மனதில் நிற்கும் சில சந்திப்புகள்!

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகத்தில் தொடர்ந்து இன்றுவரை இயங்கி கொண்டிருக்கும் சூழலில், எத்தனையோ அரசியல் தலைவர்களை வேலை நிமித்தமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது.

அவர்களுடன் பத்திரிகையின் தேவைக்காகவும் உரையாட வேண்டியிருந்திருக்கிறது. பத்திரிகையின் தேவைக்கல்லாது தனிப்பட்ட முறையிலும் பல தலைவர்கள் மனம்விட்டு இயல்பாக பேசக்கூடிய தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அப்படி, என்னதான் கருத்து முரண்கள் இருந்தாலும் கூட, தனித்துப் பார்க்கையில் மனம்விட்டு அவர்களுடன்  உரையாடும்போது அவர்களின் அசலான மனதின் குரலைக் கேட்க முடியும்.

அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவராக இன்றுவரை மனதில் நின்று கொண்டிருப்பவர் திராவிடர் கழகத் தலைவரும், ஆசிரியருமான திரு. கி. வீரமணி அவர்கள்.

கடந்த 30 ஆண்டுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவரை, பெரியார் திடலில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ‘தீராநதி’ இதழுக்காக மிக விரிவான ஒரு நேர்காணலை இரு அமர்வுகளாக சுமார் 8 மணி நேரம் வரை எடுத்திருக்கிறேன்.

அந்த நேர்காணல் என்னுடைய ‘ஆளுமைகள் – சந்திப்புகள் – உரையாடல்கள்’ நூலில் வெளிவந்திருக்கிறது.

நடிகர் எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டையொட்டி நான் வெளிக்கொண்டு வந்த ‘எம்.ஆர். ராதா: காலத்தின் கலைஞன்’ என்கின்ற நூலுக்காக கி. வீரமணி அவர்களைச் சந்தித்தபோது, அவர் பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது அற்புத கணங்களாக மனதில் நிற்கிறது.

இப்படி பலமுறை அவருடனான சந்திப்புகளின்போது ஒன்றரை மணிநேரம் துவங்கி, சில சந்திப்புகள் இரண்டு மணி நேரம் வரை நீடித்திருக்கிறது.

பல அரசியல் விஷயங்களை மனம்விட்டுப் பேசுவது அவருடைய இயல்பு.

அப்படி அவர் பேசும்போது, அவருடைய மிக ஆச்சரியமான நினைவுகளோடும், மெல்லிய புன்னகையோடும் இப்போதும் பேசுகிறவராகவே அவர் இருக்கிறார்.

என்னுடைய நூல்களை அவரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொடுத்தபோதும் மிகக் குறுகிய நாட்களில் அதைப் படித்துவிட்டு அவருடைய கருத்தை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.

‘கலைஞர் என்னும் மனிதர்’ நூலை அவரிடம் அளித்துவிட்டு வந்தபோது மிகச் சில நாட்களிலேயே அவரிடமிருந்து அந்த நூலைப் பற்றிய கருத்தை பெரியார் திடல் மேடையில் பகிர்ந்திருக்கிறார்.

இப்படிப் பல அனுபவங்கள் அவருடன் இருந்தாலும், மூன்று நாட்களுக்கு முன்பு பெரியார் திடலுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

பெரியாரிய ஆய்வாளரும் நண்பருமான பொ.நாகராஜன் பெரியாரைப் பற்றிய செயற்கை நுண்ணறிவு கருத்தோவியக் கண்காட்சியை அங்கு காட்சிப்படுத்தியபோது, அதைப் பார்க்க வருமாறு அழைத்திருந்தார்.

அப்போது காலத்திற்கு ஏற்றபடி பெரியாரை நவீன வடிவில் காட்சிப்படுத்தியிருந்த கண்காட்சியைப் பார்ப்பதற்கு பலதரப்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.

நானும் சென்றுப் பார்த்து, பார்வையிட்டு நண்பர் நாகராஜனைப் பாராட்டிவிட்டு வரும்போது அங்கிருந்த நண்பர் பிரின்ஸ், “ஐயா அவர்கள் வந்திருக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா” என்று கேட்டார்.

சற்று நேரத்தில் அடுத்த அறையிலிருந்த ஆசிரியர் அவர்களைப் பார்ப்பதற்கான அழைப்பு வந்தது. உள்ளே சென்றிருந்தேன்.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்தித்திருந்தாலும் கூட, பார்த்தவுடன் கால இடைவெளி இல்லாத நட்புணர்வோடு, இருக்கையை அவருக்கு மிக நெருக்கத்தில் போடச் சொல்லி, வழக்கம் போல ஒரு மேன்மையான அன்புடனும், மிகுந்த பரிவுணர்வுடனும் அவருடைய உரையாடல் அமைந்திருந்தது.

பல்வேறு விஷயங்களை மிகக் குறுகிய நேரத்தில் மனம்விட்டுப் பகிர்ந்து கொண்டார்.

வெளியே காத்திருக்கும் பார்வையாளர்களுடைய நலன் கருதி விடைபெறுகிறபோது, என்னுடைய ‘ஊடகம் யாருக்கானது’ என்கின்ற புத்தகத்தை அவருக்கு அளித்தேன்.

உடல் நலிவுற்று, தேறி வந்திருந்த நிலையிலும், எழுந்து நின்றபடி அந்த நூலைப் பெற்றுக் கொண்டது, அவருடைய பண்பை மேலும் அதிகரிக்கும்படி உணரவைத்தது.

விடைபெறும்போது, அடிக்கடி வாருங்கள் என்றார் வழக்கமான புன்னகையோடு. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவருடனான சந்திப்பு குறித்தும், அப்போது அவருக்கு நான் அளித்த நூலைப் பற்றியும் சிறு குறிப்புடன் ‘விடுதலை’ நாளிதழில் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தார். அதற்கு நட்பு கலந்த நன்றி.

ஒரு விதத்தில் இந்த மாதிரியான சந்திப்புகளும், அந்தச் சந்திப்பின் மூலமாக நான் உணரக்கூடிய மனநெகிழ்வையும் பார்த்தால் இதெல்லாம் காலத்தின் பெருங்கொடை என்றே சொல்ல வேண்டும்.

– மணா

#கிவீரமணி #கலைஞர்என்னும்மனிதர் #கலைஞர் #கருணாநிதி #kveeramani #kalaignarennummanithar #kalaignarkarunanithi #thozharponagarajan #ஊடகத்துறை #திராவிடக்கழகத்தலைவர் #ஆசிரியர்கிவீரமணி #media #dravidakazhagam

You might also like