கட்சிகள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய நேரம்!

‘மாற்றம் ஏற்படாதா?’ என்ற ஏக்கத்தில் மக்கள் வாக்களிக்கிறார்கள்! ஆனால், தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றங்களையே மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை, நேபாளம், வங்க தேசம்..போன்றவற்றின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்திய செய்தி என்ன..? அலசுவோம்.

****

மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மானுடம் வந்த வரலாற்றை சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் நமக்கு ஒரு செய்தி புலப்படும்.

மன்னராட்சி காலத்தில் மக்கள் படும் துன்பங்களுக்கு தீர்வுகள் கிடைப்பதற்குப் பதில் வேதனைகளே அதிகரித்தன.

ஆனால், மக்களை அடக்கியாள மன்னன் வைத்திருந்த ஒற்றர்கள் வரை அனைவரும் மன்னனுக்கு சேவகம் செய்து தன் பிழைப்பைத் தான் பார்த்துக் கொண்டார்களே தவிர, மன்னனிடம் மக்கள் படுகின்ற துன்பங்களை எடுத்துக் கூறுவதில்லை. அதன் விளைவு தான் மன்னர்கள் தங்கள் ஆட்சியை இழக்க வேண்டி இருந்தது.

அதிலிருந்து பிறந்தது தான் மக்களாட்சி. மக்களின் மனம் கொதிநிலையில் ஒரு கட்டத்தை அடைகின்றபோது அது புரட்சியாக வெடிக்கும்.

மன்னர்கள் தாங்கள் வீழப் போவதைத் தெரியாமல் தங்களின் பரிவாரங்கள் கூறுவதைக் கேட்டு சுகத்தில் மூழ்கி இருப்பார்கள்.

ஆனால், ஒரு நாள் கொதி நிலையில் மக்கள் புரட்சி வெடிக்கும் போது ஆட்சியாளர்கள் காணாமல் போய் விடுவர்.

பரிவாரங்கள் அடுத்த ஆட்சிக்கு பாதுகாப்புக் கொடுக்க தன்னை மாற்றிக் கொள்ளும், இது தான் வரலாறு.

இன்று மக்களாட்சியில் வாழ்கிறோம். மக்களுக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி.

இதில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் இருந்து, சராசரி மக்கள் வாழ்க்கையை தாங்களும் வாழ்ந்து மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு மக்களுக்காக தாங்கள் செயல்படுவதாக மக்கள் உணர வேண்டும்.

அப்படி மக்கள் உணரும் போது தான் அது மக்களுக்கான ஆட்சி.

மக்கள் எவ்வளவு சிரமங்களைச் சந்தித்தாலும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடன் இணைந்திருக்கும் போது, தங்கள் பிரதிநிதி தங்களுக்கானவர் என உணர்ந்து, பிரச்சினைகளைச் சகித்துக் கொள்வார்கள்.

மக்களின் அதிகாரத்தைப் பெற்று தங்கள் சுகபோக வாழ்க்கையை மன்னர்கள் வாழ்ந்தது போல் வாழ ஆரம்பித்து விட்டால், மக்கள் அந்நியப்பட்டுப் போவார்கள். அது உச்சம் பெற்றால் மக்கள் கொதி நிலைக்கு வந்து விடுவார்கள்.

கொதி நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை மக்கள்!

மக்களாட்சியிலும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் வாழ்நிலைச் சூழல், மனநிலை, மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் கொண்டு சென்று தீர்ப்பதற்குப் பதிலாக மக்களை மேய்ப்பதற்குத் தான் பரிவாரங்கள் முயலுவார்கள்.

ஆட்சியில் இருப்போரை மகிழ்விக்கவே அப்படிச் செய்வார்கள்.

அந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் பதவி தரும் சுகம், புகழ், பணம் அனைத்தும் மக்களை துச்சமென மதிக்கும் மனோபாவத்திற்கு வந்து விடுவார்கள்.

தன்னிடம் இருக்கும் அதிகாரத்தையும், பணத்தையும் வைத்து எதையும் நாம் சமாளிக்கலாம் என்ற உளவியலுக்கு வந்து விடுவார்கள்.

