பெரிய மனிதர் என்றால், உண்மையிலேயே பெரிய மனிதர். என்னே ஒரு பெருந்தன்மை! நிதானம், பக்குவம்!
தன் மீதான தாக்குதலுக்கு நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என அழகாக விளக்கம் அளித்தது போலவே, இந்த செருப்பு வீச்சு தாக்குதலையும் ஒரு பொருட்டாக மதிக்காமல், புகார் கூட பதியாமல் கடந்து விட்டார் தலைமை நீதிபதி கவாய். அவருடைய மெச்சூரிட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது.
மனதை கிறங்கடிக்கும் அழகு. ஈடு இணையற்ற சிற்பங்களுக்கு பேர் போனது, மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ கோவில்!
காதல் உணர்வையும், காமத்தின் அழகியலையும் கலந்து காட்டும் கஜுரோஹோ சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை.
கஜுராஹோ கோயில் என்பது கி.பி 950 முதல் கி.பி 1050 வரை சந்தேலா வம்சத்தால் கட்டப்பட்டது.
இதில் சிவன், விஷ்ணு மற்றும் சமண மதத்தவர்களுக்கான சிற்பங்கள் உள்ளதால், இது இடைக்காலத்தில் இந்து மதம் கொண்டிருந்த சகிப்புத் தன்மை மற்றும் இணக்கத்திற்குமான ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பகுதி தொல்லியல் துறையின் பல்லாண்டுகள் பராமரிப்பில் உள்ளது. தொல்லியல் துறையானது அந்தக் காலகட்டத்து சிற்பங்களை அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்குமே அல்லாது, அதில் கை வைக்காது.
ஆகவே, இது உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இது யுனெஸ்கோவின் கண்காணிப்பில் உள்ளது.
இந்த இடத்தில் வழிபாட்டுக்கோ, பூஜை, புணஸ்காரங்களுக்கோ இடமில்லை. இதுவே இந்தியா சுதந்திரம் பெற்றது தொடங்கி நமது அரசின் நிலைபாடு.
இந்தச் சூழலில் இந்து மதத்தில் பற்றுள்ள ஒருவர் “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் விஷ்ணு சிலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் அந்த சிலையை மாற்றியோ அல்லது புனரமைத்தோ பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்குரியதாக்கும் நோக்கத்தில் விஷ்ணு சிலையை சீரமைக்க ஏஎஸ்ஐ-க்கு உத்தரவிட வேண்டும்” என்கிறார்.
இந்த மனுவே விஷமத்தனமானது. அந்த இடம் மாமல்லபுரத்தை போல ஒரு சுற்றுலா தளம். அது சைவம்,வைஅணவம், சமணம், பெளத்தம் ஆகியவற்றுக்கு பொதுவானது. அந்த இடத்தை ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கான வழிபாட்டுத்தளமாக்க ஒரு போதும் இயலாது.
அப்படி மாற்ற முடியுமென்றால், அதை மத்திய பிரதேசத்தை ஆளுவதும் பாஜக தான், மத்தியில் ஆட்சியில் இருப்பதும் பாஜக தான். அவர்கள் எப்போதோ செய்திருப்பார்களே.
அதனால் தான் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சுய விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. நீங்கள் (மனுதாரர்) விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று கூறுகிறீர்கள்.
நீங்கள் நேரடியாக சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனச் சொன்னார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் 16-ம் தேதி நடந்தது. ஆனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சித்து இந்துத்துவர்கள் பதிவிட்டவண்ணம் இருந்தனர்.
விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட மத நிறுவனத் தலைவர்களின் தொடர்ச்சியான விமர்சனத்தின் விளைவே நீதிபதி கவாய் மீதான செருப்பு வீச்சு.

இந்த சம்வத்தை நிகழ்த்திய 72 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், ‘’கடவுள் சொன்னதைக் கேட்டே இது போல செய்ததாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும், ’’தனது செயலுக்கு வருத்தமில்லை’’ என்ற அவர் மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.
’’நான் இதற்காகச் சிறைக்குச் செல்லவும் கூட தயாராக இருக்கிறேன்…’’ என்று சொல்லும் அளவுக்கு சனாதனப் பற்று அவரை சகஜ நிலையில் இருந்து தடம்புரள வைத்துள்ளது.
தன் செயல் ’சனாதனத்திற்கு ஏற்பட்ட சரிவு’ என்பதைக் கூட அவரால் உணர முடியவில்லை. மதப்பற்றோ, கட்சிப் பற்றோ அதி தீவிரமானால், அது மனிதனை மடையனாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
– சாவித்திரி கண்ணன்