மலரன்பனின் சாகித்திய விருதுபெற்ற ‘கோடிச்சேலை’ சிறுகதை தொகுதி சிங்கள மொழியில் ‘மினி சலுவ’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
ரஷ்யாவிற்கு ‘மெக்சிம் கோர்க்கி’ (marxism karki) போன்று மலையகத்துக்கு மலரன்பன் என்று சிரேஷ்ட எழுத்தாளர் தெனகம சிறிவர்தன குறிப்பிடுகிறார்.
‘ஆறுமுகம் மலரன்பன் மாவத்தை’ என்று அவர் வாழும் போதே வீதிக்கு பெயர் சூட்டி பெரும் கௌரவம் பெற்ற மாத்தளை மலரன்பன் எழுதிய ‘கோடிச்சேலை’ என்ற சிறுகதை தொகுப்பை தமிழ் மொழியில் புலமைமிக்க காலியைச் சேர்ந்த சரத்குமார ‘மினி சலுவ’ என்ற பெயரில் மொழிபெயர்த்து இருக்கின்றார்.

ஈழத்து முன்னணி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான மலரன்பனின் ‘கோடிச் சேலை’, ‘மினி சலுவ’ என சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதியாக,
செப்டம்பர் 27, 2025 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு காலியில் உள்ள கலுவெல்ல சர்வதேச பௌத்த மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1968 முதல் 1980 வரையிலான ஒரு தசாப்த காலத்தில் மலரன்பனால் எழுதப்பட்ட இந்த 12 சிறுகதைகள், பல்வேறு சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்தவையாகும்.
பிரதேச மற்றும் தேசிய அளவிலான விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளன.
மேலும் சமூகத்துக்கு நற்கருத்துகளை வழங்கிய இச் சிறுகதைகள், 1989 இல் ‘கோடிச்சேலை’ என்னும் பெயரில் வெளியிடப்பட்டு அரச இலக்கிய விருதையும் பெற்றுள்ளன.
உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களின் இருநூறு ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றில் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் துயரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த சிறுகதைகள்,
அவர்களின் அனுபவங்கள், உருவகங்கள், உருவக மொழியலங்காரம், சுற்றுச்சூழல் கதைகள் போன்றவற்றை உள்ளடக்கி,
அவரது சொந்த எளிமையான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய பாணியில், மனித அன்பு மற்றும் இரக்கத்துடன் எடுத்துச் செல்லப்படுகின்றது.

இதனால் வெறுப்பு, தீமை மற்றும் தேசிய முரண்பாடுகள் பக்க விளைவுகளாக சமூகத்தில் எழக்கூடாது என்ற எண்ணத்தில் தனது கருத்தை கவனமாக எழுத்தாளர் மலரன்பன் முன் வைத்துள்ளார்.
தோட்ட நிர்வாகத்தின் போது ஆங்கிலேயர்களின் இரக்கமற்ற ஆதிக்கமும், அவர்களுக்குப் பிறகு வந்த தோட்ட முதலாளிமார்களும்,
ஆதரவற்ற உழைக்கும் தோட்ட மக்களை அடிமைகளைப் போல ஒடுக்கும் கலாசாரத்தை முன்னெடுத்துச் சென்றனர், அதனை முன்பைவிட இன்னும் தீவிரமாகச் செயல்படுத்தினர்.
நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் கொடூரச் சுரண்டல்களுக்கும் சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பவாத மற்றும் ஊழல் மலிந்த அரசியல்வாதிகளின் பொறிகளுக்கும் இரையாகி வந்த தோட்டத் தொழிலாளர்கள், 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டனர்.
மலரன்பனின் சிறுகதைகள் இந்த சமூகப் பேரழிவுகளை மிக நுணுக்கமாக எடுத்துச் செல்கின்றன.
‘மினி சலுவ’ சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய சிரேஷ்ட எழுத்தாளர் எஸ்.ஜி. புஞ்சிஹேவா, மலரன்பன் தனது இலக்கிய வாழ்க்கை முழுவதும் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகளை எடுத்துரைத்த ஒருவராவார்.
எனவே, மலரன்பனின் இந்த சிறுகதைகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட சமூக அநீதிகளையும், அவற்றை அவர் தனது சிறுகதைகளின் மூலம் சமூகத்திற்குக் கொண்டு வரும் விதத்தையும் அவர் பாராட்டுகிறார்.

புஞ்சிஹேவாவை போன்று, சமூகநீதிகளை தன் பேனாவால் உலகுக்கு தந்த சிரேஷ்ட எழுத்தாளர் தெனகம சிறிவர்தனவும், ‘மினிசலுவ’ நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் பல நேர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.
ரஷ்யாவிற்கு ‘மெக்சிம் கோர்க்கி’ போன்று இலங்கை மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்கு மலரன்பன் என்று குறிப்பிடுகிறார்.
இந்தச் சிறுகதைத் தொகுதியின் மொழிபெயர்ப்பாளரான சரத்குமார தமிழ் மொழி மீது பற்றுமிக்கவர். கடுமையாக உழைக்கும், வாசிக்கும் மற்றும் ரசிகர் என்பதோடு, கலையம்சம் குறையாது மொழிபெயர்த்திருக்கின்றார்.
மலரன்பனின் மொழிப் பயன்பாட்டிற்கும் ஏற்ற மொழி நடையை சரத்குமார கொண்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது, மேலும் அவர் மலரன்பனை தனது ஆசிரியராகக் கருதுகிறார் என்பது அவரது எழுத்திலிருந்து தெளிவாகிறது.
நுண்கலைகளில் பட்டம் பெற்ற சரத்குமார, ஆசிரியர் ஆலோசகராகப் பணிபுரிகிறார். இயற்கை மற்றும் சமூக யதார்த்தங்களைப் படம்பிடித்து சிறுகதைகள் மூலம் அவற்றை மீண்டும் உருவாக்கும் திறமை அவருக்கு கைவந்த கலையாகும்.

தமிழ் – சிங்கள மொழி பெயர்ப்பாளர்களிடையே சரத்குமார முன்னிலை வகிக்கும் ஒரு எழுத்தாளராக, இலங்கை எழுத்துலகில் தமிழ் சிங்கள எழுத்தாளர்களிடையே தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதில் அவர் வகிக்கும் பங்கு மகத்தானது.
“கலையயொலி முத்தையா பிள்ளை ஞாபகார்த்தக் குழு 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட எனது ‘கொலுஷா’ என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதி
அரச இலக்கிய விருத்தினை பெற்றதோடு சர்வதேச ரீதியில் எனது எழுத்தாற்றலுக்கு கிடைத்த பெரும் கௌரவம்” என்று மலரன்பன் நன்றியோடு நினைவு கூறுகிறார்.
“சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலைக்கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கி கௌரவித்தது என் எழுத்துப் பணிகளுக்கு கிடைத்த பெரும் பேறாகும்” என்று நன்றியுடன் நினைவு கூறியது குறிப்பிடத்தக்கது.
– எச்.எச். விக்கிரமசிங்க
#இலங்கை #கோடிச்சேலை #ஆறுமுகம் #மலரன்பன் #மாவத்தை #சரத்குமார #அரசஇலக்கிய_விருது #எச்_எச்_விக்கிரமசிங்க
#மாத்தளை #காலி #கலுவெல்ல #தோட்டத்_தொழிலாளர்
#எஸ்_ஜி_புஞ்சிஹேவா #தெனகம_சிறிவர்தன #ரஷ்யா #மார்க்சிம்_கார்க்கி #சரத்குமார #கொலுஷா