எழுத்தாளர் இமையம் நேர்காணலிலிருந்து…
அடிப்படையில் நீங்கள் யதார்த்தவாதக் கதைசொல்லி. திராவிட இயக்கச் சிந்தனையாளர். அப்படி இருக்கும்போது ‘சாம்பன் கதை’, ‘தண்டகாரண்யத்தில் சீதை’, ‘திருநீறு சாமி’ ஆகிய கதைகளை எழுதுகையில் உங்களுக்கு நெருடலாக இல்லையா?
இல்லை. நான் பின்பற்றுகிற கொள்கைக்கும் நான் சார்ந்திருக்கிற கட்சிக்கும் என்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வரக்கூடிய கதாபாத்திரங்களுக்கும் என்ன சம்பந்தம்?
என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் வரும் கதாபாத்திரங்களின் இயல்பில், வாழ்வில், மொழியில், பண்பாட்டில், சிந்தனையில், நடவடிக்கையில் நான் ஒருபோதும் குறுக்கிட்டதில்லை.
நான் என்னுடைய இயல்பில் இருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரங்கள் அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள்.
இந்த மூன்று கதைகளும் பக்தியைப் பற்றிப் பேசவில்லை. பக்தியைக் கேள்விக்குட்படுத்துகின்றன. அதே மாதிரி ‘பிராது மனு’ கதையும் பக்தியைக் கேள்வி கேட்கிற கதைதான்.
இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுச்சொல்ல விரும்புவது, சிறுகதைகளாக இருந்தாலும் சரி, நாவல்களாக இருந்தாலும் சரி, நான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் மீது அனுதாப உணர்வோ, இரக்க உணர்வோ, பச்சாதாப உணர்வோ ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தின் பெயரில் இதுவரை நான் ஒரு வார்த்தையை, ஒரு வாக்கியத்தைக்கூட எழுதியதில்லை.
அப்படி என்னையும் மீறி எழுதியிருந்தால் — அது நான் என்னுடைய கதாபாத்திரங்களுக்குச் செய்த துரோகமாகும்.
– உயிர்மை செப்டம்பர் 2024 இதழிலிருந்து.