விடுதலையைச் சிந்திக்க ‘டெட்’ தேர்வுகள் உதவுமா?

கவிஞர் கரிகாலன் கேள்வி

பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறார்கள். இப்படி கூறியவர்கள் எதை ‘கற்றல்’ என்றார்கள். கற்றவர்களை சான்றோர்கள் என்கின்றன நமது இலக்கியங்கள். அவர்கள் ‘எதைக் கற்றிருந்தார்கள்?’

சனநாயகம், சமத்துவம், சுதந்திரம் போன்ற சிந்தனைகள் தமிழ் நிலத்தில் வருவதற்கு முன் கற்றல் நிகழும் இடம் என்பது கோவில்கள், மடங்களாக இருந்தன.

இங்கு கற்றல் என்பது செய்யுள்களை ஓதுவது கற்றல் உரிமை ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாதியின் பெயரால், பாலினத்தின் பெயரால் மறுக்கப்பட்ட நிலையிருந்தது.

அவ்வாறு கோவில்களில், மடங்களில், திண்ணைப் பள்ளிகளில் கல்வி என வழங்கப்பட்டவை பெரும்பாலும் மொழி இலக்கணங்கள், பக்தி இலக்கியங்கள், நிலவுடமைக் கால அற இலக்கியங்கள்.

இத்தகைய பக்தி இலக்கியங்கள் வாயிலாக, அற இலக்கியங்கள் வாயிலாக, உருவானவையே தமிழ் பண்பாட்டு விழுமியங்கள். ஆகவே கல்வி என்பது உயர்வானது, அதைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தெய்வத்துக்கு இணையானவர்கள், நூலில், செய்யுளில், கூறப்பட்ட கருத்துக்கள் உயர்ந்தவை என்கிற கருத்தேற்றம் சமூகத்தில் மேலிருந்து கீழாக உருவாக்கப்பட்டவை.

இத்தகைய கல்வியின் வாயிலாக சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதிகளின் உருவாக்கம், மத அதிகாரம், பெண் அடிமை போன்றவை நியாயப்படுத்தப்பட்டன. ஆசிரியர் என்கிற வார்த்தை ‘ஆசு + இரியர்’ என உருவானது. மனிதர்கள் குற்றமுடையவர்கள். அதைக் களைய ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார் என்பது பழமையான சிந்தனை. இது கற்றுக்கொள்ளும் இயல்புடையவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்குவது.

குரு என்கிற சொல் புனிதத் தன்மைஉடையது. புனிதத்தன்மை உடையவர்களிடமிருந்து கிடைப்பது பிரசாதமாக இருக்கலாம். கல்வியாகாது. ஆசிரியர் என்பது சற்றே நவீன வழக்கு. இன்று ஆசிரியர் என்பவர் facilitater, guide, co ordinater,என்றே அணுகப்படுகிறார். அவர் மேல் புனிதச் சிலுவைகளில்லை. ஆகவே ஆசிரியர்களுக்கு புனித மதிப்பீடுகள் தேவையில்லை.

புத்தகங்களை வேதமாக எண்ணுவதும் பழைய சிந்தனை மரபு. பைத்தியக் காரர்களிடமும் கற்றுக்கொள்ள விசயங்கள் இருக்கவே செய்கின்றன. மழையிடம், தாவரங்களிடம், விலங்குகளிடம், பறவைகளிடம் நதிகளிடம் மனிதர்கள் கற்கப் பாடங்களுண்டு.

நிறைய முறை பாடப்புத்தகங்களின் பொய்களை வைத்துக்கொண்டு நான் தடுமாறியதுண்டு. மிகச் சாதாரண செய்யுள்களை மனப்பாடம் செய்யச் சொல்லி பிள்ளைகளை வதைக்கிறோமே என வருத்தப்பட்டதும் உண்டு.

முதலாம் பானிப்பட்டு போரும் பாஸ்டன் டீ பார்ட்டியும் எந்த ஆண்டு நடந்தது என்பதா முக்கியம்? அவை ஏன் நடந்தன? மாணவனைச் சிந்திக்கவைப்பதல்லவா முக்கியம். ஓராயிரம் ஹிட்லர்களை முசோலினிகளை உலகம் சுடச்சுட சந்திக்கும்போது மம்மிக்குள்ளிருக்கும் சர்வாதிகாரிகளை பேசியே மதிப்பெண் போடுவது சரியா?

அதைதான் நமது ஆசிரியர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அரசாங்கம், பள்ளிக்கூடங்களை மூடும் நிலை. தனியார் பள்ளிகளிலோ ஒரு அடிமை இன்னொரு அடிமையைத் தயாரிக்கும் நிலை. பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கும் ‘டெட் தேர்வு’ என்கிறது உச்சநீதிமன்றம். இதன் தருக்கத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கும் பெற்றோரிடம் fertility test எடுக்கச் சொல்வதுபோல் இருக்கிறது. நீட் வருவதற்கு முன் எம்.பி.பி.எஸ் படித்து பணி செய்யும் மருத்துவரை நீட் எழுதச் சொல்வதுபோல் இருக்கிறது.

சிறந்த ஆசிரியர்களை உருவாக்க உச்சநீதி மன்றம் விரும்பினால், ஆசிரியர் பயிற்சியை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கக்கூடாது என அது அரசுக்கு அழுத்தம் தரலாம்.

நல்ல ஆசிரியர் என்பவர் கணிதத்திலோ, அறிவியலிலோ, சமூகவியலிலோ, மொழியிலோ மட்டும் விற்பன்னராக இருந்தால் போதாது. ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்குவதில் நாட்டமுடையவராக, மாந்தரின் விடுதலையைச் சிந்திப்பவராக இருக்க வேண்டும். அப்படி விடுதலையைச் சிந்திக்க இத்தகு ‘டெட்’ தேர்வுகள் உதவுமா? மானுட அக்கறையோடு பணியாற்றும் நவீன ஆசிரியர்கள் அனைவரையும் இத்தருணத்தில் வாழ்த்துவோம்.

You might also like