யார் இந்த ‘சுவரெழுத்து’ சுப்பையா?

இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ படத்தில் சுவரெழுத்து சுப்பையா என்ற கேரக்டரில் வாகை சந்திரசேகர் நடித்துள்ளார். திரைக்கதையின்படி அவரால் வளர்க்கப்படும் குழந்தைதான் ஹீரோ விஜய் ஆண்டனி.

சுவரெழுத்து சுப்பையா மயிலாடுதுறையில் வாழ்ந்தவர். காரைக்குடி பக்கத்திலுள்ள சூரக்குடியில் பிறந்தவர்.

குறைந்த படிப்பு. பசியும் பட்டினியாக நகர் நகராக நகர்ந்து வண்ணக் கலவை, தூரிகை எதுவும் இல்லாமலேயே கறுப்புத் தார் கொண்டு வெளிச்ச சிந்தனைகளை சுவர்களில் எழுதியவர்.

பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாதவர். ஆனாலும், அறிவாயுதத்தின் வீரியம் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அவருக்கென்று வீடோ, குடும்பமோ இருக்கவில்லை. கழகத் தொண்டர் ரெங்கசாமியின் டீக்கடையில் தங்கிக்கொண்டு அங்கே கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கிறார்.

சதா சர்வகாலமும் சுயமரியாதைக் கொள்கையை நெஞ்சில் தாங்கிக்கொண்டு தன்னைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்திருக்கிறார். கடைசிவரை நண்பர்கள் வலியுறுத்தியும் திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை.

சுப்பையா பற்றித் தெரிந்துகொள்ள திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் பேசினேன்.

அவர் சிறுவனாக இருக்கும்போதே சுவர்களில் எழுதியவர் சுப்பையா. 1967 தேர்தலில் சுவர்களில் எழுதி பிரச்சாரம் செய்திருக்கிறார்.

இரவில் எழுதிவிட்டு வந்துவிடுவாராம். பகலில் பார்த்தால் பளிச்சென கருத்துகள் மக்களுக்குத் தெரியவரும். முழுநேர வேலையே சுவரெழுத்துதான்.

நெடுஞ்சாலைகளில் உருகும் தாரையே மண்ணெண்ணெயைக் கலந்து மையாக்கி இருக்கிறார்.

தன் கைவிரலில் துணியைக் கட்டிக்கொண்டு சுவர்களில் எழுத்துருக்களைக் கொண்டு வந்திருக்கிறார்!

பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என்றால் முதல் நாளே அந்த ஊருக்குப் போய் தெரு முழுக்க எழுதுவார்.

மெகாபோன் மூலம் விளம்பரப் படுத்தியும் இருக்கிறார். மக்கள் பெருமளவு கூட்டத்தில் கலந்து கொண்டால், ‘நேற்று சுப்பையா வந்தாரா?’ என்று பெரியாரே கேட்கும் அளவுக்கு அவரது பணி இருக்கும்.

“விஞ்ஞானி கண்டது விரைவு ராக்கட்
அஞ்ஞானி கண்டது விபூதி பாக்கட்”

“வித்தகர் கண்டது பறக்கும் விமானம்
பக்தர் கண்டது பறக்காத கருட வாகனம்”

தோழர் நலங்கிள்ளி எழுதிய குறிப்பு இதோ…

1960ஆம் ஆண்டின் ஒரு காலைப்பொழுது. சீர்காழி சியாமளா பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாசலில் ஆவேசத்துடன் திரண்டு நின்றுகொண்டிருந்தனர் பெற்றோர்கள்.

பள்ளியின் சுற்றுச்சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் அவர்களை கொந்தளிக்க வைத்திருந்தது.

என்ன, பள்ளிக்கு முன்பு இவ்வளவு கூட்டம்? என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கவந்த பொதுமக்களும் சுவரில் எழுதியிருந்தைப் படித்துவிட்டு கோபத்துடன் பெற்றோர்களுடன் இணைந்துகொள்ள, எல்லோரையும் சமாதானப்படுத்த வழிதெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் பள்ளியின் தலைமையாசிரியர்.

“பொம்பளப் புள்ளைங்க படிக்கிற இடத்தில இப்படி எழுதலாமா?”

“ஏதோ நாலெழுத்து தெரிஞ்சுக்கணும்தான் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பறோம். இப்படி எழுதிவச்சா எப்படி அனுப்பறது?”

“இதப் படிச்சிட்டு பொம்பளப் புள்ளைங்க இதுக்கு ஆசைப்பட்டா குடும்பம் குட்டிச்சுவராயிடாதா..?” என்கிற பொதுமக்களின் கேள்விகளைச் சமாளிக்க இயலாத தலைமையாசிரியர் அந்தச் சுவரை வெறித்துப் பார்த்தார்.

அதில்…

“சைக்கிள் ஓட்டும் பெண்கள்;
செந்தமிழ்நாட்டின் கண்கள்!”

என்று எழுதப்பட்டிருந்தது. தலைமையாசிரியருக்கும் கூட்டத்தில் இருந்த விவரம் தெரிந்த ஒருசிலருக்கும் இதை எழுதியது யாரென்று புரிந்துவிட்டது.

பிரஷ் இல்லாமல், பெயிண்ட் இல்லாமல் ரோடு போடப் பயன்படும் தாரை உருக்கி, விரலில் துணியைச் சுற்றிக் கொண்டு தாரில் தொட்டு முத்துமுத்தாக சுவர்களில் எழுதி வைப்பவர் சுற்று வட்டாரத்தில் ஒருவர்தான். அவர்… சுவரெழுத்து சுப்பையா!

பெண்கள் விமானம் ஓட்டுகிற காலத்தில் இந்தச் செய்தி உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தின் நிலை இதுதான்.

அவ்வளவு ஏன்? தொண்ணூறுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களின் கேலி, சமூகத்தின் கிண்டல்களை எதிர்கொண்டு சைக்கிள் ஓட்டுவதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தனர் பெண்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்றைய ஆட்சித் தலைவர் ஷீலாராணி சுங்கத் அவர்களின் தீவிர முயற்சியால், அறிவொளி இயக்கம் மூலமாக 1990-1992 காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர் என்பது நம்மில் பலரின் கவனத்தை ஈர்க்காத மிகப்பெரும் சாதனைதானே!

நன்றி: கவிஞர் யுகபாரதி ‘ஊஞ்சல் தேநீர்’ என்ற தொடர் கட்டுரையில் சுப்பையா பற்றி எழுதியுள்ளார்.

பின்குறிப்பு: வெ.ஆறுச்சாமி என்பவர் ‘சுவரெழுத்து சுப்பையா’ என்ற நூலை எழுதியுள்ளார். கோவை பெரியார் படிப்பக வெளியீடு.

– சுந்தரபுத்தன்

You might also like