தமிழக ஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எல்லோருக்குமே ஒருவித ஆர்வம் இருக்கும். குறிப்பாக அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் என்னென்ன பணிகள் செய்தார்கள், ஏன் வீழ்ந்தார்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து அறிய அனைவருக்குமே ஆவல் உண்டு.
ஆனால், தமிழக முழுவதும் இருந்த ஜமீன்கள் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் என்பது குறைவுதான். இந்நிலையில் அந்தக் குறையைப் போக்கும் வகையில் வந்திருக்கிறது, ‘நெல்லை ஜமீன்கள்’ எனும் இந்நூல்.
இதில் நெல்லை சீமையில் வாழ்ந்து பத்து ஜமீன்கள் பற்றி படம்பிடித்துக் காட்டுப்பட்டுள்ளது.
அப்படியாக இந்நூலில், ஊர்க்காடு, ஊத்துமலை, சிவகிரி, எட்டயபுரம், சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி, நெல்கட்டும் சேவல், தலைவன் கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி, குளத்தூர் ஆகிய பத்து ஜமீன்கள் வலம் வருகின்றனர்.
அன்று இந்த ஜமீன்கள் ராஜாக்கள் போல் வாழ்ந்து வந்துள்ளனர். மக்களும் அவர்களை ராஜா என்றே அழைத்து வந்தனர்.
அவர்களின் எல்லைக்குள் பல கிராமங்கள் இருந்தன. அங்கு நெல் அறுவடை செய்வது, வரி வசூல் செய்வது, காவல் வேலையில் ஈடுபடுவது உள்ளிட்ட பல பணிகளை ஜமீன்களே செய்து வந்தன.
இந்நூலில் இவர்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு முதலில் பாளையங்கோட்டை மற்றும் பாளைக்காரர்கள் குறித்தும், ஜமீன்களின் தோற்றத்தையும் ஒரு முன்னோட்டமாகத் தந்துள்ளார் இந்நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு.
16ம் நூற்றாண்டில் விசுவநாத நாயக்கர் ஆட்சியில்தான் ஜமீன்கள் பிரபலமடைந்தன. விஜயநகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டுக்குப் பிரதிநிதியாக நாகம நாயக்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.
அப்போது மதுரையை ஆட்சி செய்த சுந்தர பாண்டியனைத் தோற்கடித்து சோழ அரசன் உரிமை கொண்டாடி வந்தார்.
இந்நிலையில் மதுரை வந்த நாகம நாயக்கர், சோழனை வென்று நாட்டை மீண்டும் பாண்டியரிடமே ஒப்படைத்தார்.
பிறகு தன்னிச்சையாக நாகம நாயக்கர் செயல்பட ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த விஜயநகர பேரரசு, நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கரை அனுப்பியது.
அவர் தந்தையுடன் போரிட்டு வென்று மதுரையை விஜயநகர பேரரசின் கீழ் கொண்டு வந்தார். இதற்குப் பரிசாக விசுவநாத நாயக்கருக்கு மதுரை அளிக்கப்பட்டது.
பின்னர் விசுவநாத நாயக்கர், அரசுரிமையை மீட்க பாண்டியர் எப்போது வேண்டுமென்றாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் இருந்தார்.
இதனால் உள்நாட்டில் தனக்குப் படை தேவை என நினைத்தார். அப்படியாக அவர் பாண்டிய நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார். இதுவே ஜமீன்களாக மலர்ந்தன.
அப்படியாக ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 15 ஜமீன்கள் இருந்தன. இதில் ஆற்றாங்கரை, மேல்மாந்தை, எட்டயபுரம் ஆகியவை தெலுங்கர் ஜமீன்கள்.
அழகாபுரம், ஆவுடையார்புரம் (நெல்கட்டும் சேவல்), சொக்கம்பட்டி, கடம்பூர், மணியாச்சி, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சிவகிரி, சுரண்டை, தலைவன் கோட்டை, ஊர்க்காடு, ஊத்துமலை ஆகியவை மறவர் ஜமீன்கள். இதுதவிர, இன்னும் சில ஜமீன்களும் இருந்துள்ளன.
இந்நூலில் முதலில் ஊர்க்காடு ஜமீனின் வரலாற்றிலிருந்து ஆரம்பித்துள்ளார் நூலாசிரியர். ஊர்க்காடு – அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஜமீன். இதன் கீழ் 18 பட்டிகள் இருந்துள்ளன.
