விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றிய விஞ்ஞானி!

முருங்கையில் ரூ. 1.75 கோடி வருமானம்

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் விஞ்ஞானி காமினி சிங் தொடங்கிய முருங்கை ஆய்வு நிறுவனம், 22 முருங்கை தயாரிப்புகளை உருவாக்கி மாநிலம் முழுவதும் கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தை மாற்றியமைத்துள்ளது.

ஒரு சின்ன முயற்சி இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது.

காமினி சிங்கின் பயணம் இந்தியாவின் சில சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களான துணை வெப்பமண்டல தோட்டக்கலைக்கான மத்திய நிறுவனம் (CISH) மற்றும் மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர நிறுவனம் (CSIR) ஆகியவற்றின் அரங்குகளில் தொடங்கியது.

தோட்டக்கலையில் பல ஆண்டு அனுபவமுள்ள ஒரு விஞ்ஞானியாக அவர், இயற்கை வேளாண்மையில் மூழ்கி, விவசாயம் பற்றி மக்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றிக்காட்ட முயற்சி செய்தார்.

தனது கல்விச் சாதனைகள் அனைத்தையும் மீறி, ஏதோ ஒன்று இல்லாததுபோன்ற உணர்வை காமினியால் தவிர்க்கமுடியவில்லை.

தனது ஆய்வின் முடிவுகள் கடைக்கோடி விவசாயிகளின் கைகளை எட்டுவது குதிரைக் கொம்பாக இருப்பதை அவர் உணர்ந்தார்.

அவரது புதிய கண்டுபிடிப்புகள் புதுமையாக இருந்தாலும், மக்களை எட்டவில்லை.

இதனால் கவலையடைந்த காமினி, தன் 17 ஆண்டுகால ஆராய்ச்சி அனுபவத்தை உத்தரப்பிரதேசத்தின் வயல்வெளிகளில் பயன்படுத்தத் தொடங்கினார்.

ஆய்வுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து விவசாயிகளின் வாழ்க்கையில் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

கடந்த 2016 – 17 ஆண்டில் மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆர்கானிக் விவசாயப் பயிற்சிகளை வழங்கினார்.

“ஆரபத்தில் மூன்று ஆண்டுகளில், இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூல் பெறுவது சிரமமாக இருந்தது. ஏனெனில் செயற்கை உரங்களை நம்பாமல் மண் புத்துயிர் பெறுவதற்கு காலம் தேவைப்பட்டது” என்கிறார் காமினி.

அதோடு, “அரசு மானியத்தில் உரம் கிடைக்கிறது என அவற்றைப் பயன்படுத்தினார்கள். கடைசியில் மிக மோசமான விளைச்சலே கிடைத்தது. விளைபொருட்களுக்கும் நல்ல விலை கிடைக்கவில்லை” என்று சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலையில், குறைந்தபட்ச உரம் தேவைப்படும் அதிக மகசூலைத் தரும் பயிர்களை அறிமுகப்படுத்துவது பற்றி அவரைச் சிந்திக்க வழிவகுத்தது.

“முருங்கைக்காய் ஊட்டச்சத்து மதிப்பால் சிறந்த உணவுப்பொருளாக தெரிந்தது எனக்கு. அதிக மகசூல் திறன் மற்றும் குறைந்த தேவைகள் கொண்ட ஆர்கானிக் விளைபொருளாக நம்பிக்கை தந்தது” என்கிறார் காமினி.

அவர் 2017 ஆம் ஆண்டு துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். லக்னோவில் 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து முருங்கை விவசாயத்தைத் தொடங்கினார்.

உள்ளூர் விவசாயிகளுக்கு இன்னொரு வாய்ப்பையும் வழங்கினார்.

முருங்கை விவசாயத்துடன் ஊடுபயிராக பாரம்பரியப் பயிர்களை விளைவிக்கும் திட்டத்தை ஊக்குவித்தார். இதனால் அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் மிச்சமானது.

சாலிக்ராம் யாதவ் என்ற விவசாயி முதல்கட்டமாக 400 கன்றுகள் மட்டுமே நட்டார். இன்று அவர் 10 ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்துவருகிறார்.

சின்ன புள்ளியில் தொடங்கிய மாலினி, இன்று உத்தரப்பிரதேசம் முழுவதும் 1,050 விவசாயிகளை ஒருங்கிணைத்துள்ளார்.

வெறும் முருங்கையுடன் நிறுத்திக்கொள்ளாமல், சோப், கிரீன் டீ, மாத்திரைகள், எண்ணெய்கள் என முருங்கை தொடர்புடைய 22 வேறுபட்ட பொருட்களைத் தயாரிக்கிறார் காமினி.

2019 ஆம் ஆண்டு முருங்கை விவசாய நிறுவனத்திற்கு டாக்டர் மொரிங்கா பிரைவேட் லிமிடெட் என்று பெயரிட்டார்.

பர்சனல் லோன் மூலம் 9 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்று தொழில் தொடங்கிய காமினி, இன்று முருங்கையின் மூலம் ஆண்டுக்கு 1.75 கோடி ரூபாய் முதலீட்டு வருமானமாக இருக்கிறது. அதில் 30 சதம் லாபமாக கிடைக்கிறது.

நெல், கோதுமை விவசாயம் மூலம் 40 ஆயிரம் மட்டும் வருமானம் பெற்றுவந்த விவசாயி ஒருவர், முருங்கையின் வழியாக 1.5 லட்சத்தைப் பெறுகிறார். இதுதான் காமினி செய்த சாதனை என்று சொல்லலாம்.

நன்றி: திபெட்டர்இந்தியா

You might also like