பரிதி பதிப்பக அலுவலகத் திறப்பும் நூல்கள் வெளியீடும்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகிலுள்ள வக்கனம்பட்டியில் ‘பரிதி’ பதிப்பகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழாவும் புதிய நூல்கள் வெளியீட்டு விழாவும் செப்டம்பர் 14 ஆம் தேதி ஞாயிறன்று காலையில் நடைபெற்றது.

பதிப்பாளர் பரிதியின் குடும்பத்தினர் முன்னிலையில், புதிய அலுவலகத்தை, மிகச்சிறந்த கதை சொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லதுரை திறந்துவைத்தார்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்’, ‘தமிழகம்: பிரச்சனைக்குரிய முகங்கள்’, ‘கல்லூரிக் காலங்கள்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

மணாவின் ‘தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்’ என்ற நூலை பவா செல்லதுரை வெளியிட குளோபல் கனெக்ட் நிறுவனத் தலைமை அதிகாரி நவீன் பெற்றுக்கொண்டார்.

சுந்தரபுத்தனின் ‘கிராமத்து ரயில்’ நூலை ‘ஜேவி இன்ஜினியரிங்’ நிறுவனத் தலைவர் எஸ். உதயகுமார் பெற்றுக்கொண்டார்.

‘கல்லூரிக் காலங்கள்’ நூலை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கே. சி. எழிலரசன் வெளியிட சுந்தரபுத்தன் பெற்றுக்கொண்டார்.

அடுத்து ‘தமிழகம்: பிரச்னைக்குரிய முகங்கள்’ நூலும் வெளியிடப்பட்டது.

பவா செல்லதுரையின் ‘பவா சொன்ன கதைகள்’, டாக்டர் கவிதாவின் ‘நள்ளிரவு சூரியன்’, அ. சந்தான கிருஷ்ணனின் ‘குறள் கூறும் உளவியல்’ ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

வரவேற்புரை நிகழ்த்திய பதிப்பாளர் இளம்பரிதி, கடந்த பத்து ஆண்டுகளில் பரிதி பதிப்பகம் வளர்ந்த பயணத்தின் கதையைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தப் பயணத்தில் உடன் நின்ற பவா செல்லதுரை, ரவி சுப்பிரமணியன், மணா உள்ளிட்ட பல நண்பர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும் பேசிய அவர், “ஐம்பதாண்டுக்குப் பிறகு ஒன்றைத் துவங்குவது குறித்து வருத்தங்கள் இருக்கிறது.

ஆனால் – பணி ஓய்வுக்குப் பிறகு தனக்குப் பிடித்த ஒரு இசைக்கருவியை வாங்கி தன்விருப்பம்போல் வாசிக்கத் துவங்கும் ஒருவனைப்போல நான் வாசிக்கத் துவங்குகிறேன்.

என் மனதுக்கும் என் வாழ்வுக்கும் நெருக்கமான மனிதர்களால் இந்த விழா அவ்வளவு சிறப்பாகவும் மகிழ்வானதாகவும் இருந்தது. இதை சாத்தியப்படுத்திய ஒவ்வொருவருக்கும் என் அன்பும் நன்றியும்” என்றார்.

புதிய அலுவலகம் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவர் பற்றிய அனுபவங்களையும் அவர்கள் செய்த உதவியையும் நெகிழ்வுடன் சுட்டிக்காட்டிப் பேசினார்.

விழாவில் கவிஞர் ரவி சுப்பிரமணியன், வழக்கறிஞர் முத்தமிழ்ச் செல்வி, ஆசிரியர் ஸ்ரீவித்யா, மருத்துவர் விநோதினி, நா. பிரகாசம், எழுத்தாளர் நாராயணி கண்ணகி, நா. கோகிலன், சுசிலா படவட்டு, புஷ்பா நடராசன், கவிஞர் சோலைப்பிரியன், கவிஞர் வணவை தூரிகா, ரவி கோவிந்தராஜ், ஆசிரியர் பா. ஏசுராஜ் மற்றும் உள்ளூர்ப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

கவித்தமிழில் நிகழ்வை மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கினார் தமிழாசிரியர் பரிமளாதேவி.

– சுந்தரபுத்தன்

You might also like