என் பாடல்கள் இப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது மகிழ்ச்சியே!

இசையமைப்பாளர் தேவா நெகிழ்ச்சி

தேனிசைத் தென்றல் தேவா பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.

கேள்வி: தேவா என்றாலே கானா பாடல்கள் என்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. அந்த அடையாளம் உங்களுக்கு சரியாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா?

பதில்: நான் இசையமைக்க வந்து பல ஆண்டுகள் கழித்துதான் கானா பாடல்களை உருவாக்கினேன். ஆனால், என்னை உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டுபோனது கானா பாடல்கள்தான்.

அதேநேரம் என்னுடைய ‘மெலடி’ பாடல்களையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ஆகவே இரண்டும் இரண்டு கண்களைப் போலத்தான்.

கானா பாடல்கள் முன்வரிசை ரசிகர்களுக்கானது. ‘மெலடி’ பாடல்கள் பின்வரிசை ரசிகர்களுக்கானது. இந்த இரு தரப்பினரையும் திருப்திப்படுத்துவதுதான் என் வேலை.

கேள்வி: ‘ஆசை’, ‘குஷி’ போன்ற படங்களில் வித்தியாசமான ‘மெலடி’ பாடல்களைக் கொடுத்தீர்கள். இருந்தபோதும் கானா பாடல்கள் உங்கள் அடையாளமாக இருக்கிறதே!

பதில்: எங்காவது போனால், “இந்த கானா பாட்டெல்லாம் பாடுவாருல்ல, அவரு” என்பார்கள். ‘கானாவின் தந்தை’ என்பார்கள். அப்போது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

நாம் நிறைய ‘மெலடி’ பாடல்களைக் கொடுத்திருக்கிறோம். வெவ்வேறுவிதமான பாடல்களைத் தந்திருக்கிறோம்.

அதை யாரும் சுட்டிக்காட்ட மாட்டேன் என்கிறார்களே, கானா பாடல்களிலேயே முத்திரை குத்திவிட்டார்களே என்று ‘ஃபீல்’ பண்ணுவேன்.

இருந்தாலும் கானாக்கள் என் சிறப்பம்சமாக ஆகிவிட்டன. எத்தனையோ இசையமைப்பாளர்கள் ‘மெலடி’ பாடல்களைத் தருகிறார்கள்.

அவர்களில் ஒருவராகிப் போயிருப்பேன். ஆனால், கானா பாடல்களைத் தந்ததால்தான் வித்தியாசமாக நிற்கிறேன்.

உலகமெங்கும் வசிக்கும் தமிழ் மக்கள் தங்கள் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் அந்த கானா பாடல்களைப் பயன்படுத்துவதைக் கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: நீங்கள் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள். ஆனால், சமீபத்தில் ‘கர்ணன்’ படத்தில் நீங்கள் பாடிய ‘மஞ்சனத்தி’ பாடலும் ‘மாமன்னன்’ படத்தில் நீங்கள் பாடிய ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடலும் வித்தியாசமாக இருந்தன. அந்தப் பாடல்களுக்கான வாய்ப்பு எப்படி வந்தது?

பதில்: அதற்கு இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணனும் ஏ.ஆர்.ரஹ்மானும்தான் காரணம்.

‘மஞ்சனத்தி’ பாடலாவது நான் ஏற்கெனவே பாடியுள்ள பாடல்களை ஒத்ததாக இருக்கும்.

ஆனால், ‘நெஞ்சமே.. நெஞ்சமே’ பாடலைப் போன்ற பாடல்களை நான் பாடியதில்லை.

“வேறு யாரிடமாவது கொடுக்க வேண்டிய பாட்டை எனக்குக் கொடுத்துவீட்டீர்களா? எனக்காக உருவாக்கிய பாடல்தானா?” என்று சந்தேகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்டேன்.

“நீங்க பாடிப் பாருங்க, உங்க குரலுக்கு இந்தப் பாட்டு வேற மாதிரி இருக்கும்” என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

ஆனால், அந்தப் பாட்டுக்குக் கிடைத்த வரவேற்பே தனி. எங்கு போனாலும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.

கானா பாட்டுக்குப் பதிலாக, ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாட்டைக் கொஞ்சம் பாடுங்க என்றுதான் இப்போது சொல்கிறார்கள்.

