தம்பி நான் எப்போதும் உன் நினைவாகத்தான் இருப்பேன்!

சம்பத்திடம் நெகிழ்ந்த அண்ணா

சாப்பிட அமர்ந்து சம்பத்துக்குப் பிடித்ததையெல்லாம் உண்ணச் செய்து, பிடிக்காததைத் தான் உண்பார் பேரறிஞர் அண்ணா.
 
பெரும்பாலும் அண்ணா மாலைச் சிற்றுண்டி அருந்தியதில்லை. ஈரோட்டு மாளிகையில் அது கிடைக்காது.
 
சம்பத் அண்ணாவை அழைத்துச் சென்று தெருவோரத்தில் சிறிய வீட்டில் மூதாட்டி ஒருவர் சுடும் வடை, முறுக்குகளை அண்ணாவுக்கு வாங்கித் தருவார்.
 
வெங்காய பக்கோடா அண்ணாவுக்கு மிகவும் பிடிக்கும். சம்பத் தமது அத்தை கண்ணம்மாவின் இல்லத்தில் அண்ணாவை அழைத்துச் சென்று அங்குத் தடபுடல் விருந்து நடத்தச் செய்வார்.
 
பெரியார் ஊரில் இல்லாத நாட்களில் அண்ணாவும், சம்பத்தும் சினிமாவுக்கு அடிக்கடி செல்வதுண்டு. சம்பத்தின் அத்தை மகன் எஸ்.ஆர். சந்தானத்தின் ஸ்டார் டாக்கீசில் இலவச சினிமா எப்போதும் உண்டு. மற்ற கொட்டகையையும் விட்டு வைப்பதில்லை.
 
சிறு புத்தகக் கடை வைத்திருந்த லூர்துசாமி கடையிலிருந்து ஏராளமான பழைய புத்தகங்களை அண்ணா படிப்பதற்கு வாங்கிக் கொடுப்பார் சம்பத்.
 
ஈரோடு எஸ். அப்பாவு ரயிலடியில் நடத்திக் கொண்டிருந்த சிகை அலங்காரக் கடையில் வாரம் ஒருமுறை அண்ணாவுக்கு இலவச முகச்சவரம் உண்டு.
 
அண்ணா அடிக்கடி வெற்றிலை பாக்கு போடுவார். மூக்குப் பொடியும் தாராளமாகவே வேண்டும். இதற்கெல்லாம் காசு ஏது?
 
அண்ணாவுக்கு பெரியார் கொடுக்கும் மாத ஊதியம் 35 ரூபாய். அதையும் கணக்குப்பிள்ளையிடம் சொல்லி காஞ்சிபுரத்திற்கு காசோலை மூலம் அனுப்பிவிட உத்தரவு.
 
பின்னர் ராணி அம்மையாரை அழைத்து வந்து அய்யாவுக்குச் சொந்தமான பக்கத்து வீட்டில் அண்ணா குடும்பத்தோடு இருந்தார். அண்ணியார் ராணிக்கு சம்பத் செல்லப்பிள்ளை.
 
கைச்செலவுக்குப் பணம் இருந்தால் தப்பு வழியில் போகச் செய்யும் என்பது பெரியாரின் கருத்து. ஆனால் அண்ணாவுக்கு வெற்றிலை பாக்கு, பொடி, சலவைத்துணி இதற்கெல்லாம் வழி அண்ணாவிடம் அபிமானமுள்ள நண்பர்கள் பலர்.
 
சிட்டிகைப்பொடி சிவஞானம் ஒருவர். அவர் என்.வி. சண்முகம் பட்டணம் பொடி டப்பா ஒன்றை அண்ணாவிடம் கொடுத்துவிடுவார்.
 
அந்த லேபிளில் உலகப்படம் ஒன்று இருக்கும். பொடி டப்பா கிடைத்ததும் உலகமே கிடைத்தது போல் இருக்கும். அவருடைய ஒவ்வொரு தேவையையும் நண்பர்கள் கவனித்துக் கொள்வார்கள். பெரும்பகுதி சம்பத் செலவிலேயே நடக்கும்.
 
1942-ல் பொருளிழப்பு காரணமாக ‘குடியரசு’ இதழ் நிறுத்தப்பட்டது. அண்ணா காஞ்சி திரும்பி “திராவிட நாடு’ வார இதழைத் தொடங்க எண்ணியிருந்தார்.
 
அது பற்றி பெரியாரிடம் சொன்னதும் அதனை வரவேற்ற பெரியார் ‘குடியரசு’ இதழுக்குப் பயன்படுத்தப்பட்ட சில அச்சு எழுத்துகள், பெட்டிகள், அலமாரிகள் முதலிய பொருட்களை அண்ணாவுக்கு கொடுத்துதவியதோடு,
 
‘குடியரசு’ இல்லாத குறையைப் போக்க ‘திராவிட நாடு’ இதழ் வளர்ச்சிக்கு ஆங்காங்கே தோழர்கள் நிதியுதவி அளிக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டதோடு தாம் நூறு ரூபாய் நன்கொடையும் அளித்தார்.
 
ஈரோட்டுப் பாசறையிலிருந்து விடுபட்டு, அண்ணா காஞ்சி புறப்படுகிறார் என்னும் முடிவினைச் சம்பத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
 
தம்மால் ஒருபோதும் அண்ணாவைப் பிரிந்து இருக்க முடியாது என்று வருந்தினார். அவரை அண்ணாவும் தோழர்களும் தேற்றினர்.
 
“வருத்தப்படாதே சம்பத். நான் அடிக்கடி ஈரோடு வருவேன், நீயும் விடுமுறை நாட்களில் காஞ்சிபுரம் வந்துவிடு. எப்போதும் உன் நினைவாகத்தான் இருப்பேன்.” என்று பாசம் பீறிட்டெழ உருக்கத்துடன் கூறினார் அண்ணா.
 
பெரியார் மற்றும் தோழர்களிடம் பிரியாவிடை பெற்றுத் தமது குடும்பத்துடன் அண்ணா காஞ்சிபுரம் திரும்பினார்.
 
– தினமணி கதிர்
You might also like