“எழுத்து சோறு போடும் என்று என்னைப் போல் நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே”
புதுமைப்பித்தன் தனது கடைசி காலத்தில் நெருங்கிப் பழகிய தொ.மு.சி. ரகுநாதனிடம் சொன்னார்.
“மணியாடர் முதலில் வருமா மரணம் முதலில் வருமா” என்று வருந்தி எழுதிய புதுமைப்பித்தன் பற்றிய இந்தச் செய்தியை சென்னை LLA building இல் இலக்கியக் கூட்டம் முடித்து அண்ணா சாலையில் சிதம்பரம் ரகுநாதனை இரவு பேருந்தில் ஏற்றிவிடச் சென்றபோது பி.யு.சி மாணவனாகிய என்னிடம் ரகுநாதன் சொன்னார்.
போதாக்குறைக்கு கவிஞர் கம்பதாசன் போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் தங்களின் கடைசி காலத்தில் வறுமையில் வாடி வதங்கியதை நான் நேரில் பார்த்து அதிர்ச்சியில் மனதுக்குள் அழுது இருக்கிறேன்.
இதே போன்ற நேரத்தில் தான் சிதம்பர ரகுநாதன், புதுமைப்பித்தன் கடைசி காலத்தில் தன்னிடம் சொன்னதை, போகிற போக்கில் சிறுவனாகிய என்னிடம் சொன்னார்.
இவை என் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம். நான் படிக்க ஆசைப்படும் புத்தகங்களை வாங்குவதற்காகவாவது பணம் சம்பாதிக்கும் வேலைக்குப் போக வேண்டியது மிகவும் அவசியம் என்று புரிந்து கொண்டேன்.
பணம் சம்பாதிப்பதற்கு எழுத்தையும் ஓவியத்தையும் நம்பி இருக்கக் கூடாது என்றும் முடிவு செய்தேன்.
வேறு ஒரு வழியில் பணம் சம்பாதித்துக் கொண்டு எழுத்தில் நான் ஈடுபட வேண்டும் என்று சிறுவனாக இருக்கும்போதே எண்ணம் வந்துவிட்டது. இதனால் பணம் சம்பாதிப்பதற்காக
வங்கி வேலைக்குச் சென்றேன்.
ஆனாலும் “முழு நேரத்தையும் எழுத்துக்காக அர்ப்பணித்துக் கொள்” என்று எனக்குள் ஒரு குரல் சதா சொல்லிக் கொண்டே இருந்தது.
பல நாள் காலையில் எழுந்து எழுதிக் கொண்டிருக்கும் நான் ஆபீசுக்குப் போகாமலும் ஆபீசுக்கு லீவு சொல்லாமலும் அப்படியே நாள் முழுவதும் இரவு வரை எழுதிக் கொண்டே இருந்து விடுவேன். மறுநாள் அலுவலகத்தில் திட்டு வாங்குவேன்.
இதனால் 26 ஆண்டுகளுக்கு முன் நான் எனது வங்கி வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளன் ஆனேன். இதன் பிறகு தான் என்னைப் பற்றிய ஒரு சுய பச்சாதாபம் என்னை விட்டு நீங்கியது.
“நான் ஏன் எழுதுகிறேன் என்று யாராவது கேட்டால் “வாழ்க்கை என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்கிற நிலையை உருவாக்குகிறது. அதனால்தான் எழுதுகிறேன்.” என்பதுதான் எனது ஒரே பதில்.
நான் பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்னால் ‘மணிக்கொடி’ எனும் ஒரு இதழில் ஜனரஞ்சகத்துக்கு எதிர்ப்பான வாதங்களை புதுமைப்பித்தன் மிகத் தீவிரமாக முன் வைத்தார்.
அப்போது ஜனரஞ்சக எழுத்து, மணிக்கொடி எழுத்து என்று இரண்டாக ரகம் பிரிந்தது.
நான் போயஸ் கார்டன் பகுதியில் வாழ்ந்த போது என் அம்மாவின் தோழிகள் துப்பறியும் கதைகளை “புற்றீசல்களைக் கோழிகள் விழுங்குவது போல” விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த காலத்தில் நாங்கள் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து “Elite literary club” என்ற ஒன்றை உருவாக்கி என் நண்பன் சுப்ரமணியம் வீட்டிலும் என் வீட்டிலும் இருந்த மாடியில் இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதிப் படித்துக் கொண்டிருந்தோம்.
உயர்ந்த இலக்கியம் பற்றிய தேடல் எனக்குத் தொடங்கியிருந்தது.
அப்போதுதான் என் நண்பன் சுப்பிரமணியத்தின் அப்பா சங்கரன் (ஆங்கில மெயில் பத்திரிகையில் வேலை செய்தவர்) புதுமைப்பித்தன் என்ற ஒருவர் பற்றி எங்களுக்குக் கூறினார்.
புதுமைப்பித்தன் நையாண்டியான கவிதைகளை அவர் தன் கையெழுத்தில் எழுதி வைத்திருந்ததை எனக்குப் படிக்கக் கொடுத்தார்.
“பேனா குடை பிடிக்கும் மூனா அருணாச்சலமே” எனும் கவிதையைப் படித்து புதுமைப்பித்தனின் எழுத்துக்களைத் தேடி வாசிக்கும் பைத்தியம் ஆனேன்.
புதுமைப்பித்தனை வாசிக்க வாசிக்க, “அறிவு இகந்த ஒரு வெளியில் தன்னை நிறுத்திக் கொண்டு அறிவார்ந்ததாகச் சொல்லப்படுகிற எதார்த்த வாழ்க்கையை அவதானிக்க முயன்றவர் புதுமைப்பித்தன்” என்று விமர்சகர் ராஜ் கௌதமன் தனது ’புதுமைப்பித்தன் எனும் ஒரு பிரம்ம ராட்சஸ்’ நூலில் சொல்லி இருப்பவை எவ்வளவு உண்மை என்று புரிந்து கொண்டேன்.
எதையும் விமர்சனப் பார்வையுடன் அணுகுவது எப்படி என்பதை புதுமைப்பித்தனின் படைப்புகள் மூலமாகக் கற்றுக்கொண்டேன்.
– கலை விமர்சகர் இந்திரன் முகநூல் பதிவு