வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது!

கவிஞர் சுபியின் நம்பிக்கை பதிவு

எழுத்து, புத்தகம், வாசிப்புனு என்னுடைய வேறொரு பரிமாணங்கள் என்னளவில் அதிகமான வீச்சோடு வெளிப்பட்ட காலம்.

வாழ்க்கைனு பார்த்தா இங்கே எழுத வரலனா மண்ட காஞ்சி செத்துருப்பேன்.

அவ்வளவு வலிகளைக் குடும்பம், நட்பு, உறவு, சொந்தங்கள், பொருளாதாரம், அரசியல் மற்றும் எல்லாவிதமான அரசியல், உடல் கஷ்டங்கள், மனக்கஷ்டங்கள்னு எங்கே திரும்பினாலும் ஒருசேர வச்சு அடிச்சு, தொவச்சு காயப் போட்டு தொங்கவிட்டு குற்றுயிராக்கி கண்ணீராறாக ஓடவிட்டு வேடிக்கை பார்த்த காலம்.

சிரிச்சே சாவடிச்சேன் அத்தனையும். எழுதியே கொட்டுனேன் அத்தனையும்.

இப்போ எல்லாவற்றிலும் இருந்து ஒரு சிறு துரும்பு போல பற்றிக் கொண்டு நீந்தி வெளிவர காப்பாத்துன எழுத்த தொடர்ச்சியான போராட்டங்களின் அயற்சியாலோ மீதியிருக்கும் வேலைகளாலோ அப்படியே எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் தெரியல. எழுதணும் எழுதணும். வெறித்தனமா எழுதணும்.

இன்னிக்கு? நான் உயிரோடு இருக்கேனா இவ்வளவுக்கு பிறகும்னு நானே என்னை பார்த்து அதிசயிக்கும் காலம். நான் இவ்வளவு வலிமையானவளானு என்னைக் கிள்ளி பாத்துகிட்ட காலம்.

முடக்கி முடக்கிப் போட்ட அத்தனை சூழல்களையும் உடைச்சு முட்டிமுட்டி வந்த காலம்.

வலிகள், கஷ்டங்கள், அடிகள்னு எதுவும் குறையல. ஆனால் திக்குத் தெரியாமல் நின்ற காலம்னு ஒண்ணு போய் திசை இருக்கு போ போ போ போ போ போ னு கண்ணுக்கே புலப்படாத எதோ ஒரு நம்பிக்கையை பற்றிக் கொண்டு சிரித்தே கடந்துவிடும் மனநிலை இந்த கஷ்டங்களால் கிடைச்சிருக்கு இந்த காலங்களில்.

ரொம்ப அதிகமான வலிமை உள்ள பெண்ணான என்னை அதிபயங்கர வலிமை உள்ள பெண்ணா மாற்றிய காலம்.

அன்பு பாசம், சுகம் துக்கம், மானம் மரியாதை, வெகுமானம் அவமானம், அழகு அசிங்கம் இப்படி நேர் எதிர்மறை எல்லாமே நம்ம மனம் உருவாக்கி வைத்த உணர்வுகள்.

நேர்மறையோ எதிர்மறையோ அந்தந்த நேரத்தில் கடந்து அத்தனை மாயைகளையும் ஒரு நேர்க்கோட்டில் வச்சு பாருன்னு உணர்த்திய காலம்.

அதனால் தான் இதுல எதை இழந்தாலும் இங்கே வந்த நம் வேலை முடியல. வாழ்வு இன்னும் மிச்சம் இருக்கிறதுனு பாசிட்டிவ் பயோ எழுதிக் கொண்டேன்.

அனுபவங்கள் அனுபவங்கள் அனுபவங்கள் அவ்வளவு அனுபவங்கள். இத்தனையும் மீறி ஒரு நிறைவு இருக்கு.

இருந்த, கொடுக்கப்பட்ட அத்தனை பாத்திரங்களையும் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சார்ந்த அனைவருக்கும் அவரவருக்கு மனம் நிறையும் படி எல்லாம் செஞ்சிட்டேன்… செஞ்சிட்டு இருக்கேன்.

அப்பறம் எதுக்கு இந்த வாழ்வைக் கண்டு பயப்படணும்.

இந்த வாழ்வை நேருக்கு நேராக திமிரோடு நின்று கேட்பேன்… உன்னால் என்ன செய்ய முடியும் ஒரு சாக்காடு தவிர?

வாழ்க்கை பற்றி மனிதர்கள் பற்றி அணுகுமுறை பற்றி இப்படி எல்லாவற்றிலும் பார்வை மொத்தமா சுத்தமா மாறியிருக்கு.

எல்லாத்தையும் இறக்கி முடிச்சிட்டு என்னிக்கு ஆடறது. அத்தனையும் வச்சிகிட்டே ஆடணும் அதான் ஆட்டம்.‌ ஆடுவேன். Yes. I’m a Warrior.

You might also like