இப்போதும் அங்கே ஜமீன் விட்டுச் சென்ற எச்சங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அத்துடன் ஜமீன் ராஜபோகமாக எப்படி வாழ்ந்தார் என்பதையும் தந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த ஜமீனில் கைதேர்ந்த இரண்டு சிலம்பு வரிசைகள் இருந்துள்ளன. அதன்பெயர் வஸ்தாரி சுப்புத் தேவர் வரிசை, வஸ்தாரி ஐயங்கார் வரிசை. இந்த சிலம்பு வரிசைகளை அந்த ஊர்க்காரர்களைத் தவிர மற்ற யாருக்கும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை.
ஆனால், இதனை கற்க பல ஜமீன்களைச் சேர்ந்தவர்கள் விரும்பியுள்ளனர். இதனால் ஊர்க்காடு ஜமீன் பிரபலமாக இருந்துள்ளது. இதனை ஊர்க்காரர்கள் கூறும் கதைகளிலிருந்து தொகுத்து தந்துள்ளார் இந்நூலாசிரியர். அது வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும்.
இதுதவிர ஊர்க்காட்டில் பட்டத்து அரண்மனை, கோவில் அரண்மனை, பூஜை அரண்மனை உள்ளிட்ட ஐந்து அரண்மனைகள் இருந்துள்ளன.
இதில் தற்போது கோவில் அரண்மனை மட்டும் இருக்கிறது. மற்றவை தரைமட்டமாகி விட்டதெனச் சொல்கிறார் நூலாசிரியர்.
இதனுடன் நிறைய வரலாற்று தகவல்களையும் அடுக்கியிருப்பது வாசிக்கும் நமக்கு அத்தனை ஆச்சரியமாக உள்ளது.
இதற்கடுத்து ஊத்துமலை ஜமீன் பற்றி குறிப்பிடுகிறார். இது சுரண்டை பகுதியில் வீரகேரளம் புதூர் என்ற ஊரில் இருக்கிறது.
ஊத்துமலை மன்னர்கள் மருதப்பன் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜமீனின் வரலாறும், இப்போது வரை உள்ள வாரிசுகள் பற்றிய குறிப்புகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
தொடர்ந்து சிவகிரி, எட்டயபுரம், சிங்கம்பட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட ஜமீன்களின் வரலாறுகள் சொல்லப்பட்டுள்ளன. இதில் எட்டயபுரம் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன்கள் பற்றி பலரும் அறிந்திருப்போம்.
நாம் அறியாத ஜமீன் குளத்தூர். இந்நூலில் நிறைவாகத் தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு அருகே உள்ளது குளத்தூர். நாயக்கர் ஜமீன், மறவர் ஜமீன் என்ற இருந்தாலும் குளத்தூர் ஜமீன்தார் பிள்ளை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரியது.
இந்த ஜமீன் பிற்காலத்தில் அரண்மனையை நாடார் சமுதாயத்தினை சேர்ந்தவர்களுக்கு விற்றுவிட்டுச் சென்றுவிட்டதாகக் குறிப்பிடுகிறார் இந்நூலாசிரியர். இந்த ஜமீனின் கதையும் இதில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்நூலில் வரலாற்று தகவல்களுடன், நேரடியாக நூலாசிரியர் சென்று சேகரித்த ஜமீன்களின் வாரிசுகள் தந்த தகவல்களும், பொதுமக்கள் சொன்ன கதைகளும் அடங்கியுள்ளன. இத்துடன் ஜமீன் புகைப்படங்கள், அரண்மனைகள் மேலும் நூலுக்கு வலுசேர்க்கின்றன.
இத்துடன் இந்நூலாசிரியருக்கு கால்டுவெல் எழுதிய, ‘திருநெல்வேலிச் சரித்திரம், குருகுஹதாஸ் பிள்ளை எழுதிய, ‘திருநெல்வேலி சீமைச் சரித்திரம்’, இளசை மணியன் எழுதிய, ‘எட்டயபுரம் ஜமீன் வரலாறு’,
மருதூர் பாண்டியன் எழுதிய, ‘ஊத்துமலை ஜமீன் தமிழ் வளர்த்த பூமி’, ராஜையா எழுதிய, ‘பூலித்தேவன் வரலாறு’ உள்ளிட்ட பல நூல்கள் குறிப்பெடுக்க உதவியுள்ளன.
ஜமீன்களின் வரலாற்றை தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்நூல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
**********
நூல்: நெல்லை ஜமீன்கள்!
ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு: பொன் சொர்ணா
விலை: ரூ. 400/-
தொடர்புக்கு: 87609 70002
– கவின்