இந்த நிலை உச்சம் பெறும் போது மக்கள் கொதி நிலைக்கு வந்து விடுகின்றனர்.

சிகப்பு குழல் விளக்கு காருக்கு மேல் வைத்து அந்தக் காரில் பயணிக்கும் போது தான் சகல அதிகாரத்தையும் பெற்ற ஒரு உளவியல் வந்து விடும்.

அதே போல் தான் செல்லும் காருக்குப் பின்னும் முன்னும் கார் பவணி வரும் போது தான் மிகப்பெரும் ஆளுமை என்ற உணர்விற்கு வந்து விடுகின்றனர்.

இந்த பதவி சுகம் மக்களை மறக்க வைக்கும். மக்களை அந்நியப்படுத்தும்.

மக்கள் தரும் வரிப்பணத்தில் எப்படி அரண்மணையைக் கட்டி சுகபோக வாழ்க்கையை மன்னர்கள் வாழ்ந்தனரோ, அதே போல் தான் இன்று மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

இதில் என்ன வேடிக்கை, வினோதம் என்றால், அவர்கள் உழைப்புக்கு ஊதியம் என்று வழங்கப்படுகிறது. பல சலுகைகளும் வழங்கப்படுகிறது.

அதையும் கடந்து முறைகேடான வழியில் செல்வம் ஈட்டி இவர்களும், இவர்களின் குடும்பமும், கட்சிக்காரர்களும் அதிகாரத்தை வைத்து சுகபோக வாழ்க்கை அனுபவிப்பது மக்களை எரிச்சல் அடையச் செய்கிறது.

உலகில் செல்வச் செழிப்பில், தரமான வாழ்க்கை வாழும் நாட்டில் கூட இவ்வளவு வசதிகள், வாய்ப்புக்கள் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடையாது.

ஏழைகள் அதிக எண்ணிக்கையில் வாழும் நம் நாட்டில் இவ்வளவு சலுகைகளைச் செய்து கொண்ட போதும், ஊழலில் ஈடுபடுவது ஒரு பெரும் கேடு.

இந்த ஊழல் மக்களைச் சுரண்டுகின்றது, மக்களாட்சியின் விரிவாக்கத்திற்கு தடை போடுகின்றது, ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு தடையாக இருக்கின்றது.

அதே நேரத்தில் மக்களை அறியாமையில் வைத்து, தேர்தலையே மக்களாட்சியாக கட்டமைத்துச் செயல்பட்டதில், மக்கள் பிரதிநிதிகளின் வாழ்க்கை மேம்பட்டதை – கட்சிக்காரர்கள் பிழைப்பு நடத்துவதைப் – பார்த்து மக்களுக்கு கோபம் வருகிறது.

மக்களிடம் வாக்கைப் பெற கட்சிகள், பிரதிநிதிகள் பணத்தை அள்ளி இறைத்தும் கூட, பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.

காரணம் மக்கள் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும், சித்தாந்தங்கள் மீதும் நம்பிக்கை இழந்தவர்களாக மாறிவிட்டனர்.

இந்தச் சூழல் மாறாதா? என்ற ஏக்கம் பெரும்பான்மை மக்களிடம் இருந்தாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான் அது ஒரு மாபெரும் சக்தியாக வெளிப்படுகிறது.

முதலில் அப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டதை நாம் வங்காள தேசத்தில் பார்த்தோம்.

தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்பட்ட அரசு தூக்கி எறியப்பட்டது. தலைவர்கள் தாக்கப்பட்டனர்.

இலங்கையில் அந்த மக்கள் சீற்றத்தைப் பார்த்தோம்.

அடுத்து நேபாளத்தில் ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்து கொந்தளித்த ஜென் ஜெட் இளைய தலைமுறையைப் பார்த்தோம்.

இந்த மூன்று நாடுகளிலும் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் எந்தவித மனிதாபிமானக் கண்ணோட்டமும் இன்றி, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கே சிரமப்படும் போது ராஜ வாழ்க்கை வாழ்ந்தனர்.

