மெல்லிசை மன்னரை உலுக்கிய மூன்று துயரங்கள்!

தமிழ்த் திரையுலகில் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (MSV) ஆகியோரின் நட்பு, தொழில்முறைத் தொடர்பையும் தாண்டி ஒரு உன்னதமான பந்தமாக விளங்கியது.

கண்ணதாசனின் கடைசி நிமிடங்களில் நடந்த சில நெகிழ்ச்சியான நினைவலைகளை எம்.எஸ்.வி பேட்டி ஒன்றில் பகிர்ந்தவை இதோ:

எம்.ஜி.ஆர் விடுத்த அவசர அழைப்பு:

கவிஞர் கண்ணதாசன் உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் நினைவு தப்பிய நிலையிலும் எம்.எஸ்.வி-யுடன் இணைந்து மெட்டுப் போடுவது போலவும், பாட்டு எழுதுவது போலவும், தங்களுக்குள் அரட்டை அடிப்பது போலவும் கற்பனை செய்து உளறிக்கொண்டே இருந்துள்ளார்.

இதைக் கண்ட மருத்துவர்கள் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனே எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வி-யைத் தொடர்புகொண்டு, “விசு, நீ அங்கே போனால் கவிஞர் பிழைத்துக் கொள்வார், உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார், உடனே புறப்படு” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

கவிஞருக்காகத் தயாரான ஆடியோ கேசட்

இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் எம்.எஸ்.வி-யால் உடனடியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்ல முடியவில்லை.

இதனால், கவிஞரை எப்படியாவது ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக எம்.எஸ்.வி மற்றும் அவரது குழுவினர் தமாஷாகப் பேசி, மெட்டு அமைப்பது போன்ற ஒரு குரல் பதிவைத் தயார் செய்தனர்.

ஆனால், அந்த கேசட் அமெரிக்காவுக்குப் போய்ச் சேருவதற்கு முன்பாகவே கவிஞர் கண்ணதாசன் காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்தது.

எமதர்மனுக்கு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை

அமெரிக்காவில் இருந்து கண்ணதாசனின் உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட போது, அவர் மறைவதற்குச் சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடைசி கவிதை ஒன்று வெளியானது.

எமதர்மனை நோக்கி அவர் எழுதிய அந்தக் கவிதையில் :

“நான் என் வாழ்க்கையில் பல தவறுகள் செய்திருக்கிறேன், ஆனால் யாருடைய குடும்பத்தையும் கெடுத்ததில்லை. என்னை நானே தான் அழித்துக் கொண்டேன்.

தமிழ் மொழிக்குச் சேவை செய்ய எனக்கு இன்னும் ஆசை இருக்கிறது. நான் போய்விட்டால் விஸ்வநாதன் போன்றவர்கள் தவித்துப் போவார்கள்.

அதனால் எனக்கு இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் மட்டும் ஆயுளைக் கொடு!” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

‘கல்கி’ இதழில் வெளியான இந்த நெகிழ்ச்சியான கவிதையை துண்டுப் பிரசுரங்களாக (Notices) அச்சிட்டு, கவிஞரின் இறுதி ஊர்வலத்தில் வந்திருந்த பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் விநியோகிக்குமாறு எம்.ஜி.ஆர் உத்தரவிட்டிருந்தார்.

எம்.எஸ்.வி-யை உலுக்கிய 3 துக்கங்கள்

தன் வாழ்வில் தன் தாயின் மரணம், கவிஞர் கண்ணதாசனின் மரணம், மற்றும் எம்.ஜி.ஆரின் மரணம் ஆகிய மூன்று இழப்புகளையும் தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாமல் போனதாக எம்.எஸ்.வி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கவிஞனும் இசையமைப்பாளரும் கணவன் – மனைவி போல ஒத்துப் போனால் மட்டுமே காலத்தால் அழியாத, அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் பிறக்கும் என்பதற்கு இவர்களின் உன்னத நட்பே என்றும் சாட்சியாகும்.

நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

 
You might also like