மனதின் குரல்:
“நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்“ என்று பாட்ஷா படத்தில் ரஜினி பாடுவதாக அமைந்த பாடல் மிகவும் பிரபலம்.
தமிழகத்தின் எந்த ஒரு பெரு நகரங்களிலும் ஆட்டோக்கள் சாதாரண எளிய மக்களின் வாகனமாக பயன்படுத்தப்படுகின்றன.
நன்கு படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள்கூட ஆட்டோ ஓட்டுநராகி இருக்கிறார்கள்.
அதிலும் ஓலா, ரேபிடோ போன்ற ஆப் மூலம் ஆட்டோக்களை புக் பண்ணுவது அதிகரித்த பிறகு இன்னும் கூடுதலாக ஆட்டோ பயன்பாடு நீடித்து வருகிறது.
இதற்கெல்லாம் மேலாக எந்த ஆட்களையும் பயன்படுத்தாமல் வாய் மூலமாகவே தனது கட்டணத்தைத் தீர்மானித்து அல்லது பேரம் பேசி பயணிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஏராளமாகவே இங்கிருக்கிறார்கள்.
பெட்ரோல் போன்ற எரிபொருட்களை நம்பி இயங்கும் ஆட்டோக்கள் ஒருபுறம் இருந்தாலும், மின்சார சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் மிகவும் சிறு அளவிலேயே இருக்கின்றன.
இந்த நிலையில், கேஸ் மூலமாக இயங்கும் ஆட்டோக்களே தமிழகத்தில் தற்போது அதிகமாக இருக்கின்றன.
எல்.பி.ஜி கேஸ் மூலமாக இயங்கும் ஆட்டோக்கள் மட்டும் தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேல் இருக்கின்றன.
மேற்காசியப் போர் மூண்டு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தே கேஸ் கிடைப்பதும் சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது.
மிக அண்மையில் எல்பிஜி கேஸ்-க்கான தட்டுப்பாடு அதிகரித்த நிலையில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், எல்பிஜிக்கான பல பங்க்-குகள் இயங்க முடியாத நிலைக்குப் போய்விட்டன.
குறிப்பிட்ட சில பங்க்-குகளுக்கு மட்டுமே கேஸ் போடுவதால், மிக நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் பல மணி நேரம் காத்திருப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எல்பிஜி கேஸ் விலையும் சற்றுக் கூடிய நிலையில், தற்போது நிலவும் தட்டுப்பாடு, ஆட்டோ ஓட்டுநர்களின் இயல்பான வாழ்க்கையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்டோவில் பயணிக்க வரும் பயணிகளிடமும் கூடுதல் கட்டணத்தைக் கேட்க முடியாத பரிதவிப்பையும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பார்க்க முடிகிறது.
ஏற்கனவே எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பொறுத்தப்பட்டிருந்தாலும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாற்றியமைக்கப்பட்ட அந்த மீட்டர்கள் அதற்கு பிறகு, இயங்காத நிலைக்குப் போய்விட்டன.
மீட்டர் கட்டணமும் மற்ற மாநிலங்களைப் போல கால சூழ்நிலைக்கேற்ப இங்கு மாற்றியமைக்கப்படவில்லை.
அண்டை மாநிலங்களான கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஆட்டோக்கள் மீட்டருடன் ஓடிக் கொண்டிருக்கையில், தமிழ்நாட்டில் மட்டும் மீட்டர்கள் இயங்காத நிலையில், ஆட்டோக்கள் இயங்குவதற்கு யார் பொறுப்பு?
பல போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் பலமுறை ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவதாக உறுதியளித்தும் அந்த உறுதிமொழிகள் யாவும் நடைமுறைக்கு வரவில்லை.
அப்படி வராததற்கு என்ன காரணம்?
இதனால், பாதிக்கப்படுவது ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும்தான்.
தற்போது, மேற்காசியப் போர் நீடித்துவரும் நிலையில், எல்பிஜி கேஸ்-க்கான விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அதை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்னதான் செய்வார்கள்?
– எஸ். சுல்தான் முகமது.