அந்த ராஜ வாழ்க்கை வாழ்ந்த மாளிகைகளை மக்கள் தீயிட்டு கொளுத்தினார்கள்..!

இதை சுலபமாக புரிய வைக்க வேண்டுமென்றால், நமக்கு அண்டை நாடான இலங்கையில் நடந்துவரும் மாற்றங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராடி ஆட்சியாளர்கள் வெளிநாட்டுக்கு ஓடினர்.

புதிதாக வந்த அனுர குமார திசாநாயக்க எந்த பெரிய கட்சியையும் கூட்டணி சேர்த்து வெற்றி பெறவில்லை.

சிறிய சிறிய குடிமைச் சமூக அமைப்புக்களாகச் செயல்பட்ட இயக்கங்களை இணைத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தான் முதலில் தன் அதிபர் வாழ்க்கைக்குள் கிடைத்த சுகபோக வாழ்க்கைக்கான வசதிகளைத் துறந்தார்.

அடுத்து அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் உபயோகித்து வந்த ஆடம்பர சொகுசுக் கார்களை பறிமுதல் செய்தார். எளிய வாழ்க்கை வாழ அனைவரையும் பழக்கிவிட்டார்.

அவர்களுக்கு இருந்த சிறப்புச் சலுகைகளை எடுத்து விட்டார். அவர்களுக்கு கிடைத்த பென்ஷனையும் நிறுத்தி விட்டார்.

இலங்கை அனைவருக்குமான நாடு, எவர் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற சூழலைக் கொண்டு வந்துவிட்டார்.

மக்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டார். தமிழ்ப் பகுதியில் குழந்தைகள் சிங்களம் படிக்க வேண்டும், சிங்களப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும்.

அரசாங்கத்தில் நிகழும் விழாக்கள் எளிய விழாக்களாகவே நடத்தப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார். ஊழல் செய்த அரசியல்வாதிகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நம் ஊரில் ஊழல், ஊழல் என்று தேர்தலுக்குத் தேர்தல் கத்த முடிந்ததே தவிர, ஊழலை விரட்ட முடியவில்லை. அங்கு ஊழல் செய்தவர்களை மூச்சற்ற நிலைக்கு அவர் கொண்டு வந்து விட்டார்.

மக்கள் பல்லாண்டு காலமாக கடவுச் சீட்டுப் பெற கொழும்பு செல்ல வேண்டி இருந்தது. அதை யாழ்பாணத்தில் கொண்டுவர பலமுறை போராடியுள்ளனர். இவர் வந்தவுடன் உடனே அதை யாழ்பாணத்திற்குக் கொண்டு வந்தார்.

அந்தக் கட்டிடம் திறக்கும் போது கூட தன் பெயர் அந்தக் கல்வெட்டில் இடம் பெறக் கூடாது, அதிபர் என்று மட்டுமே பொறிக்கப்பட வேண்டும் என்று கல்வெட்டை மாற்றியது ஒரு பெரு மாற்றத்திற்கான அறிகுறி.

இவற்றையெல்லாம் நம் அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று மக்கள் பிரதிநிதிகளாக கோடீஸ்வரர்களால்தான் வாழமுடியும் என்றபோது, இவர்களுக்கு ஏன் இவ்வளவு சலுகை. இலங்கையில் உள்ளதுபோல் ஏன் குறைத்துக் கொள்ளக் கூடாது.

இன்று முதல் தேவை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு, சாதாரண மக்கள் வாழும் வாழ்க்கைக்கு திரும்பி, எளிய வாழ்க்கையை கட்டமைப்பது மக்களுடன் இணைந்திருப்பது,

தன் செயல்கள் மூலம் மக்களை தன்னுடன் இணைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் தான் நம் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது. இதுதான் இன்றையத் தேவை.

***

கட்டுரையாளர்; க. பழனித்துரை

பேராசிரியர், எழுத்தாளர்,

காந்திய செயற்பாட்டாளர்

நன்றி: அறம் இணைய இதழ்

You might also like