வேறு சில இசைமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறேன். ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறேன். அது முற்றிலும் வேறு மாதிரியான பாட்டு.

அதேபோல, ஜிப்ரான் இசையமைக்கும் படத்தில், கிளாசிக்கலான ஒரு கானா பாடலைப் பாட வைத்திருக்கிறார்.

இப்போது வரும் இளம் இசையமைப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

கேள்வி: சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ‘தூதுவளை இலை அரைச்சு’ பாடலை குழந்தை ஒன்று பாடி, அது வைரலானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இசை அமைக்கும் பாடல் ஒன்று மீண்டும் பிரபலமாவது எப்படி இருக்கிறது?

பதில்: இதைவிட வேறென்ன வேண்டும்? 1991இல் இசை அமைத்த பாடல் அது. பேருந்துகளில் மிகப் பிரபலமான பாடல் என்பார்கள்.

ஆனால், பல வருடங்களாக அது நான் இசையமைத்த பாடல் எனப் பெரிதாக யாருக்கும் தெரியாது. மேக்னா சுரேஷ் என்ற அந்தக் குழந்தை பாடியபோது… அதை என்னவென்று சொல்வது?

அந்தப் பாட்டில் ஒரு லவ் கெமிஸ்ட்ரி இருக்கும். அது கொஞ்சம் கூடக் குறையாமல் அந்தக் குழந்தை பாடினார். அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டேன்.

எப்போதோ போடப்பட்ட பாட்டை இப்போதுள்ள குழந்தை பாவத்தோடு பாடும்போது, அதைவிட என்ன வேண்டும்? மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

யு டியூபில் சிலர் ரீல்ஸ் செய்யும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: தேவா பாடல்கள் எனத் தெரியாமலே ஹிட் ஆன பாடல்கள் பற்றி…?

பதில்: அந்த காமெடியை ஏன் கேட்கிறீர்கள்? இப்போது நிறைய ‘லைவ் கான்செர்ட்’கள் செய்கிறேன். அங்கே நான் என்ன பாடல்களைப் பாடப் போகிறேன் என்பதை முன்பே ஒரு பட்டியல் அனுப்ப வேண்டும். நானும் அனுப்புவேன்.

அதைப் பார்த்துவிட்டு, “சார் நீங்க உங்க பாடல்களை மட்டும் பாடினால் போதும். மற்றவர்கள் இசையமைத்த பாடலைப் பாட வேண்டாம்” என்பார்கள். “அதிலிருக்கும் பாட்டெல்லாம் என் பாட்டுத்தான்” என்பேன்.

“சார், புல்வெளி புல்வெளி பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள். அது நீங்க இசையமைத்த பாடலா?” என்றார்கள்.

‘நேருக்கு நேர்’ படத்தில் ஆஷா போன்ஸ்லே பாடிய பாடல் நீங்க இசையமைத்ததா என்கிறார்கள். அப்போதெல்லாம் எனக்கு மனசு வலிக்கும்.

பாடல் ஹிட்டாகியிருக்கிறது. ஆனால், அதற்கு நான்தான் இசையமைத்தேன் என்பது தெரியவில்லையே.. ஏன் இப்படி என்று யோசிப்பேன்.

35 ஆண்டுகளில் இதுதான் என் பாடல்கள் எனத் தெரியாமேலேயே போய்விட்டதே என்று நினைப்பேன்.

ஆனால், சில நாட்களுக்கு முன்பாக “பஞ்சு மிட்டாய் சேலைகட்டி” பாடலை  ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். அது வைரலானது.

அதேபோல், லியோ படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘கரு கரு கருப்பாயி’ பாடல்  பட்டி தொட்டி எங்கும் வைரலானது.

30 வருடங்களுக்கு முன் போட்ட பாடல்கள், இப்போது மீண்டும் பிரபலமாகியிருப்பதில் மகிழ்ச்சிதான்.

அப்படியானால், இந்த 35 ஆண்டுகளாக நான் தொடர்ந்து ட்ரெண்டில் இருப்பதாகத்தானே அர்த்தம்! அதில் எனக்கு எப்போதும் கூடுதல் மகிழ்ச்சிதான்.

  • நன்றி: பிபிசி
 
You might also like