதுக்குள்ள நம்ம ஜோசியம், பரிகாரம்னு போய் விழுந்திடுறோம், பரிகாரத்துனாலதான் தீர்வு கிடைச்சதுனு நம்புறோம்.
ஆனா, நம்பிக்கையா இருந்தா அந்தப் பிரச்சனை தானாவே சரியாகிடும்னு கடைசியா நல்ல மெசேஜ் இருக்கும். அதனாலதான் இதுல நடிக்க ஓகே சொன்னேன்.”
‘பன்னிக்குட்டி’ படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?
“நிலக்கோட்டை பக்கத்துல ஒரு மலையில இருக்கிற குகையிலதான் ஷூட்டிங் நடந்தது. மலை மேல இரண்டரை கிலோமீட்டர் கூட்டிட்டுப் போனாங்க.
ஸ்பாட்டுக்குப் போறதுக்குள்ள கிறுகிறுனு வந்திடுச்சு. அப்புறம் தண்ணி, கூல் ட்ரிங்க்ஸ்னு கொடுத்துக் கூட்டிப் போனாங்க. 5 நாள் ஏறி இறங்குனதுல 6-வது நாள் பழகிடுச்சு.
யோகிபாபு, கருணாகரன், ராமர், தங்கதுரைனு படத்துல நடிச்சவங்க எல்லோரும் செம ஹ்யூமர் சென்ஸ் உள்ள நபர்கள். யோகிபாபுகூட நடிக்கணும்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா, அவருக்கும் எனக்கும் காம்பினேஷன் இல்லாமல் போயிடுச்சு.
சினிமாவுக்குப் பொருத்தமான எந்தவொரு குணாதியமும் இல்லாத முகம் அவருடையது. அதை வெச்சுக்கிட்டு இன்னிக்கு சினிமாத் துறையில இந்தளவுக்கு ஜெயிச்சிருக்கார்னா அதுக்குத் தனி ஆற்றல் வேணும். அதை நான் நேசிக்கிறேன். இன்னும் அவரை நேர்ல சந்திச்சதில்லை. சீக்கிரம் சந்திக்கணும்.
‘ஜிகர்தண்டா’ படத்துல கருணாகரனுடைய நடிப்புக்கு நான் ரசிகன். ஒருமுறை அவர்கிட்ட போன்ல பேசும்போது கலைஞருடைய உதவியாளர் சண்முகநாதனின் அக்கா மகன்னு சொன்னார். அதனால இன்னும் நெருக்கமாகிட்டோம்.”
ராமர், தங்கதுரைனு எல்லோரும் உங்க வேவ் லெங்த்லேயே இருந்திருப்பாங்களே!
“ஆமா. நாங்க எல்லோரும் ஹ்யூமர் டிபார்ட்மென்டுங்கிறதுனால எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க்அவுட் ஆகியிருக்கு.
ராமர் பர்ஃபாமென்ஸை நான் ரொம்ப ரசிப்பேன். நேர்ல அவர்கூட நடிக்கிறது செம ரகளையா இருந்தது. ராமர் அவர் ஸ்டைல்ல நிறைய பாட்டுப் பாடிட்டிருப்பார்.
நாங்க சிரிச்சுக்கிட்டே இருக்கிறதை கன்ட்ரோல் பண்ணமுடியாம ப்ரேக் விட்ருவார்.
தங்கதுரை என்கிட்ட, “சார் உங்க பட்டிமன்றத்துல வந்த பழைய ஜோக்கை எல்லாம் எடுத்து ஒரு நோட்ல எழுதிவெச்சு நிகழ்ச்சியில சொன்னேன். அப்படி நீங்க ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி சொன்ன நல்ல ஜோக்கதான் சார் சொன்னேன்.
ரெண்டாவது ஜோக்லயே பழைய ஜோக்னு கண்டுபிடிச்சுட்டாங்க. அதுக்கு அப்புறம், நானா புது ஜோக் எழுதி சொன்னாக்கூட அதைப் பழைய ஜோக்னு சொல்லி, பழைய ஜோக் தங்கதுரைனு பெயரே வெச்சுப்புட்டாங்க சார்’னு சொல்லி சிரிச்சார்.”
`ஆலம்பனா’ படத்துல உங்களுக்கு என்ன கேரக்டர்?
“இந்தப் படத்துடைய இயக்குநர் பாரி கே.விஜய் `முண்டாசுப்பட்டி’ படத்துல அசோஸியேட் டைரக்டர்.
ஒருநாள் என் வீட்டுக்கு வந்து, `உங்களுடைய பட்டிமன்றங்களுக்கு நான் பெரிய ரசிகன். இதுல ஒரு தாத்தா கேரக்டர் இருக்கு. அதுக்காக நிறைய நடிகர்களைப் பொருத்திப் பார்த்தேன். எனக்கு செட்டாகலை.
அந்தச் சமயத்துல உங்க பட்டிமன்றம் டிவியில ஓடிக்கிட்டு இருந்தது. அப்போ நீங்க தாத்தா பேரன் உறவைப் பத்திப் பேசிகிட்டிருந்தீங்க. உடனே முடிவு பண்ணி உங்களைப் பார்க்க வந்திருக்கேன்’னு சொன்னார்.
இதுல நான் வைபவ்வுக்கு தாத்தா, பாண்டியராஜன் சாருக்கு அப்பாவா நடித்தேன். என் மனைவியா `நக்கலைட்ஸ்’ தனம் நடிச்சாங்க.
படத்தோட இயக்குநர் எனக்கு வசனத்தை மட்டும் சொல்லிட்டு `இதை உங்க பட்டிமன்றம் ஸ்டைலுக்கு நீங்க எப்படி வேணாலும் சொல்லுங்க’னு எனக்கு அவ்ளோ சுதந்திரம் கொடுத்தார்.
இனி உங்களை சினிமாவுல அதிகம் பார்க்கலாமா?
“நிச்சயம் பார்க்கலாம். என் வாழ்க்கையில அவ்ளோ பட்டிமன்றங்கள்ல பேசிட்டேன். அதெல்லாம் ஆடியோ, வீடியோனு வெளியாகி இப்போ யூ-டியூபிலும் இருக்கு.
இனிமேல் மேடை பட்டிமன்றங்களைக் குறைச்சுக்கிட்டு சினிமா மூலமா மக்களை சந்தோஷப்படுத்தணும்னு ஆசை வந்திருக்கு. இது லியோனி 2.0″
– உ. சுதர்சன் காந்தி
- நன்றி: விகடன்