அம்மாவுக்காக 6 லட்சம் மரங்கள் நட்ட ஷாயாஜி ஷிண்டே!

இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ்சுட்டு வர்றாங்க.

அந்த வகையில மகாராஷ்டிராவுல 6.5 லட்சம் மரங்களை நட்டு சத்தமில்லாம, சூழலுக்குப் பங்காற்றிட்டு இருக்காரு நடிகர் ஷாயாஜி ஷிண்டே.

‘பாரதி’ என்ற தமிழ் திரைப்படத்துல நடிச்சு, மகாகவி பாரதியாரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்தான் ஷாயாஜி ஷிண்டே.

பூவெல்லாம் உன் வாசம், தூள், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட சில தமிழ் படங்கள்லயும் நடிச்சிருக்காரு.

மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ‘சஹ்யாத்ரி தேவ்ராய்’ என்ற பெயர்ல தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க மரக்கன்றுகள் நட்டு வளர்த்திருக்காரு.

அதுவும் வறட்சியான பகுதிகள்ல, நாட்டு மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நட்டிருக்கிறாரு.

‘தேவ்ராய்’ (புனிதக் காடுகள்) என்ற பெயர்ல நாட்டு மரங்கள் அடர்ந்த 29 குறுங்காடுகள், 2 விருக்‌ஷா பூங்காக்கள், 2 பல்லுயிர் பூங்காக்கள், 1 பட்டாம்பூச்சி தோட்டத்தையும் உருவாக்கியிருக்கார்.

சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களை ஒன்றிணைச்சு, கடந்த 10 ஆண்டுகளா இந்த மரம் வளர்ப்புப் பணிகளை முன்னெடுத்துட்டு இருக்கார். ‘சூழல் பாதுகாவலர்’ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

மரம் வளர்ப்பு குறித்தும், சூழலுக்கு நாம் ஏன் பங்காற்றணும்னு மக்கள்கிட்ட பேசிக்கிட்டு வர்றார்.

நடிகர்கள், விவசாயம், சூழல் சார்ந்த பணிகள்ல ஈடுபடுறது மத்தவங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அதை, சரியா புரிஞ்சு வெச்சிருக்கார் ஷாயாஜி ஷிண்டே.

சயாஜி ஷிண்டே தன்னுடைய நேர்காணல் ஒன்றில், “என் அம்மா நோய்வாய்ப்பட்டு, அவர் உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கை இல்லாதபோது, ​​

“நான் எவ்வளவு பணக்காரனாக, சக்தி வாய்ந்தவனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக மாறினாலும், உன்னைக் காப்பாற்ற முடியாது. ஆனால் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்…” என்று நான் அவரிடம் சொன்னேன். 

ஒரு நாள், என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன். அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன்.

எங்கெங்கோ ஆயிரக்கணக்கான மரங்கள் வளர்ந்தன. இப்போது இந்த மரங்கள் பழங்கள் மற்றும் பூக்கள், நறுமணம் மற்றும் பறவைகளுடன் இருக்கும் வரை, நான் என் அம்மாவுடன் இந்த மரங்களில் வாழ்வேன்…” என்று கூறினார்.

– மண்புழு மன்னாரு

  • நன்றி: பசுமை விகடன்
 
You might also like