கே.பி.எஸ். என்று திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல துறைகளில் புகழ் பெற்றவர்.
கே.பி.சுந்தராம்பாளுக்குக் கிடைத்த குரல் ஒரு வரப்பிரசாதம். இதுபோன்ற ஒரு குரல் தமிழக இசை வரலாற்றில் யாருக்கும் கிடையாது. பாடும் வல்லமையை அவர் தனக்குத் தானே வளர்த்துக்கொண்டார்.
விருத்தங்களை ராகமாலிகைகளில் பாடிப் புகழ் பெற்றவர் திருச்செந்தூர் சண்முகவடிவு. அவரிடமிருந்தே இம்முறையை கே.பி.எஸ். கற்றார்.
ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த அவ்வையார் திரைப்படம் வெளியானபோது, பாடகி லதா மங்கேஷ்கர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது அந்தப் படத்தைக் காண அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தில் கே.பி.எஸ். அவர்கள் பாடிய திறமையைக் கண்டு லதா மெய் சிலிர்த்துப் போனதாக தெரிவித்தார்.
சென்னையில் கே.பி.எஸ்ஸை, நேரில் சந்தித்து இத்தகைய இசையை உருவாக்கிய குரலைக் கேட்டு நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
அதன் பிறகு, கே.பி.எஸ். உடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு மவுண்ட் ரோடு, பட்டுலோஸ் ரோடு மூலையில் இருந்த கர்நாடக ஸ்டூடியோ ஒன்றில் படம் பிடித்துக் கொண்டுள்ளார்.
அதன்பின் பம்பாய்க்கு திரும்பிய லதா ஜெமினி ஸ்டூடியோஸின் எஸ்.எஸ்.வாசனுக்கு எழுதிய கடிதத்தில், “அந்த திரைப்படம் அவரது இசை நேசத்திற்கும் இறைவன் மீதான பக்திக்கும் இணையாக இருந்த முடிவாகவே தெரிகிறது.
குறிப்பாக, கே.பி.எஸ். அவர்கள் அவ்வையாராக நடித்து பாடும் காட்சிகளைப் பார்த்தபோது பலமுறை கண்ணீரோடு பார்த்தேன். அவரது நடிப்பையும் பாடலையும் பார்த்தபோது, நான் ஒரு பெரிய உண்மையை உணர்ந்தேன்.
ஒருவேளை நான் முருகக் கடவுளாய் இருந்திருந்தால் இந்த பக்தையை வாழ்நாள் முழுவதும் புகழ்ந்திருப்பேன். கே.பி.சுந்தராம்பாளுக்கு எனது மரியாதையைச் சொல்வதற்கு நான் வார்த்தைகள் தேடிகொண்டிருக்கிறேன்.” என உருக்கத்துடன் எழுதியுள்ளார்.
இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர்களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் கே.பி.எஸ்-தான்.
ஒரு பாடலைக் கேட்டுவிட்டு, அடுத்த பாடலை மீண்டும் கேட்டு ரசிக்காமல் சென்ற ரசிகர் யாருமே இருக்க முடியாது. கச்சேரி முடியும் வரை இசை என்ற மாயக் கயிற்றுக்குள் கட்டிப் போட்டுவிடுவார். எனவே, தமிழின் உச்சஸ்தாயி என்றுதான் கே.பி.எஸ்ஸைச் சொல்ல வேண்டும்.
– மணி அமுதன்